Wednesday, August 31, 2011

கொத்தடிமைகளாக்கப்படும் பெண் தொழிலாளர்கள்



குடும்பத்தை விட்டுப் பிரிந்து திருப்பூரில் பணியாற்றும் வெளி மாவட்டப் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்குப் பாதுகாப்பான விடுதிகள் இல்லாததால் நிறுவன நிர்வாகங்கள் அளிக்கும் அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுக் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

சர்வதேச அளவில் பின்னலாடை உற்பத்தியில் தனித்துவம் பெற்று விளங்கும் திருப்பூர் நகரில் உள்ள 5,000-த்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அதில், பெரும்பகுதி வெளி மாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில், திருப்பூரில் தங்கிப் பணியாற்றும் தொழிலாளர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள். செக்கிங், பேக்கிங், டெய்லரிங் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் மட்டுமே அதிகளவில் பெண்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

ஆண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதி ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று புகார் கூறப்படுகிறது. திருப்பூரில் வீட்டு வாடகை என்பது மிக அதிகமாக உயர்ந்து வருவதால், பெண் தொழிலாளர்கள் தாங்கள் பெறும் குறைந்த ஊதியத்தை வைத்து தனியாக வீடு எடுத்து தங்க முடிவதில்லை.

தனியாகப் பெண்கள் தங்குவதற்கான பாதுகாப்பான சூழலும் இல்லாததால் நிறுவனங்கள் அளிக்கும் அறைகளிலேயே தங்கிப் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றனர். இதுவே, நிர்வாகங்கள் அப்பெண்களை கொத்தடிமைகளாக்கும் நிலையை ஊக்குவிப்பதாக உள்ளது.

கூடுதல் நேரம் பணியாற்ற வற்புறுத்தப்படுவது, சிறிய அறைகளில் அதிகமான பெணகள் தங்க வைக்கப்படுவது, சுகாதாரமான உணவு பெற முடியாதது என அப்பெண்களுக்கு சுதந்திரமான வாழ்வுரிமை என்பது பல வகைகளில் மறுக்கப்படுகிறது.

திருப்பூரில் அரசு சார்பில், பெண்கள் தங்கும் விடுதிகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப முந்தைய திமுக ஆட்சியின்போது, 1000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் விடுதிகள் கட்டப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் ஜி.சாவித்ரி கூறுகையில், "வேறு மாவட்ட, மாநிலங்களிலிருந்து வேலைக்காக அழைத்து வரப்பட்டு நிறுவன வளாகங்களிலேயே தங்க வைக்கப்படும் பெண்கள் தொடர்ந்து மாதக்கணக்கில் வெளியில் விடப்படுவதில்லை.

அவர்களுக்குத் தேவையான துணிகள் உள்ளிட்ட பொருள்கள், வாரத்தில் ஒருநாள் அங்கேயே கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதுபோன்ற சூழலால் பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர்.இத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க அரசு சார்பில், உணவு வசதியுடன் கூடிய தங்கும் விடுதிகள் கட்டப்படுவது அவசியம்' என்றார்.வாடகைப் பிரச்னை, பாதுகாப்பான சூழல் இல்லாமை போன்ற காரணங்களால் பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது தவிர்க்கப்படும் என்றும் விடுதிகள் கட்டும் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றும் என்றும் நம்பிக்கையோடு உள்ளனர் பெண் தொழிலாளர்கள். அவர்களின் நம்பிக்கை விரைவில் நிறைவேறுமா?


ஆண்களுக்குச் சமமான சம்பளம் பெண்களுக்குக் கொடுக்கப் படவேண்டும் என்ற கோரிக்கயை பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்தோரே எழுப்பவில்லையே ஏன்?

0 comments:

Post a Comment

Kindly post a comment.