Friday, September 2, 2011

அப்சல் குருவுக்கு பொதுமன்னிப்பு: காஷ்மீர் பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் எம்எல்ஏ


நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவையில் சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
குப்வாரா மாவட்டத்தில் லாங்கேட் தொகுதி எம்எல்ஏவான ஷேக் அப்துல் ரஷீத், மனிதாபிமான அடிப்படையில் அப்சல் குருவுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தனது தீர்மானத்தில் கோரியுள்ளார். அப்சல் குருவைத் தூக்கிலிடுவது காஷ்மீரில் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷீத் கூறினார். 
செப்டம்பர் 26-ம் தேதி முதல் தொடங்க உள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தனது தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தில்லியில் இளைஞர் காங்கிரஸ் அலுவலம் தாக்கப்பட்ட வழக்கில் தேவிந்தர் பால் சிங் புல்லாருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் அப்சல் குருவுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று காஷ்மீர் பேரவையில் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.