புதுவைத் தமிழறிஞருக்கு சாகித்ய அகாதமி விருது
ம.லெ.தங்கப்பா புதுவையில் வாழ்பவர். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியினைத் துவக்கியவர், பின்பு மேலும் படித்துப் பேராசிரியராகத் தன்னை உயர்த்திக் கொண்டவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கட்டுரைகளையும் விட்டு வைக்கவில்லை. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றார்.
”சோளக் கொல்லைப் பொம்மை” என்ற இவரது புத்தகம் சிறுவர்களுக்கான படைப்பு. இதனை, குழந்தை இலக்கிய விருதுக்காக சாகித்ய அகாதமி தேர்ந்தெடுத்துள்ளது. ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கமும், பதக்கமும் , பாராட்டுச் சான்றிதழும் கிடைக்கும் . நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெறப்போகும் விழாவில் வழங்கப்படும்.
அண்மையில் கேரள மாநிலம் திருச்சூரில் சாகித்ய அகாதமியின் விழா நடந்தது. அதில் 24மொழிகளுக்கான குழந்தைகள் இலக்கிய விருதுகளை அறிவிக்கப்பட்டன. தமிழிலக்கியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், புதுவை அன்பர் , ம.லெ. தங்கப்பா.
தமிழக அரசின் பாவேந்தர் விருதினைப் பெற்றுள்ள இவர் தமிழக, புதுவை அரசு தமிழ் வளர்ச்சிக் குழுக்கள் மூலமும் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். . தமிழில் கையெழுத்துப் போடுவதைப் புதுவை அரசு அமுல்படுத்தவில்லை என்பதற்காக, புதுவை அரசு தனக்கு வழங்கியிருந்த கலைமாமணி பட்டத்தைத் துறந்தவர் என்பதும் இவரது தமிழ்ப் பற்றுக்கு மேலும் ஓர் சான்று.
விலைவாசியும், மக்கள் பிரநிதிகளின் சம்பளமும் எவ்வளவோ உயர்ந்துவிட்ட நிலையில் சாகித்ய அகாதமி விருதுத் தொகை நீண்ட நாட்களாக உயர்த்தப்படவில்லையே ஏன்?
தமிழால் வளர்ந்து தமிழையும் வளர்க்கும் ம.லெ. தங்கப்பாவைப் போற்றி வாழ்த்துவோம்.
தெய்வ திருமகனே தொடரட்டும்
ReplyDeleteமுனைவருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete