Thursday, September 15, 2011

கடனில் மூழ்கியுள்ள கிரீஸ் நாடு, விரைவில் திவாலாகுமா?


பிரான்சின் இரு வங்கிகளின் கடன் மதிப்பீட்டுக் குறியீடுகளை "மூடிஸ்' நிறுவனம் நேற்று குறைத்தது. இதையடுத்து, டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்புக் குறைந்தது."யூரோ' கரன்சி பயன்படுத்தும், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 17 நாடுகளில், கிரீஸ், போர்ச்சுகல், அயர்லாந்து போன்றவை கடனில் மூழ்கி விட்டன. இந்த மூன்றுக்கும் "யூரோ' தொகுப்பு நிதியில் இருந்து கடன் தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. இவற்றில், கிரீஸ் இருமுறை கடன் தவணை பெற்றும் கூட ஏற்கனவே கூறப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியவில்லை. அதனால் கடந்த இரு ஆண்டுகளில் வாங்கிய கடனுக்கான வட்டியை திருப்பிச் செலுத்தும் திறனையும் அது இழந்து விட்டது.

இந்நிலையில், சமீபத்தில் அந்நாடு வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,"அரசின் கையிருப்பில் குறைந்த அளவே பணம் உள்ளது. இன்னும் சில வாரங்களுக்குப் பின் சம்பளம் உள்ளிட்ட அன்றாடச் செலவுகளுக்கே, 11 பில்லியன் டாலர் நிதி தேவைப்படும்' என தெரிவித்தது.இந்த 11 பில்லியன் டாலர் பணமும், இந்த மாதம் இறுதியில், கிரீசுக்கு வழங்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அது ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியைத் திருப்பி செலுத்தியது பற்றிய மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் இந்த பணம் வழங்கப்படுமா, நிறுத்தப்படுமா என்பது தெரியவரும்.

இந்த மதிப்பீடுகள் இவ்வாரத்தில் துவங்கி விட்டன.இதையடுத்து கிரீஸ் நிச்சயம் திவாலாகி விடும் என செய்திகள் பரவத் துவங்கின. இதனால், கடந்த ஒரு வார காலமாக ஐரோப்பிய பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது. அதன் தாக்கம் ஆசியச் சந்தையிலும் காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் விடுத்த அறிக்கையில்,"கிரீஸ் திவாலாவது அல்லது "யூரோ' கரன்சியில் இருந்து விடுபடுவது இரண்டில் எது நடந்தாலும், அது சீட்டுக் கட்டு சரிந்தது போல ஐரோப்பாவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் கிரீஸ் திவாலாகாமல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என உறுதியளித்தார்.அவரது அறிக்கையால் பயன் ஏதும் ஏற்படவில்லை. பங்குச் சந்தை சரிவு நேற்றும் தொடர்ந்தது. இதையடுத்து, ஜெர்மனி, பிரான்ஸ் அதிபர்களுடன், கிரீஸ் பிரதமர் தொலைபேசியில் பேசினார்.

இதற்கிடையில், இந்தப் பிரச்னையில் இருந்து வெளிவர, ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட "யூரோ' கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கான பரிந்துரைகளை விரைவில், ஐரோப்பிய கமிஷன் வெளியிடும் என, கமிஷன் தலைவர் ஜோஸ் மேனுவல் பராசோ நேற்று தெரிவித்தார்."யூரோ' மண்டல நாடுகள் பொருளாதார, அரசியல் ரீதியில் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஒழிய, "யூரோ' கடன் பத்திரங்களை வெளியிட முடியாது என, ஏற்கனவே ஜெர்மனி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

அதேநேரம், கிரீஸ் கடன் பத்திரங்களை வாங்கியதால், சந்தையில் நம்பிக்கை இழந்த "கிரெடிட் அக்ரிகோல், சொசைட்டி ஜெனரல்' ஆகிய இரு பிரான்ஸ் வங்கிகளின் கடன் மதிப்பீட்டுக் குறியீடுகளை தலா ஒரு புள்ளி குறைத்து, "மூடிஸ்' நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டது. இதன் பாதிப்பு ஏற்கனவே சரிவில் இருந்த ஐரோப்பிய பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்குகளை பெருமளவில் பாதித்தது.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் நிதி விவகார கமிஷனர் ஓல்லி ரென் நேற்று விடுத்த அறிக்கையில்,"கிரீஸ் நாடு "யூரோ' கரன்சியில் இருந்து வெளியேறி அதன் சொந்த கரன்சிக்கு மாற வேண்டும்' என்றார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.