Monday, August 29, 2011

நாகராஜனும் சிங்கராஜனும் ஒரே கூண்டில்!



புள்ளைங்கள வச்சு சமாளிக்கறதே பெரும்பாடாக இருக்கு...'' என்று ஒன்றிரண்டு குழந்தைபெற்றவர்களே அலுத்துக் கொள்ளும் காலம் இது. ஆனால் கோவை மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில், தான் பெறாத பல ஜீவன்களைத் தனது குழந்தைகளாகப் பாவித்து, பராமரித்து வருகிறார் சிங்கராஜன்!

ஒரு மதிய வேளையில், கொடிய விஷமுடைய நாகப்பாம்புகளின் கூண்டைத் தனது உயிரைப் பணயம் வைத்து சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்த சிங்கராஜன் நம்மிடம் பேசியதில் இருந்து...""இங்குள்ள முதலை, ஆமை, முயல், நரி, மரநாய், பாம்பு, குரங்கு, உடும்பு, காட்டுக்கோழி, மயில், கழுகு போன்ற அனைத்து உயிரினங்களையும்,அவற்றின் குட்டிகளையும் பராமரிப்பதுதான் என்னுடைய வேலை.

இந்த விலங்கினங்கள் எல்லாமே என்னுடைய பிள்ளைகள். இந்த வேலையில், இவற்றின் கூண்டுகளைப் பராமரிப்பதுதான் சற்று சிரமமாக இருக்கும். இதில் உடல் கஷ்டம் எதுவும் கிடையாது. மனதுக்குத்தான் ரொம்ப கஷ்டமாக இருக்கும்.ஏனென்றால், அமைதியாக தூங்கிக் கொண்டும், ஓய்வு எடுத்துக்கொண்டும் இருக்கும் இவற்றை அந்நேரத்தில் தொந்தரவு செய்ய வேண்டி இருக்கிறது.

அண்மையில் பூங்காவில் முதலையொன்று 30-க்கும் மேற்பட்ட முட்டைகளை ஈன்றது.முட்டைகள் பொரியும் குறிப்பிட்ட நாளன்று குட்டிகள் வரவில்லை. அம்முட்டைகளைப் பரிசோதிக்க வந்த கால்நடை மருத்துவர், அவரின் உதவியாளர் முட்டைகள் புதைக்கப்பட்ட இடத்தின் அருகே படுத்திருந்த முதலையைக் கண்டு, கூண்டின் உள்ளே வரத் தயங்கினர். அம்முதலையும் அவர்கள் உள்ளே இறங்கினால், கடிக்க வந்தது.அப்போது நான் கூண்டுக்குள் சர்வசாதாரணமாக இறங்கி, அந்தப் பெரிய தாய் முதலையை அப்புறப்படுத்தினேன். அதன்பிறகே, அவர்கள் கூண்டுக்குள் இறங்கி முட்டைகளைப் பரிசோதித்துப் பொரிய வைத்தனர்.

பூமிக்குப் புதிய வரவுகளான அம்முதலை குட்டிகளை ஒவ்வொன்றாக புதைந்த மண்ணில் இருந்து வெளியே எடுத்து அவற்றைத் தண்ணீரில் விட்டு நீந்தச் செய்தேன். அதைப் பார்த்த பூங்கா இயக்குநர் மிகவும் பாராட்டினார். இதை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.

குரங்குகள் வைக்கப்பட்டுள்ள கூண்டினுள் அவை ஒன்றோடு ஒன்று கடித்துக்கொண்டு, போடும் கூச்சல் சத்தத்தில் யாராக இருந்தாலும் கண்டிப்பாகப் பயப்படுவார்கள். ஆனால், நான் அவை இருக்கும் கூண்டுகளுக்குள் தைரியமாக உள்ளே இறங்கி குரங்குகளை விலக்கிவிட்டபடி கடிபட்ட குரங்குகளுக்கு மருந்து போடுவேன்.

மனிதர்களின் குணம் சுயநலம் நிறைந்தது. சுயநலத்தை மறைத்து வைத்து நாம் எதிர்பார்க்காத நேரத்தில் துரோகம் செய்வார்கள். ஆனால் இந்த விலங்குகளுக்கு விஷம் இருக்கு... என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவற்றை நேசிக்கும்போது அவை நம் அன்பை உணர்ந்து நம்மை ஒன்றும் செய்யாது'' என்றார் மென்மையாய்ப் புன்னகைத்தபடி சிங்கராஜன்!

நன்றி;- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.