Saturday, September 17, 2011

1265சிறப்புப் பள்ளிகளுக்கு விடியல் எப்போது?

தொழில் நிறுவனங்களில் வேலை செய்துவரும் 14 வயதுக்குள்பட்டவர்களை மீட்டு, பள்ளியில் சேர்த்து கல்வி அளிக்கும் நோக்கத்தில், மத்திய அரசின் தொழிலாளர் துறை மூலம் தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்த பள்ளிகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், விருதுநகர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 1,265 சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 28 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 8 பள்ளிகள் மலை கிராமங்களில் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் உணவு, உடை, பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுவதோடு, மாதந்தோறும் ஊக்கத் தொகையும் வழங்குகிறது.

ஒவ்வொரு பள்ளிக்கும் 2 கல்வியியல் ஆசிரியர்கள், 1 தொழிற்கல்வி ஆசிரியர், 1 எழுத்தர், 1 சமையலர் என மொத்தம் 5 பேர் வேலை பார்த்து வருகின்றனர். மிகக்குறைவான ஊதியத்தில் பணியாற்றிவரும் இந்தப் பணியாளர்களுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு ஊதியம் வழங்கப்படவில்லை.

கடந்த ஜூன் மாதத்தில் பள்ளி தொடங்கப்பட்ட நிலையில், பாட, நோட்டுப் புத்தகங்களும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த மாணவர்களுக்கு மதிய உணவுக்கான அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சத்துணவுத் துறை மூலம் வழங்கப்படுகிறது. ஆனால் காய்கறி மட்டும் ஆசிரியர்கள் வாங்கிகொள்ளவேண்டும் என்றும், இதற்கு ஒரு மாணவருக்கு நாள்தோறும் 80 பைசா என்றும் ஒதுக்கப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பள்ளி பொறுப்பாசியருக்கு வழங்கப்படும் என்றும் கடந்த டிசம்பர் மாதத்தில் அரசு அறிவித்தது.

ஆனால் இதுவரை, இத்தொகை வழங்கப்படவில்லை. இதுபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போன்று, இப்பள்ளி மாணவர்களுக்கும் முட்டை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

கடந்த 6 மாதங்களாக ஊதியம் இல்லாமல், குடும்பச் செலவுக்கு வட்டிக்கு கடன் வாங்கி வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும், இந்த சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு காய்கறி வாங்குவது என்பது கூடுதல் சுமையாக உள்ளது.

மேலும் இந்த மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கவேண்டிய ஊக்கத்தொகை ரூ.100ம் கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை. உணவும், உடையும் வழங்க கூட வசதியில்லாத பெற்றோர்தான், குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.

இந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கத்தான் இந்த பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இந்த பள்ளிகள் குறித்து அரசு அக்கறை கொள்ளாமல் இருப்பதால், இப்பள்ளிகளின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. பள்ளிகளை நிர்வகிக்கும் தொண்டு நிறுவனங்களும், ஊதியம் இல்லாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்களை கண்காணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஊதியம் இல்லாமல் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஆசிரியர்களால், மாணவர்கள் மீது கவனம் செலுத்த முடியவில்லை. புத்தகம், சீருடை, உணவு, உதவித்தொகை போன்ற இலவசங்களால், பெற்றோர் உதவியை எதிர்பார்க்காமல், மறுவாழ்வுக்கான திசையை நோக்கிப் பயணித்த இந்த குழந்தைகள், பல மாதங்களாக இந்த சலுகைகளைப் பெற வழியில்லாத நிலையில் உணவு, உடை தேடி மீண்டும் தொழில் நிறுவனங்களிலும், பண்ணை வீடுகளிலும் அடைக்கலம் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பள்ளிகள் மீது புதிய அரசின் கடைக்கண் பார்வை கிடைப்பது எப்போது?

0 comments:

Post a Comment

Kindly post a comment.