Saturday, September 24, 2011

தொஙுகும் வாழ்க்கையைப் போலவே தொங்கும் பாலம் ?

ஆலங்குடி அருகே வெள்ளாற்றால் தீவுபோல சூழப்பட்டிருக்கும் இசுகுப்பட்டி கிராம மக்கள் வெள்ள அபாயக் காலங்களில் ஊரிலிருந்து வெளியேற முக்கியப் பயன் அளிக்கும் இசுகுப்பட்டிப் பாலத்தைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆலங்குடியிலிருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்கள் நாகரத்தினப்பள்ளம் மற்றும் இசுகுப்பட்டி. வெள்ளாற்றால் தீவுபோல சூழப்பட்ட கிராமங்கள் இவை (வெள்ளாறு இந்தக் கிராமங்களுக்கு மேற்குப் புறத்தில் இரண்டாகப் பிரிந்து ஊரை மாலைபோல சூழ்ந்து மீண்டும் ஊருக்கு கிழக்கே ஒன்று சேர்கிறது). மழைக்காலத்தில் வெள்ளாற்றில் வெள்ளம் வரும்போது இந்த ஊர்கள் தண்ணீருக்கு நடுவில் சிக்கிக் கொள்ளும்.

இத்தகைய சூழல் ஏற்படும்போதெல்லாம் கிராம மக்கள் ஊரிலிருந்து வெளியேற பெரும் உதவியாக இருப்பது இசுகுப்பட்டி பாலம்தான்.இந்தப் பாலமே அறந்தாங்கி, ஆலங்குடி மற்றும் திருமயம் ஆகிய வட்டங்களை இணைக்கும் பாலமாகவும் இருக்கிறது.

பக்தவத்சலம் முதல்வராக இருக்கும்போது கட்டப்பட்ட இந்தப் பாலம் நா.கொத்தமங்கலம் தெற்கு மற்றும் வடக்கு கிராமங்கள், இசுகுப்பட்டி, கோவில்வாசல், கரையப்பட்டி, செம்படவயல், மணப்பட்டி, சாமந்தப்பட்டி, சுள்ளான்பட்டி, தேமத்தப்பட்டி, நற்பவளக்குடி, சிறுநாட்டார்வயல், செங்கமாரி, பணிக்கவயல், குளவாய்ப்பட்டி, சீராடும்செல்வி, பொம்மனாபட்டி, கண்டாகுடிப்பட்டி, மாலாக்குடிப்பட்டி, விளங்குடி, காட்டுத்தட்டான்வயல் ஆகிய கிராமங்களின் போக்குவரத்துக்குப் பெரும் உதவியாக இருக்கிறது.

ஆனால், மிக மோசமான நிலையில், எந்த நேரமும் இடிந்து விழுலாம் என்று அச்சத்தை உருவாக்கக் கூடிய வகையில் இருக்கிறது. 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலேயே வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்தப் பாலம் மோசமான பாதிப்புக்கு ஆளாகிவிட்டது. ஆயினும் இன்றுவரை வேறு பாலம் அமைத்திட ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

""ஒவ்வொரு மழைக்காலங்களின்போது நாங்கள் அவதிக்குள்ளாகிறோம். குறிப்பாக 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஒரு வாரம் முடங்கிக்கிடந்தோம். ஆனாலும், சீந்துவார் யாருமில்லை. திருவரங்குளம் மற்றும் அரிமளம் ஆகிய இரண்டு ஒன்றியங்களின் எல்லையில் நாகரெத்தினப்பள்ளம் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்'' என்கின்றனர் கிராம மக்கள்.

அப்போது விசைப்படகுகள் கொண்டுவரப்பட்டு, கிராம மக்கள் மீட்கப்பட்டதையும் வைக்கோல்போரின் உச்சியிலும் புளியமரங்களின் மீது ஏறியும் மக்கள் நின்றுகொண்டிருந்ததையும் நினைவுகூருகிறார்கள் கிராமத்துப் பெரியவர்கள்.

""இந்த ஊர் இளைஞர் என்றாலே பெண்தரக் கூட மறுக்கிறார்கள் மற்ற ஊர்க்காரர்கள். காரணம் இந்தத் தொங்குபாலம்தான். பாலம் கட்டி பத்தாண்டு காலத்தில் உடைந்துவிட்டது. கடந்த 33 ஆண்டுகளாக தொங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாலமானது சுமார் 20 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாக இருக்கிறது.

அறந்தாங்கியில் இருந்து அரிமளம் வழியாக புதுக்கோட்டையை இணைக்க இந்தப் பாலம்தான் உயிர்நாடி. இந்தப் பாலத்தைக் கொண்டுவரவே கிராம மக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். இப்போது மாற்றுப் பாலத்துக்காகப் போராடுகிறோம். சட்டப் பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், அமைச்சர்கள் எனத் தொடங்கி முதல்வர் வரை மனு கொடுத்துப் பார்த்துவிட்டோம்.

சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்புகளை ஏற்றிக்கொண்டு செல்ல இயலாது. நடுநிலைப் பள்ளிக் கூடம் பாடம் படிக்கக்கூட பதினைந்து கிலோ மீட்டர் சுற்றிப் போக வேண்டும். நோய்வாய்ப் பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் நிலை பெரும்பாடுதான்.

ஆனால், எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்தப் பாலத்தைப்போலவே எங்களது வாழ்வும் தொங்கிக் கொண்டிருக்கிறது''

மாத இதழ், வார இதழ் என்று திரும்பத் திரும்பப் பாலப் பிரச்சினை வெளி வந்து கொண்டிருப்பதோடு சரி. பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.

( 0௩-௧௨-௨0௧0 தினமணி மற்றும் ௧௭-0௮-௨0௧௧ குமுதம் )

0 comments:

Post a Comment

Kindly post a comment.