Friday, August 26, 2011

மீன் விற்கும் மொழி பெயர்ப்பாளர்! :ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு


மீன் வியாபாரம் செய்து கொண்டே ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு நூல்களை மொழிபெயர்க்கும் எழுத்தாளர் பெரு.முருகன்:

”நான் பிறந்து வளர்ந்ததெல்லாம், ஜாம் பஜாரில் தான். மீன் விற்பது எங்கள் குடும்பத் தொழில். குடும்பத்தில் கல்லூரிக்குப் போய் படித்த முதல் ஆள் நான் தான். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் எம்.ஏ., முடித்தேன். துறைமுகத்தில் அரசு வேலைக்காக முயற்சி செய்தேன். அது கிடைக்கவில்லை. குடும்பத் தொழிலையே செய்வோம் என்று, மீன் விற்கும் தொழிலில் இறங்கிவிட்டேன்.

அம்மா, தம்பி, அக்காவுடன் சேர்ந்து நானும் வியாபாரம் செய்கிறேன். என் மனைவியும் பட்டதாரி தான். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். எனக்கு ஒரே மகன், மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.

பல்கலைக்கழகத்தில் ஆங்கில வழியில் தான் படிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்காக சின்னச் சின்ன நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பழகினேன். இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டபோது, ஆங்கிலத்தில் உள்ள நல்ல படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்கலாம், என்ற எண்ணம் தோன்றியது. முழு மூச்சாக மொழிபெயர்ப்பில் இறங்கினேன்.

மீன் விற்கும் திண்ணைக்கு அருகிலேயே, ஐந்துக்கு ஐந்து அடியில், ஒரு அறையை வைத்துள்ளேன். அங்கு எழுத்தாளர்களின் நூல்களை வைத்துள்ளேன். அவ்வப்போது, படிப்பேன். "ட்ரெனா பால்ஸ்' என்ற பிலிப்பைன்ஸ் எழுத்தாளர் எழுதிய, "போப் பார் த பிளவர்ஸ்' என்ற பிரபலமான குழந்தைகள் சிறுகதையை, "பூப்பூவாய்' என்று தமிழில் மொழி பெயர்த்தேன். கிரேக்க காவியமான, "ஒடிசியை' எழுதிய, ஹோமரின் இன்னொரு படைப்பான, "பெட்சைட் ஒடிசி' என்ற நூலை, "பள்ளியறை ஒடிசி' என்று தமிழ்ப் படுத்தியிருக்கிறேன்.

நிரந்தர வருமானம் கிடைக்கும்படி, வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படி கிடைத்தால், மீன் விற்கும் வேலையை விட்டுவிட்டு, முழு மூச்சாக இலக்கியத்தில், இறங்கிவிடுவேன். ” என்று கூறுகின்றார்.

முருகனின் ஆங்கிலப் புலமை குறித்து வியப்புக் கொள்ளலாம். பெற்றோர், படிக்கும் பள்ளி, சிறப்புப் பயிற்சி என்று தகிடுதித்தம் போட்டாலும் பலருக்கு வராத ஆங்கிலம் முருகனுக்குக் கைவரப் பெற்றது பாராட்டப்படவேண்டிய செயல். தமிழ் பேப்பரை இணைய தளத்தில் நடத்திடும் பத்ரி சேஷாத்ரி இத்தகையோரைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றார். யாராவது உதவலாமே.

1 comments:

  1. ஆமாம் இத்தகையோருக்கு யாராவது உதவலாமே.
    www.panangoor.blogspot.com

    ReplyDelete

Kindly post a comment.