Tuesday, September 20, 2011

'வேணாம்.. ரொம்ப வலிக்குது''.. ஜெயலலிதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 'கண்ணீர்' கடிதம்!

http://tamilstar.net/news-id-cpm-urges-jayalalitha-stop-candidates-list-20-09-113595.htm

cpm-urges-jayalalitha-stop-candidates-list-20-09-11கூட்டணிக் கட்சிகளை கொஞ்சம் கூட மதிக்காமல் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா. இதற்குத் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆனால், கிட்டத்தட்ட அதிமுககாரர் போல செயல்பட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆழ்ந்த அமைதி காத்து வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்த போதே தமிழகத்தின் 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் ஜெயலலிதா. சரி மாநகராட்சி போனாலும் பரவாயில்லை, நகராட்சிகளாவது கிடைக்கும் என எதிர்பார்த்து பேச்சுவார்த்தையை மார்க்சிஸ்ட் தொடர்ந்தது. ஆனால் அந்த எண்ணத்திலும் மண் விழுந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட நகராட்சிகளுக்கும் சேர்த்தே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது அதிமுக. அதிலும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் இப்போது தலைவர்களாக உள்ள நகராட்சிகளுக்கும் சேர்த்து அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது தான் அந்தக் கட்சியை கடும் கோபத்தில் தள்ளியிருக்கிறது. இந் நிலையில், இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் போது அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது சரியான அணுகுமுறை அல்ல என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக வேட்பாளர் பட்டியலை நிறுத்தி வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து, அதிமுக-மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றுக்கு தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அதிமுக தலைமை அறிவித்து வருகிறது.

இதன்மூலம் அந்தக் கட்சிகளுக்கு இவ்வளது தான் மரியாதை என்பதை அதிமுக தெளிவாகவே சுட்டிக் காட்டிவிட்டது.

இந் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முடிவு செய்தது. இதையடுத்து, கட்சி சார்பில் பேச்சுவார்த்தை குழுவும் அமைக்கப்பட்டது. அதிமுக பேச்சுவார்த்தை குழுவின் அழைப்பை அடுத்து, கடந்த 16ம் தேதியன்று மாலை பேச்சுவார்த்ûதையில் கலந்து கொள்ள இருந்தோம். இந் நிலையில், பத்து மாநகராட்சி மேயர்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது. அன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அதிமுக சார்பில் வெளியான பட்டியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அதிமுக பேச்சுவார்த்தை குழு தலைவர்கள், பட்டியல் இறுதியானது அல்ல. கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முடிவுகளுக்கு உள்பட்டு மாறுதலுக்கு உரியது, என்று தெரிவித்தனர்.

மீண்டும், 52 நகராட்சிகளுக்கான பட்டியலை அதிமுக வெளியிட்டது. தொடர்ந்து, கடந்த 18ம் தேதியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தை குழு அதிமுக குழுவோடு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. மீண்டும் 20ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், நகர்மன்றத் தலைவர்களுக்கான அதிமுக வேட்பாளர்களின் 2வது பட்டியல் திங்கள்கிழமை வெளியானது. இதையடுத்து, மொத்தம் 124 நகராட்சித் தலைவர்கள் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. மேலும், முதல் கட்டமாக பேரூராட்சித் தலைவர்களுக்கான ஒரு பகுதி வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே,தொடர்ந்து உள்ளாட்சித் தலைவர்கள் அனைவருக்குமான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருப்பது சரியான அணுகுமுறை அல்ல. இது, கூட்டணிக் கட்சிகளின் கீழ்மட்ட ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தொகுதி உடன்பாடு ஏற்படுத்த வேண்டுமென விரும்புகிறது.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை நிறுத்தி வைத்து, பேச்சுவார்த்தை முடிவுக்குப் பிறகு வேட்பாளர்களை இறுதிப்படுத்துவதே கூட்டணி கட்சிகளுக்குள் நல்ல இணக்கத்தை உருவாக்கப் பயன்படும் என்று தனது கோபத்தை முழுமையாக காட்டவும் முடியாமல், அதே நேரத்தில் கட்சித் தொண்டர்களின் ஆத்திரத்தை மூடி மறைக்கவும் முடியாமல், ஆனால் அதிமுகவை கோபப்படுத்திவிடாத வகையிலும் மிக ஜாக்கிரதையான வார்த்தைகளைப் போட்டு இந்தக் கடிதத்தை எழுதி முடித்துள்ளார் ராமகிருஷ்ணன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதே நிலை தான் என்றாலும், தா.பாண்டியனைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு எந்தப் பிரச்சனையும் தரக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளார். இதனால் பெரும் அமைதி காத்து வருகிறார். இதன்மூலம் அந்தக் கட்சியின் தொண்டர்களைப் பற்றிக் கூட அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

0 comments:

Post a Comment

Kindly post a comment.