நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நடக்க வேண்டிய விசாரணை, இலவச சட்ட உதவி மையத்தில் சில மணி நேரங்களில் தீர்க்கப்படுகின்றன. ஆனாலும் அவ்வப்போது, தீர்க்க முடியாத, சவாலான பிரச்னைகளுடன் சிலர் வரத்தான் செய்கின்றனர்.
சமீபகாலமாக தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் அடிக்கடி கோவை இலவச சட்ட உதவி மையத்துக்கு வருகிறார். கதர் வேட்டி, சட்டை, கையில் பையுடன் வரும் இவரது பிரச்னை, தீர்க்க முடியாத பெரும்பிரச்னையாக இருக்கிறது. "முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தது நான் தான். இதற்காக மத்திய அரசு 14 லட்சம் ரூபாயை பரிசாக அறிவித்தது. ஆனால், இதுவரை தொகை வழங்கப்படவில்லை.
ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை' எனக் கூறியவர், கடிதம் அனுப்பியதற்கான நூற்றுக்கணக்கான ஒப்புகை அட்டைகளையும் காட்டினார். அவர் சொல்வதைக் கேட்டு, சட்ட மைய ஊழியர்கள், அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, அசராமல் அடுத்த "குண்டை' வீசினார் சுப்பிரமணியம்.
"அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கிளின்டனைக் கொல்ல நடந்த முயற்சியை நான் தான் தடுத்தேன். இதற்காக அமெரிக்க அரசு ஏழு கோடி ரூபாய் வெகுமதி அளிக்க உத்தரவிட்டது. இந்த தொகையும் வரவில்லை. அதை எப்படியாவது வாங்கிக்கொடுங்கள்' என்று அவர் கூறியதை கேட்டதும், சட்ட மைய ஊழியர்களுக்கு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.
போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை' என்பது அவரது புகார். "பக்கத்து வீட்டுக்காரர்களாலும், வேலை பார்க்கும் இடத்திலும் அவமானங்கள் பட்டேன். அவர்கள் அழிக்கப்பட வேண்டும்; கைது செய்யப்பட வேண்டும்' என, தெரிவித்துள்ள இவர், "தனக்கு 3000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்' என்றும், மனுவில் கூறியுள்ளார்.
"என் வீட்டுக்கு கோனியம்மன், கருமாரியம்மன் இருவரும் வந்தனர், அவர்களுடன் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததால், கோர்ட்டுக்கு வர தாமதமாகி விட்டது' என்று அவர் கூறியதை கேட்டதும், சட்ட உதவி மைய ஊழியர்களுக்கு மயக்கம் வராத குறை தான். "இந்த இருவரின் விசித்திர புகார்களை எப்படி சமாளிப்பது' என தெரியாமல் சட்ட மைய ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
நன்றி: யாஹூ தினமலர்
0 comments:
Post a Comment
Kindly post a comment.