Tuesday, December 29, 2009

பண்டிதத் தமிழை பட்டி தொட்டியெங்கும், பாரெங்கும் , கொண்டுசேர்த்த தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் அவர்களுக்கும் தினத்தந்திக்கும் நன்றிகள்!



'தினத்தந்தி'யைத் தொடங்கி எளிய மக்களுக்கும் அரசியல் விழிப்பு உணர்ச்சியை ஏற்பட செய்து தமிழ் பத்திரிகை உலகின் முடிசூடா மன்னாராக விளங்கிய சி.பா. ஆதித்தனார் தந்தியின் தந்தை மட்டும் அல்ல தமிழர் தந்தையாகவும் விளங்கினார்.

"உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு" என்பதே அவர் கொள்கையாக இருந்தது. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காக தமிழ்நாட்டுக்காக தமிழ் மக்களுக்காகப் போராடினார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கிழக்கு கோடியில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள காயமொழி என்ற சிற்றூரில் 1905-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி சிவந்தி பாலசுப்பிரமணிய (சி.பா) ஆதித்தனார் பிறந்தார். தந்தையார் பெயர் விந்தி ஆதித்தனர். இவர் புகழ்பெற்ற வழக்கறிஞர் தாயார் பெயர் கனகம் அம்மையார்.

ஸ்ரீவைகுண்டத்தில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பு முடிந்ததும், திருச்சி ஜோசப் கல்லூரியில் மேல் படிப்பை தொடர்ந்தார். படிப்பில் முதன்மையாகத் திகழ்ந்தார் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

பிறகு பாரிஸ்டர் (பார்-அட்-லா) பட்டம் பெற லண்டனுக்கு பயணம் ஆனார். லண்டனில் இந்திய மாணவர் சங்கத்தில் தங்கியிருந்தார். படித்துக்கொண்டே பத்திரிக்கைகளுக்கு கட்டுரை, செய்தி கடிதங்கள் எழுதி படிப்புச் செலவுக்குப் பணம் சம்பாதித்துக் கொண்டார்.
1933-ல் பாரிஸ்டர் பட்டத்தை பெற்றுக்கொண்டு சிங்கப்பூருக்கு வந்தார் ஆதித்தானார். அப்போது சிங்கப்பூரில் ஓ.ராமசாமி நாடார் என்ற செல்வந்தர் வாழ்ந்தார். இவரது சொந்த ஊர் காரைக்குடியை அடுத்த மணச்சை. இவர் தன் மூத்த மகள் கோவிந்தம்மாளை (செட்டி நாட்டு வழக்கப்படி இவரை ஆச்சி அம்மாள் என்றே அழைப்பார்கள்) ஆதித்தனாருக்கு கொடுக்க முன் வந்தார்.

1933 செப்டம்பர் 1-ல் ஆதித்தனார் கோவிந்தம்மாள் திருமணம் நடந்தது.
சிங்கப்பூரில் புகழ் பெற்ற வக்கீலாக திகழ்ந்த ஆதித்தனார் 1942 ஏப்ரலில் சிங்கபூரில் இருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பினார். தமிழன் வார இதழையும் தந்தி நாளிதழையும் தொடங்கினார்.

தந்தி ஆல் போல் வளர்ந்தது, அருகு போல் வேரூன்றியது. நாளுக்கு நாள் வளர்ந்து, இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் முதல் பத்திரிக்கையாக-முதல் தர பத்திரிக்கையாக தினத்தந்தி விளங்கி வருகிறது.

ஆதித்தனார் வாழ்க்கை தமிழக வரலாற்றுடன் பின்னிப் பினைந்து விட்டது.
1942 சிங்கப்பூரில் இருந்து சென்னைக்குத் திரும்பியதுமே தந்தை பெரியார் அறிஞர் அண்ணா ஆகிய இருவரையும் சந்தித்து தமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றிப் பேசினார்.
1942-லேயே தமிழ் ராஜ்ஜியக் கட்சியை தொடங்கினார். அதுதான் பின்பு நாம் தமிழர் இயக்கமாக நடத்தப்பட்டது.

தமிழர் உரிமை காக்க- தமிழ் மொழி காக்க ஆதித்தனார் போராட்டங்கள் நடத்தி சிறை புகுந்தார், இந்தி எதிர்ப்பு போர், பட எரிப்பு போர் முதலியவற்றில் சிறை சென்றார். 1966 பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு கோவையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

1947 முதல் 1953 வரை ஆதித்தனார் தமிழ்நாடு மேலவை உறுப்பினராக இருந்தார். 1957 முதல் 1962 வரை சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1964-ல் மீண்டும் மேலவையில் பணியை தொடர்ந்தார். 1967-ல் பேரவைக்கு (சட்டசபைக்கு) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள் ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றை ஆதித்தனார் தமிழ்ப்படுத்தி தமிழ்நாட்டு சட்டப்பேரவை நடைமுறை விதிகள் என்ற பெயரில் தனி நூல் வெளியிட்டார்.

1969-ல் அண்ணா காலமானதும் கலைஞர் கருணாநிதி முதல்வர் ஆனார். புதிய அமைச்சரவையில் ஆதித்தனார் முதலில் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பிறகு விவசாயத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1971-ல் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். அமைச்சராக நீடித்தார்.

தமிழ்நாட்டில் பசுமைப்புரட்சிக்கு வித்திட்டவர் ஆதித்தனாரே. மாத்தூரில் உழவர் போராட்டத்துக்கு தலைமை தாங்கி சிறை சென்றார் போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றார்கள். கைவிலங்கிடப்பட்ட ஒரே தமிழ்நாட்டு தலைவர் ஆதித்தனார்தான்.

தமிழ்நாடு மேல் சபையில் எதிர் கட்சி தலைவராக இருந்தபொழுது நீர் இறைக்கும் தொழிலாளர்களை மிகவும் பாதித்த பனைமர வரியை நீக்கும் படி ஆதித்தனார் வற்புறுத்தினார். அதற்கு அரசாங்கம் ஒப்பு கொள்ளாததால் சட்டமன்ற உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்தார்.

வெளியில் இருந்தே பனைமர வரியை எதிர்த்துப் போராடினார். இறுதியில் அந்த வரியை அரசாங்கம் ஒழித்தது. மேலவை உறுப்பினராக இருந்தபோது கோவில்களில் உயிர்ப்பலி கொடுப்பதைத் தடுக்க மசோதா கொண்டு வந்து அச்சட்டம் வர அடிகோலினார்.

1981, 24-ந் தேதி ஆதித்தனார் அமரரானார்.

நன்றி: மாலை மலர்

1 comments:

  1. அட! ரெண்டு நாளைக்கு முன்னாலேதான் ஒரு பெண்கள் பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்தபோது (ஹா!!!) தினத்தந்தியைப் புகழ்ந்து சொல்லிக்கிட்டு இருந்தேன். பாமரமக்களுக்கும், பட்டிதொட்டியில் இருந்தவர்களுக்கும் தமிழை எழுத்துக்கூட்டியாவது படிக்கணும் என்ற ஆர்வம் உண்டாக்குன ஒரே தமிழ் தினசரி தினத்தந்திதான்னு. சிந்துபாத் லைலாவுக்காக பசங்க எப்படி எல்லாம் பதறுனாங்கன்னு நான் சின்னப்புள்ளையா இருந்தப்பப் பார்த்துருக்கேன்.

    ஆதித்தனார் மனதில் நினைவு கொள்ளவேண்டிய மனிதர்.

    ReplyDelete

Kindly post a comment.