‘அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்ற சங்கரண்ணாவின் கம்பீரக் குரலுக்குத்தான் எத்தனை எத்தனை ரசிகர்கள்
பிபிசி தமிழோசை ஏப்ரல் 30-ல் தனது 76 ஆண்டு கால சிற்றலை ஒலிபரப்பை நிறுத்தியிருக்கிறது. அதே சமயம், தெலுங்கு மற்றும் குஜராத்தியில் இணைய வழி சேவையைத் தொடங்கவுள்ளது. ஏற்கெனவே, இந்தி மற்றும் வங்காளியில் ஒலிபரப்பிவருகிறது. தமிழ் தொலைக்காட்சி சேவை தவிர, மற்ற அனைத்து சேவைகளையும் தமிழோசையானது லண்டனிலிருந்து புது டெல்லிக்கு மாற்றிக்கொண்டது. பவளவிழா ஆண்டில் சிற்றலை ஒலிபரப்பை பிபிசி தமிழோசை நிறுத்திக்கொள்ள என்ன காரணம்?
பிபிசி உலக சேவை வானொலியானது பிபிசியின் சாம்ராஜ்ய சேவையாக 1932-ல் தொடங்கியது. அந்தக் காலத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்த சிற்றலை ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொலைதூரப் பிரதேசங்களுக்கு இந்த வானொலி ஒலிபரப்பப்பட்டது. உண்மையில், ‘இந்த வானொலியில் வரும் செய்திகள் சிறப்பாகவோ, சுவாரசியமாகவோ இருக்காது’ என்றே பிபிசியின் அந்நாளைய தலைமை இயக்குநர் ஜான் ரீத் கணித்திருந்தார். அவரது கணிப்பு பொய்யானது, லண்டனின் ‘பிராட்காஸ்டிங் ஹவு’ஸில் இருந்து ஒலிபரப்பப்பட்ட இந்த வானொலிக்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன.
பிபிசி உலக சேவை
பிரிட்டிஷ் மாமன்னரோ மகாராணியோ தமது சாம்ராஜ்யப் பிரஜைகளிடம் பிபிசி உலக சேவையின் சிற்றலை ஒலிபரப்பு மூலமாக கிறிஸ்துமஸ் உரையாற்றுவது என்பது ஒரு பாரம்பரியமாகவே மாறிப்போனது. 1940-ல் ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜிப் படைகளிடம் பிரான்ஸ் சரணடைய நேர்ந்தது. அப்போது பிரான்ஸை விட்டு வெளியேறிய பிரெஞ்சு ராணுவத் தளபதி சார்ல் த கோல் லண்டன் ‘பிராட்காஸ்டிங் ஹவு’ஸில் இருந்தபடிதான் பிரெஞ்சு மக்களுக்கு உரையாற்றிவந்தார். ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடங்கள் எனத் தொடர்ச்சியாக நான்கு வருடங்களுக்கு அவரது உரை பிபிசி உலக சேவையின் சிற்றலையில் ஒலிபரப்பப்பட்டு வந்தது.
1960-களில் டிரான்ஸிஸ்டர் தொழில்நுட்பத் தின் வரவால் கையில் எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்குச் சிறியதாகவும், மின்கலங்களின் சக்தியைக்கொண்டே இயங்கக்கூடியதாகவும் வானொலிப் பெட்டிகள் உருமாறின. எல்லோர் கைகளிலும் வானொலி புழங்க ஆரம்பித்தது. உலகெங்கிலும் ஏராளமான புதிய நேயர்கள் கிடைக்க, கடல் கடந்த சேவை பிபிசியின் உலக சேவையாக புதுப் பெயரும் புதுப் பொலிவும் பெற்றது.
பிபிசி உலக சேவையானது (ஆங்கிலப் பிரிவு) தனது 85 வருட சரித்திரத்தில் 68 மொழிகளில் சிற்றலை ஒலிபரப்புகளைச் செய்துள்ளது. இந்த 85 ஆண்டுகளில் நிகழ்ந்த பல வரலாற்றுச் சம்பவங்கள் பற்றியும் அந்தந்த இடங்களிலிருந்து உடனடியாகச் செய்தி வழங்கும் ஒரு சேவையாக பிபிசி உலக சேவை விளங்கிவந்துள்ளது. பெர்லின் சுவர் விழுந்த சமயத்தில் அங்கும் பிபிசி உலக சேவையின் செய்தியாளர் இருந்தார்.
அதிர்வுடன் தொடங்கிய தமிழ்ச் சேவை
இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தினால் பிபிசி சாம்ராஜ்ய சேவை, பிபிசியின் கடல் கடந்த சிற்றலை வானொலிச் சேவையாகப் புதிய பெயர் பெற்றது. அரபு மொழி, தென் அமெரிக்கர்களுக்கான ஸ்பானிய மொழிச் சேவை, ஜெர்மன், பிரஞ்சு, போர்ச்சுக்கீசியச் சேவை மற்றும் பல புதிய மொழிகளில் ஒலிபரப்புகள் சிற்றலையில் ஆரம்பிக்கப்பட்டன. 1940-ன் இறுதியில் பிபிசி கடல் கடந்த சேவையில் மொத்தம் 34 மொழிச் சேவைகள் இருந்தன.
பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு வெளியே 1940 டிசம்பரில் ஒரு நிலக்கண்ணி வெடித்து தீ மூண்டு, கட்டிடம் சேதம் அடைய, பிபிசி கடல் கடந்த சிற்றலை சேவை புஷ் ஹவுஸுக்கு 1941-ல் இடம் மாறியது. அந்த மாற்றத்தை ஒட்டி புதிதாகத் தமிழ்ச் சேவையான தமிழோசையும் சிற்றலையில் ஆரம்பிக்கப்பட்டது. அது முதல் கடந்த 76 வருடங்களாக இந்நிறுவனத்தின் தலைமையகமாக விளங்கிவருவது புஷ் ஹவுஸ்தான்.
வீரர்களுக்கான வானொலி
பிபிசி தமிழோசையின் வரலாறு வித்தியாச மானது. மற்ற வானொலிகள் போன்று இது நேயர்களுக்காகத் தொடங்கப்பட்ட வானொலி அல்ல. பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியிலிருந்த தமிழகப் படை வீரர்களுக்காகத் தொடங்கப்பட்டது. வானொலிக்குப் பெயர் வைத்தது, வானொலியின் குறியீட்டில் உள்ள தனித்தன்மை போன்றவை அனைத்தும் வானொலி நேயர்களால் என்றைக்குமே மறக்க முடியாதவை.
சங்கர் சங்கரமூர்த்தி (சங்கரண்ணா) பொறுப்பாளராக இருந்த காலகட்டத்தில் தொடங்குகிறது தமிழோசையின் தனித்தன்மை. ‘அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்ற சங்கரண்ணாவின் கம்பீரக் குரலுக்குத்தான் எத்தனை எத்தனை ரசிகர்கள். அதே காலகட்டத்தில் புகழ் பெற்ற சிற்றலைத் தமிழ் வானொலியான வெரித்தாஸில் ‘இனிய இதயங்களே’ எனப் பாசத்தோடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து அழைத்தார், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ரபி பெர்னார்டின் தந்தை ஆரோக்கியசாமி. வத்திகான் வானொலியின் தமிழ்ப் பிரிவு ‘அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்றது. இப்படி, நேயர்கள் வேறு யாருமல்ல, அவர்கள்தான் நம் குடும்பம், அவர்களுக்காகத்தான் நாமே ஒழிய.. நமக்காக அவர்கள் இல்லை என்ற மாதிரியான ஒரு காலகட்டமும் இருந்தது.
குறைந்த நேயர்கள்
சிற்றலை ஒலிபரப்பினை நிறுத்துவதற்கான காரணமாகக் கூறப்படுவது, சிற்றலை ஒலிபரப்புகளை யாரும் கேட்பதில்லை என்பது. ஒரு சில நேயர்களுக்காகப் பல லட்சங்கள் செலவு செய்து ஒலிபரப்பு செய்வது இயலாத ஒன்று. எந்த ஒரு வானொலிக்கும் அதன் நேயர்கள் ஒரு பெரிய பலம்.
பிபிசி தமிழோசைக்கும் ஒரு காலத்தில் அந்தப் பலம் இருந்தது. நாளடைவில் நேயர்களின் எண்ணிக்கை குறைந்தது. இன்றைய காலகட்டத்தில் யாரும் வானொலிகளைக் கேட்கத் தயாராக இல்லை. அதுவும் சிற்றலையில் கேட்க வேண்டுமாயின் மிகவும் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இன்று சிற்றலை வானொலிப் பெட்டிகள் கடைகளில் கிடைப்பதும் இல்லை.
சிற்றலை வானொலி கேட்கும் நேயர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கும். குறிப்பிட்ட வானொலி அலைவரிசையைத் தேடிக் கண்டுபிடித்துக் கேட்பதற்கே ஐந்து நிமிடங்கள் தேவைப்படும். அடுத்த பத்து நிமிடங்களில் தமிழ் நிகழ்ச்சி நிறைவடைந்துவிடுகிறது. வெளிநாட்டு நேயர்களிடம் இருப்பது போன்ற ‘டிஜிட்டல்’ வானொலிப் பெட்டிகள் எல்லாம் சாதாரண கிராமப்புற நேயர்களிடம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. முன்பு 30 நிமிடங்களாக இருந்த பிபிசி தமிழோசை சிற்றலை, பின்னர் 15 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. இன்றைக்கு முற்றிலும் நிசப்தமாகிவிட்டது!
- தங்க.ஜெய்சக்திவேல்,
பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்,
தொடர்புக்கு: ardicdxclub@yahoo.co.in.
0 comments:
Post a Comment
Kindly post a comment.