Wednesday, September 14, 2011

குப்பை நகரமாகும் கோயில் நகரம் , பழனி !



கோயில் நகரம் எனப் பெயர் பெற்ற பழனி நகர், அடிவாரப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் மண்டபங்களில் இருந்து கொட்டப்படும் பாலித்தீன் மற்றும் உணவுக் கழிவுகளால் குப்பை நகரமாக மாறியுள்ளது.கோயில் நகரம் மட்டுமல்லாது, சுற்றுலாப் பகுதியாகவும் உள்ளதால், பழனிக்கு தமிழகத்திலிருந்து மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆனால், பழனியில் சுத்தம் என்பது பெயரளவில் கூட இல்லாதது கண்கூடான உண்மை. வையாபுரி குளம் ரவுண்டானா பகுதியில் பக்தர்கள் நடந்து செல்லும் பிளாட்பாரம் சிறுநீர் குட்டையாக மாறி, அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது.இதைத் தொடர்ந்து, பக்தர்கள் திருஆவினன்குடியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மலைக்குக் கிளம்பினால் அடிவாரம் சன்னதி வீதி, அய்யம்புள்ளி சாலை என அனைத்துப் பகுதியிலும் சாலையின் இருபுறமும் உள்ள கடைகள், திருமண மண்டபங்கள், மடங்களில் இருந்து கொட்டப்படும் பாலித்தீன் மற்றும் உணவுக் கழிவுகள் மலைபோல்குவிந்து கிடக்கின்றன. 

இதனால் ஏற்படும் துர்நாற்றத்தினால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் கு. நாகராஜன் உத்தரவின்பேரில், நகராட்சி நிர்வாகம் பழனி நகரை பாலித்தீன் இல்லாத நகராக மாற்ற முயற்சி எடுத்து வருகிறது. இருப்பினும், இம்மாதிரியான குப்பைக் கூளங்களால் கோயில் நகரம், குப்பை நகரமாக மாறி வருகிறது. எனவேதான், முன்பிருந்த மாவட்ட ஆட்சியர் வள்ளலார், குப்பைகளைக் கொட்டும் கடைகள் மீதும், உணவுக் கழிவுகளைக் கொட்டும் திருமண மண்டபங்கள், மடங்கள் மீதும், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மூலம் அபராதம் விதித்து, கடும் நடவடிக்கை எடுத்தார். 

அதனாலேயே, கடைக்காரர்கள் குப்பைகளை சேகரித்து, நகராட்சி வாகனங்கள் வரும்போது அவற்றைக் கொட்டி வந்தனர். தற்போது, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததால், புனித நகரம் நோய் பரப்பும் நகராக மாறிவருகிறது. -தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.