Sunday, December 16, 2012

யூதர்கள், கம்யூனிஸ்ட் நாடுகளின் அகதிகள், வியத்நாம், இலங்கை அகதிகள் என்று ஏராளமானவர்கள் வாழும் சொர்க்கபூமி எது ?



உலகத்தின் உச்சியில் - அதாவது 49-வது அட்சக்கோட்டில் இருக்கும் நாடு கனடா. அது நிலப்பரப்பில் உலகத்திலேயே இரண்டாவது பெரிய நாடு. நிறைய தண்ணீர் நிலப்பகுதிகள் கொண்டது.

கனடா என்பது பழங்குடி மக்களின் சொல். அதற்குக் கிராமம் என்பது பொருள். கனடா பழங்குடி மக்களை, ஐரோப்பியர்கள் செவ்விந்தியர்கள், எக்ஸிமோக்கள் என்று அழைக்கிறார்கள். எக்ஸிமோ என்றால் பச்சைக்கறி தின்கிறவர்கள் என்று அர்த்தம்.

பழங்குடி மக்கள், இருபதாயிரம் ஆண்டுகளாக குளிர், பனி, மழை நிறைந்த இப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசன் கிடையாது; ராணுவம் இல்லை. வரி வசூல் கிடையாது. மொழி உண்டு; ஆனால் எழுத்து கிடையாது.

பதினாறாவது நூற்றாண்டில் பசிபிக் கடலின் வழியாக, அட்லாண்டிக் கடலில் நுழைந்து ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் விலங்குகளின் மென்முடித் தோல்களை வாங்குவதற்காக இங்கு வந்து போய்க்கொண்டிருந்தார்கள். நாளடைவில் பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டு தங்களது அரசாங்கத்தை அமைத்தார்கள். ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் வைத்திருந்த பகுதிகளைப் போரிட்டுக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

போரிலும் ஐரோப்பியர்கள் பரப்பிய நோய்களிலும் சிக்கி ஏராளமான பழங்குடி மக்கள் இறந்து போனார்கள்.

இதனால் ஐரோப்பாவில் இருந்தும் ரஷ்யா, இந்தியா என்று பல நாடுகளிலிருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து இங்கு வந்து வாழ்ந்து வருகிறார்கள். கனடாவில் சமூகப் பாதுகாப்பு அதிகம். மருத்துவ சேவை இலவசம். பதினெட்டு வயது வரை கல்வி இலவசம்.

உலகத்தில் அரசியல் நெருக்கடிகளால் அகதிகளானவர்களுக்குப் புகலிடம் கொடுக்கும் நாடுகளில் முதலிடம் வகிப்பது கனடாதான்.

யூதர்கள், கம்யூனிஸ்ட் நாடுகளின் அகதிகள், வியத்நாம், இலங்கை அகதிகள் என்று ஏராளமானவர்கள் கனடாவில் வாழ்கிறார்கள். அகதிகளுக்கு நல்ல இருப்பிடங்கள் உள்ளன. இலங்கையிலிருந்து மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார்கள்.

கனடாவின் எல்லையில் இருக்கும் ஒரே நாடு அமெரிக்கா. இருநாடுகளும் நல்லுறவில் உள்ளன. எனவே எல்லை ஒருபொழுதும் மூடப்படுவது இல்லை. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் கனடியர்களும் கனடாவில் பணியாற்றும் அமெரிக்கர்களும் எல்லைப் பகுதிகளில் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள். காரிலும் ரயிலிலும் கப்பலிலும் விமானத்திலும் பணிக்குச் செல்கிறார்கள்.

அமெரிக்க-கனடா எல்லை வான்கூவரில் உள்ளது. அதற்குப் பெயர் பீஸ் ஆர்க். ஒரு மண்டபம் கட்டி அதில் "எங்கள் எல்லை ஒருபோதும் மூடப்படுவது இல்லை' என்று கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

கனடா மக்கள் மிதவாதிகள். சட்டத்துக்குப் பணிந்து நடக்கிறவர்கள். அடுத்த வீட்டுக்காரரோடும் பக்கத்து ஊர்க்காரர்களோடும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருக்கிறவர்கள். அடிக்கடி சுற்றுலா போகிறவர்கள்.

எனவே இங்கு குற்றங்கள் குறைவாகவே நடைபெறுகின்றன. விவாகரத்துகளும் இங்கு குறைவு. இதுவே கனடா மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்குக் காரணம் என்று கனடா மக்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

-ரோகிணி, சென்னை. நன்றி :- தினமணி,16-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.