Wednesday, August 31, 2011

சிங்கப்பூர் ஜேக் சிம்மும், சென்னை வெங்கடெஸ்வரலு மாத்திகாவும்
கழிப்பறையில் சிகரெட் பிடிக்கக் கூடாது. பான்பராக் போடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். இப்படியெல்லாம் செய்வதால்தான் கழிப்பறை இவ்வளவு சுத்தமாககு.

35 ஆண்டுகளுக்கு முன்பு. சென்னை ராயபுரம் பகுதி. பழைய ஆடுதொட்டிச் சாலை. இரவு 7.00 மணி. குடிசைக்கு வெளியே வெங்கடேஸ்வரலு மாத்திகா என்ற சிறுவன் வேலைக்குப் போன தனது அம்மா, அப்பாவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். பள்ளிக்குச் சென்றுவிட்டு வந்து கை, கால்களைக் கூடக் கழுவவில்லை. முதலில் அம்மா வருகிறார். சிறிதுநேரம் கழித்து அப்பா. சிறுவன் துள்ளிக் கொண்டு ஓடிப் போய் அப்பாவின் கைகளுக்குள் புதைய ஆசைப்படுகிறான். அருகே சென்றவுடன் அப்பாவின் உடலிலிருந்து வரும் நாற்றமும், சாராய நெடியும் அவனைத் தள்ளி நிற்க வைக்கின்றன. அன்பான ஓர் அரவணைப்புக்கு ஏங்கிய அவன் மனதில் துயரம். சோர்ந்த முகத்துடன் தலை கவிழ்ந்து உட்கார்ந்துவிடுகிறான்.அவனுக்கு மட்டுமில்லை. அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான குழந்தைகளின் நிலையும் இதுதான்.

ஆனால் அவர்கள் பெரியவர்களானதும் அதே துப்புரவுத் தொழிலுக்குத்தான் போகிறார்கள். நாற்றமடிக்கும் சாக்கடைக்குள்ளும், கழிப்பறைகளுக்குள்ளும், குப்பைகளுக்குள்ளும் சிக்கித் தவிக்கிறது அவர்களுடைய வாழ்க்கை. அவன் பத்தாம் வகுப்பு முடித்ததும் துப்புரவு வேலைக்குப் போகாமல், அதிலிருந்து மீண்டு வேறு வேலைக்குப் போக நினைக்கிறான். கடும் முயற்சிக்குப் பின் அவனுக்கு என்இபிசி ஏர்லைனில் டெக்னிகல் ஹெல்ப்பராக வேலை கிடைக்கிறது. ஒரு சில ஆண்டுகளில் என்இபிசி ஏர்லைன் வேலை இல்லாமற் போகிறது. அப்போது வயது 36. மனைவி, குழந்தைகளை வைத்துக் கொண்டு வேலை இல்லாமல் என்ன செய்வது?யோசிக்கிறார் வெங்கடேஸ்வரலு மாத்திகா.

அவருக்கு மட்டுமல்ல, அவரைப் போன்ற எல்லாருக்கும் சேர்த்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தஎன்ன செய்யலாம் என்று யோசித்ததில், 2000 ஆம்ஆண்டில் ஆதி ஆந்திரா இளைஞர் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஆரம்பிக்கிறார்.

அதற்குப் பின்பு இப்போதுதான் நாம் அவரைச் சந்திக்கிறோம். அவரை நாம் சந்தித்த இடம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு கட்டணக் கழிப்பறை. கழிப்பறையின் உள்ளே நுழைகிறோம். கழிப்பறையின் சுவர்கள், தரைகள் எல்லாம் டைல்ஸ் ஒட்டப்பட்டிருக்கின்றன. உள்ளே நுழைந்ததும் வரவேற்கிறது வண்ண மீன் தொட்டி. காற்றில் மிதந்து வருகிற நறுமணம், மெல்லிய இசை வழிந்து காதில் இனிக்கிறது. சாதாரணமாகக் கட்டணக் கழிப்பறைகளில் நாம் கண்டு முகம் சுளிக்கிற எவையும் இங்கே இல்லை. தரையில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை.

கழிப்பறை நம் வீட்டைவிடச் சுத்தமாக இருக்கிறது. உள்ளே போனவுடன் கை குலுக்கி வரவேற்கிறார் வெங்கடேஸ்வரலு மாத்திகா. அங்கே உள்ள ஒரு சிறிய அறையில் பிளாஸ்டிக் ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்கிறோம். ""நான் ஏர்போர்ட்டில் வேலை செய்த போது விமானங்களில் உள்ள கழிப்பறைகளைப் பார்த்திருக்கிறேன். மிகவும் சுத்தமாக இருக்கும். நமது பொதுக் கழிப்பறைகளைவிட ஆயிரம் மடங்கு சுத்தத்துடன் இருக்கும்.

இதைப் போல சுத்தமாக நமது மக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை வைத்துக் கொள்ள முடியாதா? என்ற எண்ணம் எனக்கு அப்போதே தோன்றிவிட்டது. ஏர்போர்ட்டில் வேலை இல்லாமற் போனதும், கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் வேலையை எடுத்துச் செய்தால் என்ன? என்று தோன்றியது. பல கடுமையான முயற்சிகளுக்குப் பின்பு உயர்நீதிமன்ற வளாகத்திலும், காசிமேடு பகுதியில் உள்ள மெட்ராஸ் போர்ட் ட்ரஸ்ட்டின் மீன்பிடித்துறைமுகத்திலும் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.

உயர்நீதிமன்ற வளாகத்திலேயே அடிஷனல் லா சேம்பர் கட்டிடத்தில் 23 கழிப்பறைகளைப் பராமரிக்கிறோம்.கழிப்பறை சுத்தமில்லாமல் இருப்பதற்கு தரையில் தண்ணீர் சிந்துவதே முக்கியமான காரணம். எனவே தரையில் தண்ணீர் இல்லாமல் எப்போதும் பார்த்துக் கொள்கிறோம். காலை ஏழு மணிக்கு ஒருமுறையும், 11 மணிக்கு ஒருமுறையும் ஃபினாயில் போட்டு கழிப்பறையை முழுக்கச் சுத்தம் செய்கிறோம்.கழிப்பறையைப் பயன்படுத்தும்

சிலர், சரியாகத் தண்ணீர் ஊற்றாமல் போய்விடுவார்கள். அடிக்கடி அதைக் கண்காணித்துச் சுத்தம் செய்கிறோம்.கழிப்பறையில் சிகரெட் பிடிக்கக் கூடாது. பான்பராக் போடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். இப்படியெல்லாம் செய்வதால்தான் கழிப்பறை இவ்வளவு சுத்தமாக இருக்கிறது. பெண்களுக்கான கழிப்பறையில் சானிட்டரி நாப்கின்களைப் போட தனியாகக் கூடை வைத்திருக்கிறோம். இதை வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.இதைத் தவிர வேறு சில பணிகளையும் செய்கிறோம்.

சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் நகரைச் சுத்தம் செய்து குப்பையை ஓர் இடத்தில் சேர்த்து வைப்பார்கள். அவற்றை லாரிகளில் எடுத்துச் சென்று உரிய இடங்களில் கொட்டும் வேலையைச் செய்கிறோம். 25 லாரிகளை வைத்துத் தினமும் அந்த வேலையைச் செய்கிறோம்.அதுபோல பெரிய பங்களாக்கள், வீடுகளில் உள்ள கழிப்பறைகளையும் சுத்தம் செய்து கொடுக்கிறோம். எங்களுக்கு போன் செய்தால் போதும். எங்களுடைய ஆட்கள் காரில் போய் சுத்தம் செய்து கொடுப்பார்கள். எங்களுடைய முன்னோர்கள் மனிதக் கழிவை தலையில் சுமந்து சென்று சுத்தப்படுத்தினார்கள்.

சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம் செய்தார்கள். உடலில் வரும் நாற்றத்தை மறக்க மாலை வேளைகளில் சாராயம் குடித்தார்கள். உடம்பைக் கெடுத்துக் கொண்டார்கள். குறைந்த கூலியில் வறுமையில் வாடி இறந்தார்கள்.இப்போது நாங்கள் அதே வேலையை மிகவும் சுகாதாரமான முறையில் செய்கிறோம். எங்களிடம் பணி செய்யும் எல்லாரும் சீருடை அணிந்து தேவையான உடை, பாதுகாப்புக் கருவிகளுடன்தான் வேலை செய்கிறார்கள்.

கழிவறையைச் சுத்தம் செய்வதற்கும் கூட நவீன கருவிகளைப் பயன்படுத்துகிறோம். இப்போது சென்னை மாநகராட்சியின் சுத்தம் செய்யும் பொறுப்பை நீல் மெட்டலைப் போன்று சென்னை நகரைச் சுத்தம் செய்யும் பணியை எங்களிடம் ஒப்படைத்தால் இன்னும் சிறப்பாகச் சுத்தம் செய்து காட்டுவோம்.

கடலூர் நீதிமன்ற நீதிபதி ராயபுரம் பக்கமாகப் போனவர் எங்களது பராமரிப்பில் உள்ள கழிப்பறையைப் பார்த்திருக்கிறார். அங்குள்ள சுத்தத்தைப் பார்த்த அவர், என்னைப்பாராட்டி, கடலூருக்கு அழைத்திருக்கிறார்.அங்குள்ள நீதிமன்ற வளாக கழிவறையைச்சுத்தம் செய்யும் பணி எங்களுக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறோம்.

அப்படிக் கிடைத்தால், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கென்றும், திருநங்கைகள் பயன்படுத்துவதற்கென்றும் தனித்தனிக் கழிப்பறைகளை அமைப்போம். மேலும் கழிப்பறைகளின் பின்பக்கத்தில் பயோ கேஸ் அமைப்பை நிறுவி, அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவோம்'' என்றார்.


சென்ற2009நவம்பரைந்தாம் தேதியிட்ட எனது வலைப்பதிவின் மீள்பதிவு.

உலகத்தில் 40 சதவிகிதம் பேர்,இந்தியாவில் 50 சதவிகிதம் பேர்,கஃகூஸ் இன்றித் தத்தளிக்கின்றனர்.

ஜேக் சிம் (JACK SIM)ஓர் சிங்கப்பூர் இளைஞர்,24 வயது (1998)மக்களுக்குப் பயனுள்ளவராக வாழ்ந்திட ஆசைப்படுகின்றார்.செய்துகொண்டிருந்த வியாபாரத்தை விட்டுவிடுகின்றார்.சமூகத்தின் சுகாதாரம்-ஆரோக்கியம் பற்றிச் சிந்திக்கின்றார்.TOILET-பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்கின்றார்.

REST ROOM ASSOCIATION OF SINGAPPORE(RAS-1998)

WORLD TOILET ORGANIZATION(WTO-2001)

WORLD TOILET COLLEGE(WTC-2005)

உருவாக்கப்படுகின்றன.

50-க்கும் மேற்பட்ட உலக அமைப்புக்களின் கூட்டமைப்பு-SUSTAINABLE SANITATION ALIANCE
ஜேக்-ஐ அரவணைத்துக் கொள்கின்றது.சிங்கப்பூர் பசுமைத்த்திட்டப் பரிசு-2012வழங்கிப் பாராட்டுகின்றது,சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் அமைப்பு.(2004)ASHOKA GLOBEL FELLOW- என்று உலகம் போற்றுகின்றது.உலகப் புகழ், TIME MAGAZINE,சுற்றுப்புறச் சூழலின் கதாநாயகன் (2008)
என்று பாராட்டி மகிழ்ந்தது.


இன்று JAKE SIM,WORLD ECONOMIC FORUM'S GLOBAL AGENDA COUNCILS (GEC)FOR WATER SECURITY AND SOCIAL ENTREPRENEURSHIP-ன் முக்கியப் பிரமுகர்.பொது வாழ்வில் ஈடுபடத் துவங்கும் பொழுது பட்டப்படிப்பு இல்லாத 24-வயது இளைஞர்.இன்று (2009) ஓர் பல்கலைக் கழக POST GRADUATE STUDENT.தண்ணீர் குறித்துப் போதிக்கும் VISITING PROFESSOR.


இயல்பான வழ்க்கைக்கே போராட வேண்டியுள்ள இந்தியச் சூழலில் இங்கொன்றும் அங்கொன்றுமாக நற்பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.அவர்கள் அனைவரும் ஐக்கியமாக வேண்டும்.சிங்கப்பூர் இளைஞரைப்போல் வெற்றியும் பெறவேண்டும்.


இந்தியாவில் எல்லோருக்கும் உறைவிடம் கிடையாது.அப்படியே இருந்தாலும் கழிப்பறை வசதிகள் கிடையாது.குடிசைவாழ் மக்கள்-சாலையோரங்களில் வசிப்போர் நடைபாதைவாசிகள் நாள்தோறும்படும் துயரங்கள் சொல்லவும் முடியுமோ?


கழிப்பறை வசதியுள்ள பல பகுதிகளில்பாதாளச் சாக்கடை வசதிகள் இல்லை.அடுக்கு மாடி வீடுகள் ஆயிரமாயிரம் எழுப்பப்படும் சென்னை மாநகரின் புறநகர்த் தெருக்களில் தினந்தோறும்/ மழைக்காலங்களிலும் மக்கள் நடமாடுவது கழிப்பறை/சாக்கடைநீர்மீதுதான். சுத்தம் சோறு போடும் என்று சொல்லிக்கொண்டு மனிதக்கழிவுகளை வாழும்பகுதிக்குள்
சேமித்து வைக்கின்றோம். நிரம்பி வழிந்து சுத்தப்படுத்தலும் அடைத்துக்கொண்டால் அல்லல்படுதலும் சகித்துக்கொள்ளப் பழகிவிட்ட சங்கடங்கள்.


மார்ட்யர் (MARTYAR) என்ற ஊர், பஞ்சாபில், மாவீரன் பகத்சிங் பிறந்த புண்ணிய பூமி. அருகில் உள்ளது கரோடி என்னும் சிற்றூர்.Mr.GILL என்ற வெளிநாட்டுவாழ்இந்தியரின்சொந்தக் கிராமம். அவரது ஆலோசனையில் அங்கே வீடுதோரும் கழிப்பறைகள் அத்தனையும் பாதாளச் சாக்கடைகளில் இணைப்பு. ஊருக்குவெளியே கொண்டுசென்று சூரியவெளிச்சம்படும் திறந்த வெளியில் உலரவைத்து நீரைப்பிரித்துச் சுத்திகரிப்பு. எஞ்சியவை விவசாயத்திற்கு உரமாகப் பயன்பாடு.

பகத்சிங் பிறந்தமண்ணின் பக்கத்துக் கிராமம் சுற்றுப்புறச் சூழல் பேணும் பெருமையை வாய்ப்புக்கிடைக்கும் பொழுதெல்லாம் எடுத்துச் சொல்லி வருபவர் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள்.

ஆதி ஆந்திரா இளைஞர் கூட்டமைப்பாளர் வெங்கடேஸ்வரலு மாத்திகா சென்னையின் ஜேக் ஆகிக் கொண்டிருக்கும் நற்பாங்கினை தினமணி கதிர்21.0௮.௨0௧௧ இணைபு கோடிட்டுக் காட்டியிருக்கின்றது.

சுகாதாரப் பண்யில் தமிழகத்தில் செய்யவேண்டுவன நிறைய உள்ளன. தமிழகத்தில் கழிப்பறைகளே இல்லை என்கிற நிலைமையை உருவாக்கவேண்டும். சென்னை, கடலூர் என்றுதொடங்கியுள்ள பணி தமிழகம் முழுவதும் செல்லட்டும். அதிலும் குறிப்பாக பள்ளிக் கூடங்களில் மட்டுமாவது இந்த நிலைமை ஏற்படுத்தப் படவேண்டும். அந்தந்தத் தொகுதிவாழ் மக்கள் பிரதிநிதிகளின் சமூக மேம்பாட்டுக்கான நிதி பள்ளிக்கூடங்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டும்.