Thursday, September 15, 2011

ஆஸ்திரேலியாவிலும் மலேசியாவிலும் அகதிகள் படும் பாடு

அகதிகள் பிரச்சனையை அவர்களைப் படகு மூலம் கடத்தி வரும் மனிதக் கடத்தல்காரர்களுக்கு எதிரான போராக மாற்றுவதற்கு ஆஸ்திரேலிய அரசு எடுத்த கடும் முயற்சி தோல்வி கண்டுள்ளது. பிரதமர் யூலியா கெயிலாட் இந்தப் போர் வெற்றியில் தனது அரசியல் எதிர்காலம் இருப்பதாக எண்ணி இந்த நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்தினார்.

ஈரான், ஈராக், இலங்கை , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறாயிரம் (6000) வரையான அகதிகள் ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோருவோரை நாட்டில் சுதந்திரமாக நடமாட விடுவதில்லை என்ற இறுக்கமான கொள்கையை ஆஸ்திரேலிய அரசுகள் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கின்றன.

ஆஸ்திரேலியப் பெருநிலம், ஆஸ்திரேலியாவுக்குச் கிறிஸ்மஸ் தீவுகள், ஆஸ்திரேலியாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட நவுறுத் தீவு (Nauru) போன்றவற்றில் சிறைக் கைதிகள் போல் அடைத்து வைக்கும் நடைமுறையை ஆஸ்திரேலியா செயற்படுத்துகிறது.

அகதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கும் வரை அகதிகள் தடுப்பு முகாம்களில் வைக்கப்படுகின்றனர். தீர்ப்புக்களை வேகமாக வழங்காமல் இழுத்தடிப்பது மூலம் அகதிகள் வருகையைக் கட்டுப்படுத்தலாம் என்ற அடிப்படைச் சிந்தனையை ஆஸ்திரேலியாக் குடிவரவு அமைச்சு கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத் தடுப்பு முகாம்களில் அகதிகள் சொல்லொணாத் துன்பம் அடைகின்றனர்.

தடுப்புக் கொள்கையின் நீட்சியாக யூலிய கிலாட் அரசு மலேசியாவுக்கு 800 அகதிகளை அனுப்பி அதற்கு மாற்றீடாக அடுத்துவரும் நான்கு வருடங்களில் மலேசியாவிலுள்ள அகதிகளில் நாலாயிரம் (4000) பேரை ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தை மலேசிய அரசுடன் செய்து கொண்டது.

மலேசியாவுக்கு அகதிகள் ஏற்றி அனுப்பப்படும் தறுவாயில் அதைத் தடுக்கும் நோக்கில் ஆஸ்திரேலிய் நீதி மன்றத்திற்கு மனுச் செசய்யப்பட்டது. அகதிகளை அனுப்பும் திட்டம் நீதிக்குப் புறம்பான நடவடிக்கை என்ற தீர்ப்பை ஆஸ்திரேலிய நீதி மன்றம் வழங்கியது. தீர்ப்பின் முக்கிய அம்சமாக அகதிகள் தொடர்பாக மலேசிய அரசு கடைப்பிடிக்கும் கொள்கை இடம்பெற்றது.

மலேசியாவில் இப்போது மியன்மார், சொலமாலியா, இலங்கை, ஈரான் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 93,600 அகதிகள் வாழ்கின்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் மலேசியாவின் அகதிகள் ஆணையக் கிளை தவிக்கிறது. இந்த அகதிகள் எண்ணிக்கையில் 92 வீதத்தினர் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், குடிபெயர்வோர் வேலைத்திட்டக் குழுவைச் சேர்ந்த (Migration Working Group) டானியல் லோ (Daniel Lo) மலேசிய அரசு அகதிகள் தொடர்பாகப் புதிய அணுகுமுறையைப் புகுத்த வேண்டும் என்கிறார்.

ஜநாவின் 1951ம் ஆண்டிற்கான அகதிகள் உடன்படிக்கையை (UN Refugee Convention 1951) இது வரை மலேசியா அங்கீகரிக்கவில்லை. இந்த உடன்படிக்கையின் 1967ம் ஆண்டின் புறட்டக்கோல் அனுபந்தத்தையும் (1967 Protocol) மலேசியா அங்கீகரிக்கவில்லை.

அனுமதி ஆவணம் இல்லாத குடியேறிகளுக்கும் அகதிகளுக்கும் இடையில் மலேசியா வேறுபாடு காட்டுவதில்லை. இருவரையும் ஒரே மாதிரிப் பார்க்கிறது. சட்டபூர்வமாக வேலை செய்வதற்கு மலேசியா அகதிகளை அனுமதிப்பதில்லை. அமெரிக்கா, ஜேர்மனி, பிறேசில், கொஸ்ர றிக்கா ஆகிய நாடுகள் அகதிகளைத் தமது நாட்டில் வேலை செய்ய அனுமதிக்கின்றன.

டானியல் லோ தனது குழுவுக்காகப் பேசுகையில் பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்தார் -

(1) அகதிகள் தங்கும் சட்ட அங்கீகாரத்திற்குரிய சட்டத்தை மலேசியா உருவாக்க வேண்டும்.

(2) மலேசியாவின் அகதிகள் தொடர்பான சட்டத்தைச் சர்வதேச மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமைச் சட்டங்களுக்கு நிகராக்க வேண்டும்.

(3) சட்டத்துறை, மருத்துவத்துறை, காவல்துறைப் பாதுகாப்புகளை உருவாக்கிச் செயற்படுத்த வேண்டும்.

இடம்பெயரும் அகதிகளைப் பாதுகாப்பதற்கு ஜநாவின் 1951ம் ஆண்டு உடன்படிக்கை போதுமானதல்ல என்ற கண்டனத்தை சட்ட நிபுணர்கள் முன் வைக்கின்றனர். ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகள் அகதிகளைப் பந்தாடுவதற்கு அது இடமளிப்பதாக அவர்கள் விமர்சிக்கின்றனர்.

http://www.tamilkathir.com உமா

0 comments:

Post a Comment

Kindly post a comment.