Wednesday, September 28, 2011

அமெரிக்க வழக்கை எதிர்கொள்ள சிறிலங்கா தயக்கம் - இராஜதந்திர வழியில் காப்பாற்ற முயற்சி


மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை இராஜதந்திர சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி அமெரிக்க நீதிமன்ற வழக்கில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியும், சீதாராம் சிவம் என்பவரும் நியுயோர்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியிருந்தார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், இது விடுதலைப் புலிகளின் கொடூரச்செயல்களை அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் அம்பலப்படுத்தும் வாய்ப்பை தந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை எதிர்கொள்ள சவீந்திர சில்வாவுக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படும் என்றும், சிறிலங்ங்காவின் நியாயங்களை எடுத்தக் கூறும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் சிறிலங்கா அரசின் தரப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

ஆனால் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர சிறப்புரிமைப் பாதுகாப்பு இருப்பதாகவும் அவரைப் பாதுகாக்க ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐ.நாவுக்கான சிறிலங்காவின் இராஜதந்திரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக, நியுயோர்க்கில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது எனவும், அவருக்கு தண்டனை விதிக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா மற்றும் வியன்னா பிரகடனங்களின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு முழுமையான இராஜதந்திர பாதுகாப்பை அளிக்க வேண்டியது ஐ.நாவின் கடமை, சிறிலங்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும் இராஜதந்திரியான அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஐ.நா மற்றும், அமெரிக்காவுக்கு இருப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியுயோர்க்கில் தமது கடமைகளை தடையின்றி மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனைச் சந்தித்த போது கேட்டுக்கொண்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா வழக்கை எதிர்கொள்வார் என்று கூறிய சிறிலங்கா அரசாங்கத் தரப்பு, தற்போது ஐ.நாவின் பாதுகாப்பைக் கோரியிருப்பது இந்த வழக்கை எதிர்கொள்வதற்கு தயங்குவதையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?௨0௧௧0௯௨௮௧0௪௭௭௧

0 comments:

Post a Comment

Kindly post a comment.