Sunday, April 30, 2017

பணிக்கர் என்றொரு நடுவர் -தி. பரமேசுவரி


மொழி வழி மாநிலம் கோரும் கிளர்ச்சிகள் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்த பொழுது, ஜஸ்டிஸ் சையத் பசல் அலி என்பவர் தலைமையில் மாநில மறுசீரமைப்புக் கமிஷனை அமைத்தார் பிரதமர் நேரு. இக் குழுவில் சர்தார் கே.எம்.பணிக்கர், பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் உறுப்பினர்கள்.



சர்தார் கே.எம்.பணிக்கர்
தம் மாநிலமான பீகார் (பீகாருக்கும் மேற்கு வங்கம், ஒரிசாவுக்குமான எல்லைகள்) தொடர்பான விவாதங்களின் போது, நடுவர் நிலையில் இருக்கும் தான் இதில் கலந்துகொள்வது தார்மீக நியாயம் இல்லை என்று நகர்ந்தார் பசல் அலி. ஆனால், தமிழக-கேரள எல்லைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்றதோடு அல்லாமல், தேவிகுளம்-பீர்மேடு வட்டங்களைக் கேரளத்துடன்தான் இணைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பணிக்கர் (1955).


ம.பொ.சி. "எனது போராட்டம்" என்ற தம் நூலில் பின்வரும் நிகழ்வைக் குறிப்பிடுவார்:


"நான் பசல் அலி கமிஷனைப் பேட்டி கண்ட போது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார், இல்லை, திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் வாய்ச் சண்டை நடத்தினார். தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாயமென்றும், கமிஷன் அதனை ஏற்கமுடியாது என்றும் ஆவேசமாகக் கூறினார். அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது.

ம.பொ.சி.
அதனால், நான் "தாங்கள் மலையாளிகள் சார்பில் என்னுடன் வழக்காடுகிறீர்களா? அல்லது கமிஷன் உறுப்பினர் என்ற வகையில் என்னை விசாரணை நடத்துகிறீர்களா?" என்று கேட்டேன். இதன் பின்னர் பணிக்கரின் ஆவேசம் தணிந்தது.


தமக்கு ஏற்பட்ட ஆவேசத்திலே தம்மை மறந்தவராகி, தேவிகுளம் - பீர்மேடு பகுதியிலே தமக்குச் சொந்தமான தோட்டங்கள் இருப்பதாகவும் பணிக்கர் கூறினார். அதை நான் எப்படி தமிழ்நாட்டிடம் விட்டுவிட முடியும் என்றும் கேட்டார்.


அத்துடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவுக்காகவும் பணிக்கர் என்னுடன் வாதாடினார். "


- யுவபாரதி
இடுகை: தி. பரமேசுவரி 
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest

0 comments:

Post a Comment

Kindly post a comment.