Wednesday, September 21, 2011

இந்தியாவில் சம்பவம் : இறந்த இலங்கைத் தமிழன் உயிருடன் வந்த அதிசயம் : வைத்தியர்களின் திருவிளையாடல் அம்பலம்!

http://tamilstar.net/news-id-srilanka-hospital-21-09-113619.htm

srilanka-hospital-21-09-11

இலங்கையில் இடம்பெற்ற இனப்பிரச்சினை காரணமாகத் தமிழ் மக்கள் உலக வரைபடத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் தமிழகத்தில் அதிகளவான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வாழ்ந்த இலங்கை அகதியின் தலைவிதியைத் தமிழக வைத்தியர்களும் பரிசோதித்துப் பார்த்துள்ளனர். இச் சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, திருச்சி, தனியார் மருத்துவமனையில் இறந்து விட்டதாகக் கூறி, பிணமாக மூடை கட்டி கொடுக்கப்பட்டவர், உயிர் பிழைத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் தன்னேரி, 64. இவரது மனைவி கோமதி, 56. இலங்கையில் நடந்த கலவரத்தை தொடர்ந்து, 1985ம் ஆண்டு, மண்டபம் முகாமுக்கு வந்த இவர்கள், 1996ல் இருந்து திருச்சி கொட்டப்பட்டு, இலங்கை தமிழர் முகாமில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு ஜெயராணி என்ற மகளும், செவ்வந்தி செல்வன், சந்திரன், மோகன்தாஸ், 30, ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். பெயின்டராக பணிபுரியும், இவர்களது மகன் மோகன்தாஸ், 15ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். திருச்சி கே.எம்.சி., தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மூன்று நாட்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, 7 மணிக்கு, அவர் இறந்து விட்டதாக கூறி, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மோகன்தாஸ் இறந்ததை அறிந்து, வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு, ஐஸ் பெட்டியும் வரவழைத்தனர். ஊரெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது.

இதற்கிடையே, மருத்துவமனையில் இருந்து மோகன்தாஸ், அம்புலன்சில் ஏற்றப்பட்டார். திடீரென அவரது கை, கால்கள் அசையவே, அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நேரடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மோகன்தாசின் அண்ணி சாந்தி கூறியதாவது:


திருச்சி அரசு மருத்துவமனைக்குதான், மோகன்தாசை முதலில் கொண்டு சென்றோம். அதற்குள் இரண்டு முறை, மோகன்தாசுக்கு வலிப்பு வந்து, காதில் ரத்தமும் வந்தது.டாக்டர்கள் எங்களுக்கு சரியாக பதில் அளிக்காததால், பயந்துபோன நாங்கள், உடனடியாக திருச்சி கே.எம்.சி., மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவரை அதி தீவிர சிகிச்கைப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் வரை தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக கூறி, மருந்து, மாத்திரைகளை வாங்கி வர கூறினர்.ஒரு லட்ச ரூபாய் செலவழித்த பின்னும், அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை தெரிவிக்கவில்லை. நாங்கள் வற்புறுத்தவே, நேற்று முன்தினம் இரவு, பிணமாக எங்களிடம் வழங்கினர். அவர் இறந்து விட்டதாக சான்றிதழும் கொடுத்தனர்.

ஆம்புலன்ஸில் ஏற்றியபோது தான், மோகன்தாசுக்கு உயிர் இருப்பது தெரிந்தது. இதற்குபிறகும் அந்த மருத்துவமனையில் இருக்கக்கூடாது என்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டோம்.இங்கு வந்தவுடன் தனியார் மருத்துவமனையை சேர்ந்த சிலர், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தாளில் கையெழுத்துக் கேட்டு, எங்களை மிரட்டுகின்றனர். நாங்கள் போட மறுத்துவிட்டோம். இதுபோன்று பணம் பறிக்கும் மருத்துவமனைகள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சாந்தி கூறினார்.

இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கூறியதாவது:

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மோகன்தாஸ், அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். மூன்று நாட்கள் அப்படியே சிகிச்சை பெற்றதால், "இறந்த பிணத்தை வைத்துச் சிகிச்சை கொடுக்கிறீர்கள். நாங்கள் வெளியிடத்தில் சிசிச்சை செய்கிறோம்' என, அவரது உறவினர்கள் தகராறு செய்தனர். அதனால், மருத்துவ ஆலோசனைக்கு எதிராக, "அகைன்ஸ்ட் மெடிக்கல் அட்வைஸ்' என, மோகன்தாஸ் தந்தை தன்னேரி, அண்ணன் செவ்வந்தி செல்வனிடம் கையெழுத்து வாங்கி, உயிருடன் தான் கொடுத்தோம்.தற்போது, திருச்சி அரசு மருத்துவமனையில், அதே வெண்டிலேட்டர் உதவியுடன் தான் மோகன்தாஸ், உயிரோடு இருக்கிறார். எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவதூறு பரப்புகின்றனர்.இவ்வாறு நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது. எப்படியிருக்கிறது தமிழனின் தலைவிதி. கடல் கடந்து தமிழகம் சென்றாலும் தமிழனைப் பின்தொடர்கிறது அவனது தலைவிதி.

0 comments:

Post a Comment

Kindly post a comment.