Sunday, August 28, 2011

இருபத்தி ஐந்து ஆண்டுகாலக் கோரிக்கை நிறைவேறுமா?நாற்பது கிராம மக்கள் ஏக்கம் தீருமா?


திருத்தணி: நந்தி ஆற்றில் தரைப்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 25-ஆண்டுகளாக திருத்தணி நகர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசாவது நந்தி ஆற்றில் தரைப்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் அருகில் நந்தி ஆறு ஓடுகிறது. ஆற்றின் வலது பக்கத்தில் ஸ்ரீ கோட்ட ஆறுமுக சுவாமி திருக்கோயிலும், இடது பக்தத்தில் ஸ்ரீ வீரட்டீஸ்வரர் திருக்கோயிலும் உள்ளன. ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள இத் திருகோயில்களுக்கு தினசரி வரும் பக்தர்கள் ஆற்றை சிரமத்துடனே கடந்து செல்ல வேண்டியுள்ளது.

திருத்தணி அருகே உள்ள காசிநாதபுரம், வேலஞ்சேரி, சத்திரஞ்சயபுரம், சீனிவாசபுரம், விநாயகபுரம், பெருங்களத்தூர், முஸ்லிம் நகர், உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளி மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளிகளுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல குறுக்கே நிற்கிறது இந்த நந்தி ஆறு. திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கும் கிராமப்புற நோயாளிகளும் அரசு பொதுமருத்துவமனைக்கு செல்ல இந்த நந்தி ஆற்றை கடந்தே செல்ல வேண்டும்.

தற்போது அடிக்கடி மழைபெய்து வருவதால் அவ்வப்போது பெய்யும் கனமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆபத்தான நிலையில் நந்தி ஆற்றில் இறங்கி சிரமத்துடனே கடந்து செல்ல வேண்டியுள்ளது. வரும் காலங்களில் இதுபோல் பலத்த மழை பெய்யும்போது ஆற்றில் 10-அடிக்கு மேல் தண்ணீர் ஓடும்போது ஆற்றைக் கடக்க முடியாமல் போகும்.

அப்போது பள்ளி, மருத்துவமனை ஆகியவற்றுக்குச் செல்ல சுமார் 4 கி.மீ. தூரம் சுற்றிவர வேண்டும். நந்தி ஆற்றில் தரைப்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக நகராட்சியிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் நகர வாசிகள் போராடி வருகிறார்களே தவிர இதுவரை எவ்வித பயனுமில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 2001-2006 ஆம் ஆண்டில் கூட திட்டக்குழுக் அதிகாரிகள்ல் இந்த நந்தி ஆற்றை பார்வையிட்டு தரைப்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக தெரிவித்துவிட்டு சென்றனர். ஆனால் அதன்பிறகு வந்த தமிழக அரசு அதை அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆண்டுக்காண்டு இந்த நந்தி ஆற்றை மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் வந்து பார்வையிட்டு செல்கிறார்களே தவிர இதுவரை தரைப்பாலம் கட்ட நடவடிக்கை ஏதும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நெரிசல் குறையும்: சென்னை, திருவள்ளூர், ஆந்திர மாநிலம் நகரி, புத்தூர், ரேனிகுன்டா, திருப்பதி, நாகலாபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் பஸ், லாரி, வேன் மற்றும் கனரக வாகனங்கள் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல கண்டிப்பாக திருத்தணி நகருக்குள் வந்தே செல்ல வேண்டியுள்ளது. அப்படி தினசரி வரும் வாகனங்கள் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

மேலும் திருவிழா காலங்களிலும், மூகூர்த்த நாள்களிலும் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை ஆகிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஆனால் திருத்தணி நந்தி ஆற்றில் தரைப்பாலம் கட்டினால் திருத்தணியில் ஏற்படும் வாகன நெரிசலை கண்டிப்பாக தடுக்க முடியும்.

தற்போது பருவமழைக்காலம் தொடங்கியுள்ளதால் நந்தி ஆற்றில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் ஓடுகிறது. இதனால் நந்தி ஆற்றை கடக்க பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு கடந்து செல்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து திருத்தணி நந்தி ஆற்றில் தரைப்பாலம் கட்ட வேண்டும் என நகர வாசிகள் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?


சனிக்கிழமைதோறும் தினமணியில் மக்களின் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் குறித்த கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. அண்மையில் வெளியிடப்பட்டதே இது. தினமணிக்கு நன்றி.

சாதாரண அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் மாறும்பொழுது புதிதாக வருபவர் சில ஆயிரங்களைச் செலவிட்டுத் தன் வசதிகளைப் பெருக்கிக் கொள்வார். அரசியல்வாதிகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்.

ஆனால். சென்னைப் பெரு நகரிலே தெருப்பெயர்கள் தெளிவாகத் தெரிவதற்கே63 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

கிராமங்களில் உள்ள குறைகள் நீங்கிட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

0 comments:

Post a Comment

Kindly post a comment.