Thursday, September 1, 2011

பிரபாகரன் விரும்பி அழைத்து ஆலோசனை கேட்டவர் எழுதிய புத்தகம்.

தாமிரவருணியை முன்வைத்து, ” நதிநீர்ப் பிரச்சினைகளில் சமூகப் பொருளாதாரப் பின்னணி” என்று ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.. தமிழக அரசின் பொதுப்பணித் துறையில்34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். தமிழகம் முழுவதற்குமான மணல் மேலாண்மைப் பதவியை ஏற்றுத்தான் தீரவேண்டுமென்று அரசு வற்புறுத்தியபோது, பதவி உயர்வு வேண்டாம் என்று தலைமைப் பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஊழல் மலிந்த மணல் கொள்ளைப் பிரிவில் பணியாற்ற வேண்டாம் என்பதே அவரது நோக்கம்.

சாயத் தொழிற்சாலைகளால் நொய்யல், அமராவதி ஆறுகளில்ஏற்படும் பாதிப்புகளைக் களைய ஆலோசனை வழங்குவதற்காக சென்னை உயர்நீதி மன்றம் அமைத்த வல்லுநர் குழுவில் இவரும் ஒருவர். அக்குழுவில் இவரது பங்களிப்பு கணிசமானது. நீர்நிலைகள் பாதுகாப்பு விஷயத்திலும் மணல் கொள்ளைக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தார்

தமிழக பாசன வரலாறு, பெரியாறு அணை-மறைக்கப்பட்ட உண்மைகள், தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை, தமிழக ஏரிப் பாசன முறைமைகளில் பாரம்பரிய நீர் மேலாண்மை நடைமுறைகள், இந்திய ஏரிகளில் புனரமைப்பு மற்றும் மேலாண்மை-சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில், பழைமையின் அறிவைத்தேடி- பாசன ஏரிகள் என்ற நூல்களை எழுதியவர்.

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்த சமூகப் போராளி. எல்லவற்றிற்கும் மேலாக ஒரு பெருமைக்குச் சொந்தக்காரர். பிரபாகரன் அழைப்பின்பேரில் அரசு ஊழியராக இருந்தபோதே இலங்கை சென்று வந்தவர். நீர்மேலாண்மை குறித்த ஆலோசனைகளைப் பிரபாகரன் இவரிடம் கேட்டுச் செயற்படுத்தினார் என்பது தமிழர் ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டிய விஷயம். இவர் இலங்கை சென்று திரும்பியது இவரது மனைவிக்குக் கூடத் தெரியாது. இவரது மரணத்திற்குப்பின் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளுக்குப் பின்னரே அவரது குடும்பத்தினருக்குத் தெரியும்.

இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரர், பழ.நெடுமாறனின் தம்பி, பழ. கோமதிநாயகம். டிசம்பர்29-2009ல் மறைந்த இவரது நினைவுநாளில், பாவை பப்ளிகேஷன்ஸ் மேற்படி புத்தகத்தை வெளி இட்டது. புத்தகம் குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்..

.

0 comments:

Post a Comment

Kindly post a comment.