Monday, September 5, 2011

பூவரசு’ -டைரக்டர் ஆஃப் பப்ளிக் ரிலேஷன்ஸ்!







‘‘அஞ்சு வயசுல எனக்கு பேச்சும் வரல, நடக்கவும் முடியல. போலியோ
அட்டாக்காம். ஸ்கூல்ல சேத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஏழு வயசாகும்போது லேசா பேச்சு வந்தது. அப்போதான் ஒண்ணாவது சேர்ந்தேன். பசங்கள்லாம் என்னை ‘சப்பக்காலா, சப்பக்காலா’ன்னு கூப்பிடுவாங்க. ஆரம்பத்துல அழுகையா வந்துச்சி. அப்புறம், கண்டுக்கறதே இல்ல.’’ ---வலியை மறக்காமல் வார்த்தைகளை உதிர்க்கிறார் பூவரசு.

‘‘ஊர்லயே நாங்கதான் வசதியான குடும்பம். எங்க தாத்தாதான் பஞ்சாயத்து தலைவர். ஆனா, தண்ணியடிக்கிறதிலும் சரி, வாரி வழங்குறதிலும் சரி. தாராள வள்ளல். இருந்த சொத்தை எல்லாம், குடிச்சே அழிச்சார். எங்களுக்கு சொந்தமா ஒரு ரைஸ் மில் இருந்துச்சு. அதுக்குப் பக்கத்துலதான் தோட்டமும் வீடும். ரைஸ் மில்லை வித்ததுக்கப்புறம், அங்கிருந்த கருப்பரிசியை பொறுக்கி கஞ்சி காசுற நிலமைக்கு வந்துட்டோம்.

நான்தான் வீட்டுக்கு தலைச்சன். எனக்கு ஒரு தம்பியும் தங்கச்சியும் இருக்காங்க. நாங்க மூணு பேருமே மாடு மேய்ச்சுகிட்டே ஸ்கூலுக்குப் போவோம். சனி, ஞாயிறுல நானும் என் தங்கச்சியும் வேப்பங்கொட்டை பொறுக்கப் போய்டுவோம். அதை வித்தாதான் எங்களுக்கு சோறு. அந்தளவுக்கு வறுமை வாட்டி அடிச்சுது. ஊர்க்காரங்க என்னடான்னா, ‘தலைச்சன் புள்ளயே கை கால் வௌங்காம இருந்தா, குடும்பம் எங்கேர்ந்து வௌங்கும்?’னு எளக்காரம் பேசினாங்க.

எட்டாவது வரைக்கும்தான் ஊர்ல இருந்தேன். அதுக்கப்புறம் பாட்டி வீட்டுக்கு ‘பானாவரம்’ போய்ட்டேன். ம்ம்.. எங்க ஊர் பேரைச் சொல்லலியே. வேடந்தாங்கல்தான் நான் பொறந்தது. ஆனா, இது வேற வேடந்தாங்கல். வேலூர் மாவட்டத்துல இருக்குது. பாட்டி வீட்லயும் மாடு மேய்ச்சுகிட்டேதான் படிச்சேன். படிப்பெல்லாம் நல்லாதான் படிச்சேன். ஆனா, பன்னெண்டாவதுல ஃபெயிலாயிட்டேன்.

ஃபியிலாயிட்டு இருந்தப்போ ஒருநாள், முடிவெட்ட சலூனுக்குப் போனேன். அங்கதான் தினத்தந்தில அந்த விளம்பரம் கண்ணுல பட்டுது. ‘எழும்பூர், மதுரா ட்ராவல்சில் ஏர் டிக்கெட்டிங் படிக்க ஆசையா? ஊணமுற்றவர்களுக்கு இலவசம்’னு போட்டிருந்தது. அதுதான் என் வாழ்க்கைல மிகப்பெரிய திருப்புமுனை. அதேபோல, கிண்டி ‘சென்ட்ரல் ஃபுட்வேர் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்’ல லெதர் கோர்ஸ் ஃபிரீன்னு போட்டிருந்தது. நான், ரெண்டுத்துக்கும் அப்ளை பண்ணேன்.

ஏர் டிக்கெட்டிங் கோர்ஸ், காலைல 8 -டூ- 9ன்னா, ஃபுட்வேர் டிரெயினிங், காலை 10 -டூ- 5. எதுலயாவது வேலை கிடைக்கட்டும்னு ரெண்டுத்துலயும் ஜாய்ன் பண்ணேன். ஏர் டிக்கெட்டிங் கோர்ஸ் மூணு மாசம்தான். அதுக்கப்புறம் மூணு மாசம் ட்ரெயினிங். ட்ரெயினிங், சாயந்திரம் ஆறு மணிக்கு ஆரம்பிச்சு காலைல ஆறு மணிக்கு முடியும். நான், ராத்திரி முழுக்க வேலை பாத்துட்டு பகல்ல லெதர் கோர்ஸ் போயிடுவேன். வாழ்க்கைல, எப்படியாவது முன்னேறனும்னு தூங்காம உழைச்சேன்.

இதுக்கிடையில, போரூர் ராமச்சந்திராவுல என் தம்பி நர்ஸிங் கோர்ஸ் சேர்ந்தான். நானும் அவனும் பரங்கிமலை பட் ரோட்ல 300 ரூபாய் வாடகைக்கு ஒரு குடிசைல தங்கினோம். க்ளாஸுக்கு போக, கைல அஞ்சு பைசா இருக்காது. டெய்லி, கிண்டிக்கும் எக்மோருக்கும் ட்ரெயின்ல வித்தவுட்டுதான். மத்த இடங்களுக்கு போகணும்னா, நடராஜா பஸ் சர்வீஸ்.

இப்படியே நடந்து நடந்து ஏர் டிக்கெட்டிங்கில் ஃபர்ஸ்ட் க்ளாஸ்லயும், லெதர் டெக்னாலஜில செகன்ட் க்ளாஸ்லயும் பாஸ் பண்ணேன். வி.கே.டி பாலன் சார். அவர்தான் மதுரா ட்ராவல்ஸோட ஓனர். ‘உனக்கு விருப்பம் இருந்தா, இங்கேயே வேலை செய்யலாம்’னு சொன்னார். எனக்கு லெதர் டெக்னாலஜியைவிட ஏர் டிக்கெட்டிங்தான் பிடிச்சிருந்தது. மாசம், ஆயிரம் ரூபாய்க்கு மதுரா டிராவல்ஸ்ல வேலைக்கு சேர்ந்தேன்.

வேலை கிடைச்சதும் தம்பிக்கு வசதியா, வீட்டை ஐயப்பன்தாங்கலுக்கு மாத்தினேன். பாலன் சார் என்னை ‘ஏர் இன்டியா டிக்கெட்டிங்’ கோர்ஸ்ல சேர்த்துவிட்டார். ஏர் இன்டியாவுல சர்டிஃபிகேட் வாங்கினா, சொந்தமாவே ட்ராவல்ஸ் ஆரம்பிக்கலாம். அந்தளவு வேல்யூயபிள் கோர்ஸ் அது. மதுரா ட்ராவல்ஸ்ல வேலை செஞ்சிட்டு இருக்கும்போதே, பாலன் சார் எனக்கு டெலிபோன் பூத் ஒண்ணும் வச்சிக் கொடுத்தார். அப்போலாம், செல்போன் வளர்ச்சி இந்த அளவுக்கு இல்ல. அதனால, நல்ல வருமாணம் கிடைச்சது.

ஊருக்குப் போய், மாடு மேய்ச்சிக்கிட்டிருந்த அப்பாவையும் அம்மாவையும் மெட்ராஸுக்கு கூட்டிட்டு வந்தேன். உக்கார வச்சி, அவங்களுக்கு மூணு வேளையும் நல்ல சாப்பாடு போட்டேன். அப்போதான், வேடந்தாங்கல்ல எங்க வீட்டுக்குப் பக்கதுல அஞ்சு ஏக்கர் நிலம் விலைக்கு வர்றதா சொன்னாங்க. நான் சிறுகச் சிறுக சேர்த்து வச்சிருந்த காசோட சேர்த்து, வட்டிக்கு கொஞ்சம் பணம் வாங்கி அந்த இடத்தை வாங்கினேன். மொத்தம் ஏழு லட்சம் ஆச்சு. இப்போ, ஊர்ல யாரும் என்னை எளக்காரமா பாக்கறதில்ல.

குழந்தைல பேச்சே வராம இருந்த நான், இப்போ கஸ்டமர்கிட்ட இங்லீஷ்ல பேசுறேன். வர்ற போன் கால்ஸ் எல்லாத்தையும் நான்தான் அட்டென் பண்றேன். இப்போ, என்கிட்ட மாற்றுத் திறனாளிங்கிற நினைப்பே இல்ல. நான் இந்த வேலைக்கு வந்து பத்து வருஷம் ஆவுது. இதுவரை, சுமார் ஆயிரம் பேருக்கு ட்ரியினிங் கொடுத்திருப்பேன். சென்னைல, அல்மோஸ்ட் எல்லா ட்ராவல்ஸ்லயும் என்னோட ஸ்டூடன்ட்ஸ் இருப்பாங்கன்னு சொல்லலாம்.

மதுரா டிராவல்ஸ்ல இப்போ நான் ‘பப்ளிக் ரிலேஷன்ஸ்’ டைரக்டரா இருக்கேன். கை நிறைய சம்பளம் வாங்கறேன். இன்னிக்கு, நானும் என் குடும்பமும் இந்த அளவுக்கு சந்தோஷமா தலை நிமிர்ந்து நிக்கிறோம்னா, அதுக்கு என்னோட கடவுள் ‘வி.கே.டி.பாலன்’தான் காரணம். அவர், மனித உருவில் தெய்வம்.’’ கண்கள் பணிக்க முடிக்கிறார் பூவரசு.     
நன்றி   :மீடியா நியூஸ்


0 comments:

Post a Comment

Kindly post a comment.