Tuesday, September 6, 2011

கழிப்பறை வசதிகளற்ற பள்ளிக் கூடங்கள்-ஓர் உதாரணம்


 சென்னைநுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரமற்ற முறையில் இருக்கும் கழிப்பறைகள்.
அத்தியாவசிய தேவையான தூய்மையான கழிவறைகள் உள்ளிட்டவைகூட இல்லாமல் இயங்கி வரும் நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா என்ற கேள்வி மாணவர்கள், பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.

நுங்கம்பாக்கம் (மண்டலம் 7) ராஜாஜி தெருவில் செயல்பட்டு வருகிறது மாநகராட்சி பள்ளியான ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப் பள்ளியில் சுமார் 1,500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.ஆனால், இப் பள்ளியில் அடிப்படை வசதிகள்கூட மாணவர்களுக்கு செய்து தரப்படவில்லை என்பது பெற்றோரின் புகாராக உள்ளது. 

ஒரு பள்ளியில் கல்வித் தரம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவுக்கு முக்கியமானது மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்.சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல், தூய்மையான கழிவறை வசதிகள் உள்ளிட்ட வசதிகளைத் செய்து தர வேண்டியதே அரசின் கடமையாகும். ஆனால், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்தப் பள்ளியில் மேற்குறிப்பிட்ட வசதிகள் ஏதுமில்லை.

1,500 மாணவர்களுக்கு புதர் செடிகளே கழிப்பறை: ஒரு பள்ளியில் இருக்கும் அடிப்படை வசதிகளை கருத்தில் கொண்டே அப்பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவது வழக்கம். அது மட்டுமல்லாமல், கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒரு பள்ளியை ஆய்வு செய்யும் போது அங்குள்ள கழிவறை வசதிகளையே முதலில் சோதனை செய்வார்கள்.ஆனால், 1,500 மாணவர்கள் பயிலும் இப் பள்ளியில் ஒரு கழிப்பறைகூட ஏற்படுத்தி தரப்படவில்லை. 

இதனால், மாணவர்கள் மைதானத்தில் இருக்கும் புதர்செடிகள் அடங்கிய பகுதியிலேயே சிறுநீர், மலம் கழிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதைவிட, மோசமான நிலைமை என்னவென்றால், இந்த இடத்துக்கு அருகிலேயே பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் வகுப்பறைகள் உள்ளன. இதனால் கடும் துர்நாற்றத்தின் மத்தியில்தான் மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலை உள்ளது.மேலும் இங்கு பெயருக்கு கட்டப்பட்டிருக்கும் கழிவறைகள் கற்கள், மண்ணால் மூடப்பட்டு அங்கு கழிவறை இருக்கும் சுவடே தெரியாமல் உள்ளது. 

இது குறித்து மாணவர்கள் பல முறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம், மாநகராட்சியின் சார்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஆசிரியர்களுக்கு மட்டும்.... மாணவர்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லாத சூழ்நிலையில், ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு மட்டும் பள்ளியில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

இங்கு எக்காரணத்தை கொண்டும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.சுகாதாரமற்ற குடிநீர்: இப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர்த் தொட்டி வெகுநாள்களாக சுத்தப்படுத்தப்படாததால் தூய்மையற்ற குடிநீரையே மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். 

பல நேரங்களில் குடிநீரில் புழுக்களும், பூச்சிகளும் வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வழிவகை செய்ய வேண்டும் என்பதே மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

தமிழகத்தின்  தலைநகரமாகிய சென்னையிலேயே  இந்தக்  கதி என்றால்,  கிராமங்களில்  எல்லாம் எப்படி இருக்கும்  என்று என்ணிப்பார்த்தால் வேதனையாய்  உள்ளது. கற்பிக்கும்  அசிரியர்கள்  தங்களை மட்டும் பார்த்துக் கொண்டால்  போதுமா?


அந்தத் தொகுதிக்குரிய எம்.பி., எம்.எல்.ஏ. அவரவர் தொகுதி மேம்பாட்டுத்  தொகையை பள்ளிகளின்  சுகாதார மேம்பாட்டிற்கு மட்டும்தான்  பயன்படுத்தவேண்டும் என்று சட்டமியற்றப்பட வேண்டும். குறந்த பட்சம் இய்ற்கை உபாதைகளைக் கழிக்குமிடமாவது வசதியாகவும்,  சுத்தமாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே. நன்றி:-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.