பஞ்சம், பசி, பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளான சோமாலியா, எத்தியோபியா ஆகிய நாடுகளுக்கு போர்க்கால அடிப்படையில் நேற்று முதல்கட்டமாக 10 டன் உணவு பொருட்களை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்து நடவடிக்கையினை துரிதப்படுத்தியுள்ளதாக ஐ.நா. உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடுடன் அவதிப்படும் குழந்தைகளுக்கு தேவையான மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோமாலியா, எத்தியோபியா ஆகிய நாடுகளில் கடும் பஞ்சம், தலைவிரித்தாடுகிறது. இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் உணவுக்காக, சொந்த நாட்டை விட்டு அண்டை நாடான கென்யாவின் எல்லைப்பகுதிக்கு குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து வருகின்றனர். இவர்களில் ஊட்டசத்து குறைபாடு கொண்ட குழந்தைகளும் அடங்குவர்.
சோமாலியாவில் 2.02 மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவுக்காக கடும் போராட்டத்தினை சந்தித்து வருகின்றனர். இவர்களி்ல் மூன்று வயது முதல் ஏழு வயது குழந்தைகள், ஊட்டசத்து குறைபாடுகளால், உயிருள்ள எலும்பு கூடு போன்று இடுப்புக்கு கீழ் பகுதி சூம்பி போய் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையில் காண்பதற்கே பரிதாப நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் சோமாலியா, எத்தியோபியா நாடுகளை மிகவும் வறட்சி மிகுந்த நாடாக ஐ.நா.கடந்த வாரம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று முதல்கட்டமாக ஐ.நா. உணவு விநியோக திட்டத்தின் கீழ் 10 டன் உணவு பொருட்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
ஐ.நா. உணவு திட்டத்தின் செய்தி தொடர்பாளர் டேவிட் ஓர் கூறுகையில், முதல் கட்டமாக கென்யா எல்லைப்பகுதியில் முகாமிட்டுள்ள சோமாலியா நாட்டு மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளது. அவற்றுடன் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு போதிய மருத்துவசிகிச்சை அளிக்க மருந்து பொருட்களும் விநியோகிக்கப்படவுள்ளதுஎன்றார்.
25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தைகள் 3,500, மூன்று வயது முதல் 6 வயது உள்ளவர்கள் 18 ஆயிரம் பேர், மீதமுள்ளவர்கள் மோசமான பாதிப்புக்கான அறிகுறிகளுடன் உள்ளனர்.இவர்களுக்கு கொழுப்புசத்துள்ள வெண்ணெய் உணவுகள் வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையே சோமாலியாவில் அல்-ஷெபா எனும் பயங்கரவாத அமைப்பினர் அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இவர்களால் நிவாரண உதவி செய்வதில் இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனினும் ஐ.நா.பாதுகாப்புப்படையினர் இவர்களை ஒடுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய ஐ.நா. அறிக்கையின் படி, மேற்கு ஆப்ரிக்க நாடுகளான சோமாலியா, எத்தியோபியா, கென்யாவின் சில பகுதிகளில் 11.3 மில்லியன் மக்கள் உணவு பஞ்சம், வறட்சியால் ஆகியவற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோமாலியா, கென்யா நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள தாதாப் எனும் முகாம் தான் உலகிலேயே மிகப்பெரிய அகதிகள் நிவாரண முகாம் என கூறப்படுகிறது. இங்கு குடிநீர், சுகாதாரம், உறைவிடம் ஆகிய அடிப்படை வசதிகள் இன்றி 3 லட்சம் குடும்பங்கள் வசிப்பதாக கூறப்படுகிறது.
Thursday, July 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.