Saturday, August 27, 2011

775 பள்ளிகள் நிலை உயர்த்த முதல்வர் உத்தரவு : ரூ.419 கோடியே 60 லட்சம் கூடுதல் செலவு

"அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தில், 775 பள்ளிகளை, 419 கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும்'' என்று, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில்
, விதி எண் 110 கீழ், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது என்ற நோக்கத்துடன், மேலும் 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், ஆக மொத்தம் 775 பள்ளிகள், 419 கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும்.

மேலும்
, 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்கள், 315 கோடியே 30 லட்ச ரூபாய் செலவில், இந்த ஆண்டிலேயே ஏற்படுத்தப்படும்.

உடல்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றுக்காக, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

இதனால், இப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயனடைவர். இதற்கு அரசுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 99 கோடியே 29 லட்ச ரூபாய் செலவு ஏற்படும். முத்துக்குமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டப்படி, சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளாகும்.

பொதுப் பாடத் திட்டம் மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இந்த கல்வி ஆண்டில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கல்வியாண்டில் 1,082 கோடியே 71 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இவை ஏற்படுத்தப்படும்.

மேலும், நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து 90 கோடியே 70 லட்ச ரூபாய் செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5 ஆயிரம் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதனால் அரசுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 60 கோடி ரூபாய் செலவு ஏற்படும். பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்த இருக்கும்

இந்த திட்டங்களால், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில் மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்கும் நிலை உருவாகி, உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க வழிவகுக்கும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கழிப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கென்று கணிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது சிறப்பான அம்சம். மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை மாணாக்கர்களின் சுகாதார வசதிகளுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடே கொண்டுவரலாம்.

சமச்சீர் கல்வி என்பது சமமான உள்கட்டமைப்பு வசதிகளையும் உள்ளடக்கியதுதான் என்று கூறியுள்ளமைக்காகத் தமிழக முதல்வரைப் பாராட்டலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.