Sunday, March 28, 2010

தமிழ் ஆசிரியரின் சிலம்பாட்டம்!

பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் தமிழ் ஆசிரியருடன்...
தமிழர்களின் வீரவிளையாட்டாக ஒரு காலத்தில் விளங்கி வந்த சிலம்பம் உள்ளிட்ட கலைகள் தற்போது கொஞ்சம்,​​ கொஞ்சமாக அழிந்து வருகின்றன.​ கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை மணிக்கணக்கில் விளையாடிவரும் மாணவர்கள் பலருக்கு,​​ தமிழர்களின் அடையாளமாக விளங்கிய சிலம்பத்தைக் கற்பித்து வரும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ஓர் ஆசிரியர்.​ சிலம்பம் கற்றுத்தருகிறார் என்றால் உடனே உடற்பயிற்சி ஆசிரியர் என்றுதான் எல்லோரும் நினைப்போம்.​ அதுதான் இல்லை,​​ சிலம்பம் கற்பிப்பது முதுகலை தமிழாசிரியர் ஒருவர்.ஆம். உண்மைதான்.​ கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வரும் சண்முகசுந்தரம்தான் அந்த பெருமைக்கு உரியவர்.​
​​ ​எனது சொந்த ஊர் மேலச்செவல்.​ எனது தந்தை சுந்தரவெள்ளைப்பாண்டியன் அப்பகுதியிலுள்ளவர்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்து வந்தார்.​ எனக்கும் நான்கு வயதிலேயே இக்கலையை கற்றுக் கொடுத்தார்.​ நான் சிலம்பம் கற்று முடித்த நிலையில் எங்கள் பகுதியிலுள்ள கல்லூரி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன்.​ மேலும் அக்கலை அழிந்து விடாமல் இருக்க பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்தால்தான் முடியும் என்று கருதி மாணவர்களுக்கு இலவசமாகக் கற்பித்து வருகிறேன்
​ ​நான் தற்போது கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.​ பள்ளி அலுவல் முடிந்தவுடன் மாணவர்களுக்குச் சிலம்பத்தைக் கற்பித்து வருகிறேன்.​ 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் இதனைக் கற்று வருகின்றனர்.​ இதற்கு பள்ளித் தலைமையாசிரியை ஆயிஷாள் பீவி முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.​ ​
​​
நிச்சயமாக ஒரு காலத்தில் சிலம்பம் சண்டைக்கான ஆயுதமாக இருந்து வந்தது.​ ஆனால் அதனைத் தற்போது மாணவர்களுக்கான விளையாட்டாக தமிழக அரசு அறிவித்துள்ளது.​ இந்நிலையில் மற்ற விளையாட்டுக்களைவிட சிலம்பம் ஆடுவோரின் உடல் முழுவதும் இயங்கும் என்பதால் உடற்பயிற்சிக்கேற்ற நல்ல விளையாட்டு இது.​ இதை உணர்ந்த பலர் சிலம்பம் கற்க ஆர்வமாக வருகின்றனர்

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் எங்கள் பள்ளி மாணவர் பிரபு இரண்டாமிடத்தையும்,​​ முத்துமணி மூன்றாமிடத்தையும்,​​ 20க்கும் மேற்பட்டோர் மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பரிசுகளையும் வென்றுள்ளனர்.​
​​சிலம்பத்துடன் இணைந்து ஆடப்படுகின்ற வாள்வீச்சு,​​ கொம்பு,​​ சுருள்வாள்,​​ தீப்பந்தம்,​​ ஜல்லிக்கம்பு,​​ நட்சத்திர தீ போன்றவைகளைக் கற்றுக்கொடுக்கிறேன்.

​ தற்பொழுது சிலம்பாட்டம் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டாக இணைக்கப்பட்டுள்ளது.​ மேலும் இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதுடன்,​​ சில பணிகளுக்கு முன்னுரிமையும் அளிக்கப்பட்டு வருகிறது.
சிலம்பம் ஆபத்தான விளையாட்டு என்கிறார்களே?​​
அப்படி எல்லாம் இல்லை.​ முந்தைய காலத்தில் நடைமுறையில் இருந்த சிலம்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துதான் தற்போது கற்பிக்கப்பட்டு வருகிறது.​ இருப்பினும் தலைக்கவசம் அணிந்து விளையாடினால் கூடுதல் பாதுகாப்பு இருக்கும்.​ ஆனால் கிராமப்புற மாணவர்களால் இதனை வாங்க இயலாத நிலையுள்ளது.​ எனவே அரசோ அல்லது சமூக நல அமைப்புக்களோ இதை வழங்கினால் நன்றாக இருக்கும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.