Thursday, September 22, 2011

பொட்டும் பூவும் பள்ளி மாணவியின்உயிரைப் பறித்தது:


19sep2011dinamani

பொட்டும் பூவும் வைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றதால், ஆசிரியையின் தண்டனைக்கு ஆளான மாணவி, அவமானத்தில் தூக்கில் தொங்கினார். இது அம்பத்தூர் - பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடி-க்கு அருகே புதூரில் உள்ள இம்மானுவல் மெதோடிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வி.ரம்யா(வயது 14). இவர் செப்.16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளியிலிருந்து திரும்பியபோது அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவர் தாய் சுதா என்ன என்று விசாரித்துள்ளார். ‘பள்ளி ஆசிரியை அனைவர் முன்னிலையிலும் அடித்து என் காதைத் திருகி, சில்க் ஸ்மிதா மாதிரி வேஷம் போட்டு இப்படி எல்லாம் பள்ளிக்கு வருவியா என்று திட்டினார் என்றாள் ரம்யா. அந்த ஆசிரியை அப்படித்தான் மாணவிகளிடம் எப்போதும் மிக மோசமாக நடந்துகொள்வார்” என்றார் சுதா.

’பள்ளியில் வகுப்பு மாணவிகள் அனைவர் முன்னிலையிலும் இப்படி அவமானப்படுத்துவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்படி பலமுறை என்னிடம் அழுது புலம்பியிருக்கிறாள் ரம்யா. அன்றும் அப்படித்தான் என்று எண்ணினேன். வந்தவள் நேராக மாடியறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். வழக்கம்போல் உடை மாற்றச் சென்றிருக்கிறாள் என்றே நினைத்தேன்...” என்றார் சுதா.அடுத்து அரை மணி நேரமாகியும் ரம்யா மாடியில் இருந்து திரும்பவில்லை. வீட்டில் எல்லோரும் அவள் எங்கே என்று தேடினர்.

மாடிக்குச் சென்று கதவைத் தட்டினர். எந்த பதிலும் இல்லை. சந்தேகம் கொண்டு கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது, ரம்யா, தன் தாயாரின் புடவையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கியதைப் பார்த்து கதறினர்.”உடனே நாங்கள் ரம்யாவை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் டாக்டர்கள் அவள் இறந்துவிட்டதாகக் கூறினர்” என்றார்

அவர்களின் உறவினர் வி.பிரகாஷ்.ரம்யாவின் தந்தை டி.விஜயகுமார் மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறுவனத்தில் பணிபுரிபவர். அவர், ’அந்தப் பள்ளி, மாணவிகளை பூ மற்றும் பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதை அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு எரிச்சலூட்டும்படி நடந்துகொண்டிருக்கிறாள் ரம்யா. அதற்காக நாங்கள் பலமுறை அவளை தேற்றியிருக்கிறோம். ஆனால், இப்போது நாங்கள் எங்கள் மகளை இழந்துவிட்டோம்..” என்றார் வருத்தத்துடன்.

ஆறு மாதங்களுக்கு முன், எங்கள் குழந்தையை வேதனையூட்டும் வகையில் இவ்வாறு சித்ரவதை செய்வதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார் ரம்யாவின் தாய் சுதா. சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை முடிந்து அந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

இயற்கைக்கு மாறான மரணம் என்பதால், உடை, தலைப்பின்னல் விவகாரத்தில் ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பதில் எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.