Monday, January 17, 2011

அய்யப்ப ஸ்வாமியின் நண்பர் வாவர் குறித்த கதை!



வாவர் என்ற முஸ்லீம்,ஸ்வாமி அய்யப்பனின் நண்பராகக் கருதப்படுகின்றார். வாவருக்கான மசூதிதான் மேலே உள்ள படம். இந்த மசூதியானது, கேரள மாநிலம், கோட்டயத்தின், வடகிழக்கில் உள்ள சிறு நகரம்,எருமேலியில் உள்ளது.

அய்யப பக்தர்கள், எருமேலி சென்று, வாவரை வணங்கியபின்னரே, சபரிமலைக்குச் செல்கின்றனர். ஆங்குள்ள ஓர் கல்லின் மீது தேங்காயை வீசி எறிந்து உடைக்கும் பழக்கமே இன்றும் தொடர்கின்றது. இங்கு நடக்கும் பேட்டை துள்ளல் எண்ணும் ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேர்பது வழக்கமாக உள்ளது.

வாவர் பிறந்த இடம், டக்ரிட்டன் தோட்டம் (துர்கிஸ்தான்). அலிக்குட்டி -பட்டும்மா (பாத்திமா) என்போருக்கு மூன்றாவதாகப் பிறந்தவர்,வாவர். செய்டேலி, பைடேலி அவருக்கு முன் பிறந்த சகோதரிகள்.

வாவர் பிறந்தபோது பஞ்சம் தலைவிரித்தாடியது. வயலில் நெல் விளையவே இல்லை. கம்பு, கோதுமை இரண்டுமே வாவரின் உணவாக அமைந்தன. இளமையில் வாவர் முறையாகக் குர்ரான் பயின்றார். வில்வித்தை, வேலி அமைத்தல், கப்பல் கட்டுதல் முதலானவற்றிலும் சிறந்து விளங்கினார். கண்கட்டு வித்தையும் அவருக்கு கைவந்த கலையானது.

அவர் கட்டிய கப்பலிலேயே சாதனைப் பயணத்தை பெற்றோரின் அனுமதியோடு மேற்கொண்டார். அரபிக் கடஅலின் கடற்கரை நகரமான காயன் குளம் சென்றடைந்தார். அதனை ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார். கடற் கொள்ளையர் தொல்லைகள் இருந்தன. பந்தள அரசரின் கீழ் இருந்ததது காயன்குளம். எனவே கடற் கொள்ளையரை அடக்க, பந்தள அரசர், மகன் மணிகண்டனை அனுப்பி வைத்தார்.

காயன்குளம் வந்தடைந்த வாவர் கடற் கொள்ளையராகவே கருதப்பட்டார். மணிகண்டனும் வாவரும் முன்று நாட்கள் தொடர்ந்து போரிட்டனர். வெற்றி, தோல்வி யாருக்கும் இல்லை. பின்னர் நிகழ்ந்த கலந்துரையாடலில் இருவரும் நண்பர்களாயினர். பக்தர்கள் தரும் காணிக்கைகளை இருவரும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொண்டனர்.

எதற்காக இந்த வாவர் கதை? எனது நண்பர் சரவணன், அய்யப்பன் காலத்தில் பாபர் என்ற முஸ்லீம் எப்படி வந்தார் என்று வினவினார். முஸ்லீம்கள் இந்தியாவிற்கு வரும் முன்னரே, அய்யபன் இந்தியாவில் இருந்திருப்பாரே என்பது அவரது கேள்வி.

வாவரின் தந்தையை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு பந்தள மஹராஜா காலத்தில் வந்த வணிகராகக் கொள்ள வேண்டியதுதான். இன்னுமொரு விதமாகவும் முடிவிற்கு வரலாம். அய்யப்பனின் வரலாறே நானூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். எனவே, முஸ்லீம்கள் இந்தியாவில் குடியேறியபின் நடந்ததாக ஏற்றுக்கொள்ளலாம்.


மேலே சொன்ன கதை. www.saranamaiyyappa.org-ல் ஆங்கிலத்தில் உள்ளதன் தமிழாக்கம்.

எது எப்படியோ அய்யப்ப பக்தர்கள் அந்தநாட்களில் சுத்தபத்தமாக உள்ளனர். விரதம் மேற்கொள்கின்றனர். இன மொழி வேறுபாடுகள் பார்ப்பதில்லை. ஒருவருக்கொருவர் பூஜை, விருந்து என்று ஐக்கியமாகின்றனர். சபரிமலைப் பயண நாட்களில் இயற்கையோடு இணந்த வாழ்க்கையை நடத்துகின்றனர். நல்ல காற்றைச் சுவாசிக்கின்றனர், மலைப் பயணங்களில்.

வாவர் முஸ்லீம் வழிபாடு இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு வழிவகுக்கின்றது. மேலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெறும் வணிகத்தால் பலரது வருவாய்க்கும் வழிவகுக்கின்றது. சாமன்யர்கள் பலருக்கு அறுசுவை விருந்துணவும் இலவசமாகக் கிடைக்கின்றது.

"தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதியார். பசிப்பிணி தீர்க்கும் வழிமுறைகள் எந்தரூபத்தில் சமூகத்தில் நடந்தாலும் அவை போற்றற்குரியதே ஆகும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.