Monday, December 17, 2012

ஆங்கில வார்த்தையைத் தமிழில் எழுதலாமா? சீறும் சிங்கப்பூர் தமிழாசிரியர்கள்!


சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரைக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து 40 தமிழாசிரியர்கள் வருகை தந்தனர். சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்காக ஆண்டு தோறும் தமிழகத்தில் நடத்தப்படும் முத்தமிழ் பயிற்சி முகாமிற்காகவே அவர்கள் வந்திருந்தனர்.

சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் சங்கமும், மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறையும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

மதுரையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் புதுநத்தம் சாலை, அங்கே கடம்பவனம் தங்குமிடத்தில் கூடியிருந்தனர். சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் சி.சாமிக்கண்ணு, பொருளாளர் கா.சி.வீராசாமி மற்றும் தமிழாசிரியை சுப்புலட்சுமி ஆகியோருடன் நடத்திய உரையாடலில் இருந்து சில பதிவுகள்:

பத்து நாள்கள் நடக்கும் நிகழ்ச்சி மூலம் நீங்கள் எந்த அளவுக்கு தமிழைக் கற்றுணர முடியும்? ஏதோ சுற்றுலாவுக்கு வந்ததுபோல வந்து செல்வதால், தமிழ் இலக்கியங்களைக் கற்க முடியுமா?

சாமிக்கண்ணு: தமிழ் இலக்கியங்கள் குறித்து நினைவூட்டும் புத்துணர்வு நிகழ்ச்சியாகவே இது நடத்தப்படுகிறது. நாங்கள் வாழும் சிங்கப்பூரில் பல தமிழ் ஆய்வாளர்கள் இருந்தாலும், தாய் பூமியான தமிழகத்தில்தானே பல பெருந் தமிழறிஞர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து நாங்கள் பெற வேண்டிய தமிழ் இலக்கியங்கள் ஏராளம் எனநினைக்கிறோம்.

சிங்கப்பூர் தமிழர்கள் என்றாலே, தமிழ்த் திரைப்படத் துறையினரை வைத்து அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது? இதில் தமிழ்மொழி குறித்த அக்கறை எந்த அளவுக்கு உள்ளது?

சாமிக்கண்ணு: தமிழ்த் திரைப்படத் துறையினரை அழைத்துப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்புகள் சில அங்கு உள்ளன. ஆனால், எங்களைப் போன்ற அமைப்பினர் எப்போதும் தமிழறிஞர்களை முன்னிலைப்படுத்தியே நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். ஆண்டுக்கு 20 தமிழறிஞர்களையாவது சிங்கப்பூருக்கு தமிழகத்திலிருந்து அழைத்து நாங்கள் நிகழ்ச்சி நடத்துகிறோம். மாதந்தோறும் 3 இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆனால், தமிழகத்திலிருந்து வரும் தமிழறிஞர்கள் சிலர்தான் தமிழுக்கான நிகழ்ச்சி என்றில்லாமல் இதை வருவாய்க்கான வழியாகக் கருதுகிறார்கள். அதுபோன்றோரை நாங்கள் புறக்கணித்து வருகிறோம். ஆனால், திரைப்படத்தில் வரும் நகைச்சுவைகளை எடுத்துக்காட்டாகக் கூறியே வகுப்பில் பாடங்களை நடத்தி வருகிறோம். திரைப்படம் அந்த அளவுக்கு இளைய தலைமுறையினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

சிங்கப்பூர் வாழ் தமிழரிடையே தற்போது தமிழ் மொழி பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளது?

சாமிக்கண்ணு; நான் தமிழகத்தில் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவன். ஆனால், சிங்கப்பூரில் எனது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை. ஆரம்பத்தில் உடற்பயிற்சிக் கல்வி கற்று, பின்னர் தமிழ் கற்று, அதன்படி தற்போது தமிழாசிரியராக உள்ளேன்.

சிங்கப்பூரில் அந்தந்த இனத்தவர் அவரவர் தாய் மொழியைக் கற்றுத் தேர்ந்தாலே பட்டம் பெற முடியும் என்பதால், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தமிழைக் கட்டாயம் படித்து விடுகிறார்கள். அத்துடன் தமிழைத் தமிழாகவே பேசியும் வருகிறோம்.

சிங்கப்பூர் தமிழர்களாகிய நாங்கள் ஆங்கிலம் உள்ளிட்ட எந்தவித மொழிக் கலப்பும் இன்றி தமிழைப் பேசுகிறோம். ஆனால், தமிழகத்தில் பத்து வார்த்தைக்கு ஐந்து வார்த்தைகள் ஆங்கிலம் கலந்துதானே பேசுகிறீர்கள்? ஆக, தமிழின் சங்ககாலக் கருத்துகளை நாங்கள் உங்களிடமிருந்து (தமிழகத்திலிருந்து) பெற்றுச் செல்ல வந்துள்ளோம். ஆனால், ஆங்கிலம் கலந்து பேசும் தமிழ்நாட்டுத் தமிழ் எங்களுக்கு வேண்டாம்! அதை நாங்கள் பெற்றுச் செல்லவும் விரும்பவில்லை.

வெளிநாடான சிங்கப்பூரில் கூட தமிழன் தமிழ்மொழியை அதன் உள்ளடக்கம் மாறாமல் பேச வேண்டும் என நினைக்கிறான். அத்தகைய நிலையில் தமிழின் பிறப்பிடமான தமிழகத்தில் தமிழ் எத்தகைய நிலையில் வைத்துப் போற்றப்பட்டிருக்க வேண்டும்? ஆனால், நிலைமை அப்படியில்லையே! சங்க கால தமிழிலக்கியம் குறித்து எதிர்காலத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளக்கூட ஆளில்லை என தமிழறிஞர் தமிழண்ணலே ஆதங்கப்படும் நிலைதானே தமிழகத்தில் உள்ளது. ஆடை என்பது உடல் சார்ந்தது. அது சூழலுக்கு ஏற்ப மாறுவது. ஆனால், மொழி அப்படியல்ல. அது பாரம்பரியக் கலாசாரத்தை உள்ளடக்கியது.

புகுந்த வீட்டில் இருந்து பண்பாட்டுக் கலாசாரத்தைக் கற்க தாய் வீட்டுக்கு வரும்போது, இங்கேயும் நிலைமை சரியில்லாமலிருந்தால் எங்களது நிலை என்னவாகும்? ஆகவே, தமிழகத்தில் தமிழை அதுவும் பண்பாட்டுக் கூறுகளாக உள்ள தமிழை ஆய்ந்து கற்கும் தலைமுறையை உருவாக்குவது அவசியம்.

ஆங்கில வார்த்தையை தமிழில் "மெடிக்கல் ஷாப்' என எழுதி வருகிறீர்களே! இது என்ன நியாயம்?. இதுபோன்ற நிலை சிங்கப்பூரில் இல்லை. ஆகவே தமிழை, தாய் மண்ணே முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்கிற ஆதங்கம் எங்களுக்கு உள்ளது.

இதேநிலை சிங்கப்பூரிலும் வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. தமிழ் பேசி, தமிழ் கலாசாரப்படி உடையணிந்தாலே தமிழர் எனப் போற்றும் நிலைதான் அங்கும் மெல்ல மெல்ல பரவி வருகிறது. இந்த நிலையை மாற்றி தமிழைத் தக்க வைக்கவே நாங்கள் போராட வேண்டியுள்ளது. நமக்கு மட்டுமல்ல, வெளிநாடுகளில் உள்ள டச்சு உள்ளிட்ட பல மொழிகளுக்கும் இதே நிலைதான்.

இதன்மூலம் என்னதான் சொல்லவருகிறீர்கள்?

சாமிக்கண்ணு: தமிழர்களது வாழ்க்கை பாரம்பரியத்தை நமது சங்க இலக்கியங்களே உள்ளடக்கியுள்ளன. ஆனால், அந்த சங்க இலக்கியத்தை தமிழாசிரியர்கள் கூட அறிந்திருக்க ஆர்வம் காட்டுவதில்லை. ஆகவே தமிழைப் பொழுதுபோக்கும் நிகழ்ச்சிக்கான மொழியாக மட்டுமே நாம் பார்க்காமல் அதன் அறக்கூறுகளை, தமிழரின் அடையாளத்தைக் காக்கும் பெட்டகமாக கருதுவது அவசியம்.

சிங்கப்பூரிலிருந்து அதிக ஆசிரியைகள் வந்துள்ளனரே?

ஆசிரியை சுப்புலட்சுமி: சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பெண் குழந்தைகளிடையே தற்போது தமிழ் கற்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதை குறிப்பிட விரும்புகிறேன். அங்கு தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பில் சேருவதற்கு தற்போது பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். என்றாலும், வாழ்க்கை வளமாவதற்கான வருவாய்க்கு தமிழ் எந்த அளவுக்கு உதவும் என்பதையும் தற்காலத் தலைமுறையினர் யோசிக்கின்றனர். அந்த அடிப்படையில் அவர்களது தமிழ் ஆர்வம் குறைவதையும் காண முடிகிறது. இத்தகைய பிரிவினர் எப்படி சங்கத் தமிழை கற்பார்கள்? ஆகவே, தமிழர்கள் தங்களது குழந்தைகளுக்கு மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவது அவசியமாகிறது. அது சிங்கப்பூருக்கும், தமிழகத்துக்கும் ஒரே வகையில் பொருந்தக்கூடியதே!

சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சியில் பத்திரிகைகள் பங்கு, ஊடகங்களின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது?

சாமிக்கண்ணு: பத்திரிகைகள் தூய தமிழையே பயன்படுத்தி வருகின்றன. தமிழக பத்திரிகைகள் ஆங்கிலச் சொற்களை தமிழில் கலப்பது போல அங்கு கலப்பதில்லை. ஊடகங்களில் நேர் எதிரான போக்கு உள்ளது. இதற்காகவும் போராடுகிறோம். தமிழ்நாட்டு ஊடகங்களின் தாக்கம் அதிகம். அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு!

சந்திப்பு: வ. ஜெயபாண்டி. நன்றி ;-தினமணி, 16-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.