சினிமா காட்சிகளில் வருவதுபோல், தூக்கு மேடைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகக் கூட தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிய சம்பவங்கள் சுதந்திர இந்தியாவில் நடந்ததுண்டு என்று சிறைத் துறையின் மூத்த அதிகாரிகள் சில சம்பவங்களை குறிப்பிட்டனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை 11 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
இவர்களை முன்னிறுத்தி, மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற போராட்டத்தை தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ்ஈழ விடுதலைக்கு ஆதரவான அமைப்புகள், தூக்குத் தண்டனை கூடாது என வலியுறுத்தி வரும் தன்னார்வ இயக்கங்கள் தொடங்கியுள்ளன.
தூக்குத் தண்டனையை செப்டம்பர் 9-ம் தேதி எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற நீதிமன்ற முறையீடுகள், தமிழக முதல்வரின் அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யும் உத்தரவு பெற முயற்சித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து எடுத்து வருகின்றனர்.
தூக்குத் தண்டனை கைதிகளும் முதல்வருக்கு முறையீட்டு மடல் அனுப்பியுள்ளனர்.இந்நிலையில், சிறைத் துறை அதிகாரிகளிடம் தூக்கு மேடை குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், என்னென்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பது குறித்தும் ஊடங்களைச் சேர்ந்தோர் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனாலும் சிறைத் துறை அதிகாரிகள் "வழக்கமான நடைமுறைகள்தான், இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை' என்ற ஒரே பதிலை சொல்லத் தொடங்கினர்.தமிழகத்தில் 13 ஆண்டுகளாக எந்த தூக்குத் தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை. வேலூர் மத்தியச் சிறையில் 28 ஆண்டுகளாக எந்த தூக்குத் தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை
.இந்நிலையில், தண்டனை கைதிகள் அனுபவித்த 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது, அவர்களின் உயிரை காப்பாற்ற பல இயக்கங்கள் போராடுவது போன்றவற்றால் தூக்குத் தண்டனை எந்த நேரத்திலும் ரத்தாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகாரிகள் மட்டத்தில் கூட நிலைகொண்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர், 1997-ல் ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி சிறையில், 23 பேர் உயிரிழப்புக்கு காரணமான இரு குற்றவாளிகள் கடைசி நேரத்தில் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிய சம்பவத்தை விவரித்தார்.
இருவரின் கருணை மனு குடியரசுத் தலைவரால் அப்போது நிராகரிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து தண்டனையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் சிறைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். தூக்கிலிடும் தேதி நெருங்கியபோது மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அவர்கள் 2-வது முறையாக மனு செய்தனர். மறுநாளே உச்சநீதிமன்றத்தையும் அணுகினர்.குடியரசுத் தலைவரின் பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரினர். இதை நீதிமன்றம் ஏற்றது. பின்னர் இவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது என்று அண்டை மாநில சம்பவத்தை உதாரணம் கூறினார்
அந்த அதிகாரி.சட்டரீதியான நடவடிக்கைகள், அரசியல் தலையீடுகள், கருணை மனு நிராகரிப்புக்கு எடுத்துக் கொண்ட காலஅவகாசம் உள்ளிட்ட காரணங்களால் 72 பேர் நாட்டில் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். நன்றி ;- தினமணி வேலுர்ர் பதிப்பு.
Sunday, August 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
இவர்களுக்கும் அதே போல தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு கண்டிப்பா உண்டு என நம்புவோம்.
ReplyDelete