Monday, November 2, 2009

தமிழ் நாட்டின் தவப்புதல்வன்! மெய்யான மனிதநேயன்!வயது 31.அமெரிக்காவில் மாதவருமானம், 2 லட்சம்!போதும் என்கிறது,மனம்.சொந்த ஊருக்குத் திரும்புகின்றார்.சுகாதார மையம் துவக்குகின்றார்.முறைசாராக் கல்விப் பயிற்றுவிப்பு மையம் ஒன்றும் அவரால் உருவாக்கப்படுகின்றது.இதன் மூலம் 5-ஆசிரியர்கள்,உள்ளூர்ப் பள்ளி மாணாக்கருக்கு ஆங்கிலம் போதிக்கின்றனர்.நிர்வகிப்பதற்காக சேவை நிறுவனத்தையும் அமைத்துக்கொள்கின்றார்.சொந்தப் பணமே மூலதனம்.


தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் கிராம வாழ்க்கை துவங்குகின்றது.வசிப்பதற்கு ஓர் சிறு குடில் மட்டுமே;அதுவும் அவர் பணத்தில்தான்!3 வேட்டி-சட்டைகள்,ஓர் சாதாரண செருப்பு;இதுவே அவரது தனிஉடைமை.


தனது சொந்தக் கிராமத்திலேயே-அமைக்கின்றார்,ஓர் மென்பொருள் நிறுவனம்.உள்ளூர் இளைஞர் நால்வர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்.


தாய்-தந்தையரை மறந்து விடவில்லை.தாயின் விருப்பப்படி விரும்பிய இடத்தில் ஓர் வீடு;
வங்கியில் வாழ்க்கைச் செலவிற்கென்று சிறிது வைப்புநிதி.பெற்றவர்களுக்கு மகிழ்வான வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுத்தபின்,பள்ளியில் படிக்கும்பொழுது உருவான எண்ணத்தைச் செயற்படுத்துகின்றார்.


திண்ணிய உள்ளம்; எண்ணியதை எய்தியது; 5-ஆண்டுகளில்!கருவியாகத் துணை செய்தது,
"பயிர்" என்ற பெயரில்,இவர் உருவாக்கிய அரசு சாரா சேவை அமைப்பு.இந்த நற்செயல்களுக்குச் சொந்தக்காரர்,திரு.செந்தில்,தமிழகத்தின் சொத்து.


தமிழக மாந்தர் சுற்றுலா செல்லவேண்டிய இடம்,தேனூர் என்ற கிராமம்,பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. வணங்கிடவேண்டியது, செந்தில்குமார் கோபாலன் என்கிற
35 வயதுடைய மாமனிதனை!


சுதந்திர இந்தியாவில், சொத்து சேர்த்துக் குவித்த அரசியல்வாதிகள்-துணை நின்று வளம் பெற்றோர்,தம் சொத்தில் ஒரு பகுதியினை மட்டும்தமது ஊரின் வளர்ச்சிக்குச் செலவிடத்துவங்கட்டும்!தமிழகம் வளம் அடையும்; வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் சொல்லாமற் கொள்ளாமற் காணாமற் போகும்.


சமூகத்தின்பால் அக்கறை கொண்டோர் சான்றோர் துணைக்கொண்டு அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்ற செயல்திட்டங்கள் தீட்டலாம்; நிலங்களைத் தானம் பெற்ற வினோபாவின் வழியில்,பொருள்-இடம் தானமாகப் பெற்றுத் திட்டங்களைச் செயற்படுத்தலாம்.அனைத்து மத நிறுவனங்களிடமிருந்தும் வருவாயில் ஒரு பகுதியினைப் பெற்றிடச் சட்டம் இயற்றச் செய்யலாம்.


நாமும் வறுமையற்ற- வளமான-தமிழகம்-இந்தியா குறித்துக் கனவு காணலாம்.அடுத்த தலைமுறையேனும் கல்லாமையும் இல்லாமையும் இல்லாத சமநீதிச் சமூகமாக அமையும்.


பார்த்து உதவி மகிழ்ந்திட www.payir.orgபயிர் ஆசிரமம்,
தேனூர் கிராமம், டி.களத்தூர் (வழி),குன்னம் தாலுகா,
பெரம்பலூர் மாவட்டம்-621114.
+91 4327 234644
+91 94449 12672

2 comments:

 1. இன்னொரு காந்தியை எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்கள் நல்மனம் வாழ்க.

  செந்திலின் சேவை மனம் அனைவருக்கும் வாய்க்குமெனில் இந்தியா மட்டுமல்ல, உலகமே வறுமை நீங்கி வளமாகும்.

  //வணங்கிடவேண்டியது, செந்தில் என்கிற
  35 வயதுடைய மாமனிதனை!
  //

  வணங்குகிறேன்.

  ReplyDelete
 2. ஆஹா...வணங்குகிறேன் செந்திலை!பகிர்ந்த உங்களை வாழ்த்துகிறேன்!

  ReplyDelete

Kindly post a comment.