Sunday, August 28, 2011

அமெரிக்காவிடம் சரணடைகிறார் சிறிலங்கா அதிபர்

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் விடயத்தில் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே சிறிலங்காவையும் அணுக வேண்டும் என்று நாளை கொழும்பு வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவி செயலர் றொபேட் ஓ பிளேக்கிடம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏனைய நாடுகள் விடயதில் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்கா, சிறிலங்கா விடயத்தில் மாறுபாடான கொள்கையைக் கடைப்பிடித்து தனிமைப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது.

எனவே உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே தம்மையும் நடத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவிடம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

நாளை கொழும்பு வரும் றொபேட் ஓ பிளேக்கிடம் இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் பேசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க விருப்பம் வெளியிட்டிருந்தார்.

இந்தச் சந்திப்பு நாளை நடைபெறும் என்று கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையை முன்வைப்பதற்காகவே பிளேக்கைச் சந்திக்க மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக அமெரிக்காவுடன் மோதல் போக்கை வெளிப்படுத்தி வந்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது சற்று இறங்கிப் போக முடிவு செய்துள்ளதையே இது வெளிப்படுத்துவதாகவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிளேக் வலியுறுத்தி வந்தநிலையில், கடந்தமுறை கொழும்பு வந்த அவரை சிறிலங்கா அதிபர் சந்திக்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரம் அனைத்துலக அளவில் சிறிலங்காவுக்கு நெருக்கடிகளை அதிகரித்து வரும் நிலையிலேயே, ஏனைய நாடுகளைப் போன்று தம்மையும் அணுகுமாறு அமெரிக்காவிடம் சரணடைய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி:- புதினப் பலகை :-[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 01:33 GMT ] கார்வண்ணன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.