தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடு தலை செய்யக்கோரி ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் தொடங்கினார்கள். இன்று 4-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.
கடந்த 3 நாட்களாக அவர்கள் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் அருந்து வதால் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டனர். உட்கார முடியாமல் படுத்து இருக்கிறார்கள். அவர்களின் உண்ணா விரதத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 3 பேருடன் அவர்களும் இன்று உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், நடிகர் மன்சூர் அலிகான், கருணாஸ், பாடலாசிரியர் முத்துக்குமார், குனங்குடி அனிபாஆகியோர் வாழ்த்தினார்கள்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பேசியதாவது:- ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம். நம்முடைய எண்ணம் எல்லாம் தூக்கு தண்டனை பெற உள்ள 3 பேரையும் விடுவிக்க போராடுவதுதான். தமிழ் பெண் செங்கொடி உயிரை மாய்த்து இருப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற சம்பவம் தொடரக் கூடாது.
கட்சி-சாதி வேறுபாட்டை மறந்து அத்தனை பேரும் தமிழர்களுக்காக குரல் கொடுப்போம். டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், ஆகியோர் 6-ந்தேதிக்குள் 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்யா விட்டால் வேலூர் சிறையை 10 லட்சம் பேருடன் முற்றுகையிடுவோம் என்று அறிவித்துள்ளனர். அதில் நாம் பங்கேற்போம் என்றார்.
நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில் துக்கு தண்டனை கைதிகள் 3 பேரையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். டி.ராஜேந்தர் பேசும் போது மரண தண்டனை அகற்றப்பட வேண்டும். 3 தமிழர்கள் உயிர் காப்பாற்ற பட வேண்டும். ஒரு செங்கொடி அவர்களுக்காக இறந்து இருக்கிறார். இந்த 3 நிரபராதிகள் உயிர் காப்பாற்ற பட வேண்டும் ஜனாதிபதி கருணை காட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.
அருடன் நிர்வாகிகள் டி.வாசு, எம.எம்.ஆர் மதன் , வி.என் கருணா, ஜெயபாண்டியன், கணேஷ் ஆகியோர் சென்றிருந்தனர். உண்ணாவிரதம் இருக்கும் இடம் அருகே 3 தூக்கு கயிறுகள் இன்றும் தொங்க விடப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.