Tuesday, October 25, 2011

மனித நேய மேயர் சைதை துரைசாமி முதலில் செய்ய வேண்டியது என்ன?


சென்னையில் போர்க்கால அடிப்படையில் குப்பைகள் அகற்றப்படும்: மேயர் சைதை துரைசாமி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வேலைகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் அனுமதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற மஸ்டர் ரோல் ஊழலில் மாட்டிக் கொள்ளாதவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. அவர்கள் கூட இந்தப் பிரச்சினையை முறையாகக் கையாள்வதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். ஒப்பந்த முறையை அனுமதித்துவிட்டுப் பின்னர் சம்பள உயர்வு, நிரந்தரமாக்கல் போராட்டங்கள் கேலிக் கூத்தல்லவா?

உதாரணத்திற்கு ஒன்று. சென்னை மாநகராட்சியில் நிரந்தரப் பணியாளர்களாகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான சகல உரிமைகளும் உண்டு. ஆனால், அதே வேலை பார்க்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, ஒப்பந்ததாரர் வழங்கும் தொகை மட்டுமே உண்டு. ஆளாளுக்கு வேறுபடக்கூடும்.

தற்பொழுது கூட, ஒப்பந்ததாரர் கீழ்ப் பணிபுரியும் சென்னை மாநகரத் துப்புரவுப் பணியாளர்கள் போனஸ் கோரிக்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நிரந்த வேலை கேட்டுப் போராட வேண்டியவர்கள் தற்காலிக நிவாரணம் வேண்டிப் போராடுவது வேதனையிலும் வேதனை.

எனவே, தாங்கள் இந்த நிலையை மாற்றிடல் வேண்டும். ஒப்பந்த முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தொகுப்பூதிய அடிபடையில் அவர்களை சென்னை மாநகராட்சியின் நேரடி ஊழியர்களக்கிட வேண்டும். காலப்போக்கில் நிரந்தர ஊழியராக்கிட முடியும். ஒப்பந்தக்காரர்களுக்கு அள்ளிக் கொடுப்பதை சாமான்யர்களுக்குப் பிரித்துக் கொடுங்கள். புதுமைக்காரர் என்று மானுடம் போற்றும்.

சென்னை மாநகராட்சியில் மட்டுமல்ல அரசு அலுவலகங்கள் அனைத்திலும் சம்பளப் பட்டியல் தயாரிக்கும் வேலையை உரிய விதி முறைகளுடனும் பணியாளர் எடுக்கப்பட்ட விடுப்பு விபரங்களுடனும் சிறந்த கணினி நிறுவனத்திடம் ஒப்பந்த முறையில் கொடுத்துவிட்டால் பலர் வேலை இழப்பர். எனவே, ஒப்பந்த முறையே இல்லாத சென்னை மாநகராட்சியை உருவாக்கிக் காட்ட வேண்டும். ஒப்பந்த முறை நீக்கப்பட்டால் ஊழலில் பெரும்பகுதி காணாமற் போகும்.

எனவே, மனித நேய ஐ.ஏ.எஸ். அகாடமி மூலம் இந்தியாவிலேயே அதிரடிப் புரட்சி நடத்திவரும் சைதை துரைசாமி அவர்கள் ஒப்பந்த முறையே இல்லாமல் செயல்படும் மாநகராட்சியாக சென்னை மாநகராட்சியை மாற்றிக் காட்ட வேண்டும். வேலை இல்லாப் பட்டதாரிக்ள், சேவை நெஞ்சம் கொண்ட இளஞர்கள், பணி ஓய்வு பெற்ற வல்லுநர்கள் எல்லோரையும் முறையாகத் திட்டமிட்டுப் பயன் படுத்திக் கொண்டால் போதும். நிச்சயம் முடியும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மதத் தலைவர்களையும், வணிகர் நல் அமைப்புக்களையும் கொண்டதோர் குழுவினை உருவாக்குங்கள். மனிதர் அறம் என்பது போன்ற பெயர் சூட்டுங்கள். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் மதிய உணவிடும் பொறுப்பினை அந்த அமைப்பு ஏற்றுக்கொள்ளும். அரசுச் செலவு குறையும். ஓரிரு ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திக் காட்டியபின் தமிழகம் முழுவதும் விரிவடையும். சுருக்கமாகச் சொன்னால் அந்தந்தப்பகுதியினர் ஆங்காங்குள்ள பளிகளுக்காகும் செலவினை நேரடியாகவே விரும்பி ஏற்றுக் கொள்வர்.

மதிய உணவைத் தமிழகத்தில் முதல் முதலில் போட்டவர், எஸ்.டி.நாயகம். ஊர்: குலசேகரபட்டினம். உறுதி செய்து கொள்ள அணுகவேண்டிய இடம்: சென்னை வெங்கடநாராயண சாலையில் உள்ள தியாகராயநகர் ஆண்கள்/ பெண்கள் மேல் நிலைப்பள்ளி. பெரியாரின் வலக்கரமாகத் திகழ்ந்த குடும்பம். அவரது மரணத்திற்கு விடுதலை அலுவலகம் விடுமுறை விட்டது வரலாற்று உண்மை. எஸ்.டி.நாயகம் பற்றிச் சுருக்கமாகச் சொன்னால் அன்றைய சைதை துரைசாமி. நிறைய நல்ல செய்திகள் உள்ளன.

சென்னை மக்கள் கட்சிக்கும் அப்பாற்பட்டுத் தங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். மெய்யான புரட்சிக்காரராகச் சாதனை படைத்து, மக்களின் தோழராய்த் திகழ்வீர்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். வாழ்த்துகளுடன்,

rssairam99@gmail.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.