Friday, April 21, 2017

சம்பாரண் சத்தியாகிரகம்



Sathish Kumar M
பிஹாரைக் கடக்கும்போதெல்லாம் ஒருமுறையேனும் சம்பாரண் போய்வர வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. “மத்த ஊர் மாதிரி இல்ல. எல்லாத்துக்கும் தயாரா வரணும். தங்கணும். அப்படி வந்தா, எருமை வண்டிக்குச் சொல்லிடலாம்” என்று சிரிப்பார்கள் நண்பர்கள். நாட்டின் பின்தங்கிய பிராந்தியங்களில் ஒன்று சம்பாரண். நேபாள எல்லையையொட்டி இருக்கிறது. மேற்கு சம்பாரண், கிழக்கு சம்பாரண் என்று இரு மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். அப்படிப் பிரித்தும் பிஹாரில் பாட்னாவுக்கு அடுத்து ஜனத்தொகை மிகுந்த மாவட்டங்கள் அவைதான். ஒவ்வொரு மாவட்டத்திலும் 39 லட்சம் பேர் இருக்கிறார்கள். 90% கிராமவாசிகள். எழுத்தறிவு விகிதம் இன்னும் 60%-ஐத் தொடவில்லை. பெரும்பான்மையோர் பேசும் மொழி போஜ்புரி.
மோசமான அடிப்படைக் கட்டமைப்புகள். ரசாயனம் மிகுந்த நிலத்தடிநீர். தூசு. குப்பை. சாக்கடை. வறுமை.வேலைவாய்ப்பின்மை. எல்லாம் சேர்ந்து இயல்பாக ஆயுததாரிகளை உருவாக்கியிருக்கிறது. இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் சிவப்புப் பிராந்தியத்தில் சம்பாரணும் ஒன்று. ``எருமை வண்டிகளே போக லாயக்கில்லாத சாலைகளில் பயணிக்கும் திராணி இருந்தால்தான் நீங்கள் சம்பாரண் வர முடியும்`` என்பார்கள் நண்பர்கள். இப்படிப்பட்ட பகுதியில் இன்றைக்கு நூறு வருடங்களுக்கு முன் எப்படி காந்தி பயணித்தார்? இங்குள்ள விவசாயிகளை எப்படி ஒருங்கிணைத்தார்? இந்தியாவின் முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை இங்கே எப்படி வெற்றிகரமாக நடத்தினார்? சம்பாரணை நினைக்கும்போதெல்லாம் இந்தக் கேள்விகள் வந்து போகும். தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915-ல் இந்தியா திரும்பிய காந்தி, இங்கு நடத்திய முதல் பெரும் சத்தியாகிரகப் போராட்டம் மட்டும் அல்ல அது; ஒரு அசலான அறப்போராட்டத்துக்கான என்றென்றைக்குமான முன்னுதாரணம்.
ரத்தம் தோய்ந்த அவுரி விவசாயம்
காந்தி இங்கு வருவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே, சம்பாரணில் அவுரி சாகுபடி விவசாயிகளை கசக்கிப் பிழிந்துகொண்டிருந்தது. அவுரி (இண்டிகோ) என்பது பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பணப் பயிர். ஆடைகளுக்கு வண்ணமூட்டப் பயன்படுத்தப்படுவது. அந்நாட்களில் சம்பாரண் பிராந்தியத்தின் பெருமளவிலான நிலங்கள் பிரிட்டிஷ் பிரபுக்கள் வசம் இருந்தன. இந்திய விவசாயிகள் இந்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்துகொள்ளலாம்; பதிலீடாக நிலத்தில் 20-ல் 3 பங்கு (15%) அவுரி சாகுபடி செய்து தர வேண்டும். இந்தப் பதிலீட்டு முறை ‘தீன்கதியா’ என்று அழைக்கப்பட்டது.
மூன்று கொடுமைகள் இதன் பின்னணியில் நிகழ்ந்தன. 1.நிலங்கள் முழுமையாகப் பிரபுக்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன. 2. விவசாயிகள் மீது உள்நாட்டுச் சந்தையோடு தொடர்பில்லாத அவுரி திணிக்கப்பட்டது. ஏனைய பயிர் சாகுபடிக்கான வாய்ப்பு இருக்கிறதோ, இல்லையோ; லாபமோ, நஷ்டமோ ஆங்கிலேயர்களுக்கு வேண்டிய அவுரி போய்ச்சேர வேண்டும். 3.கடும் சுரண்டலுக்கும் அத்துமீறல்களுக்கும் ஆளான விவசாயிகளால் அநீதிக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியவில்லை. நீதிமன்றங்களை நாட அந்நாட்களிலேயே ஆயிரக்கணக்கில் அவர்கள் வழக்கறிஞர்களுக்குச் செலவிட வேண்டியதிருந்தது. அப்படிச் செலவிட்டும் எதையும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. அந்நாட்களில் சம்பாரணில் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றிய ஈ.பீ.லட்டூர் பின்னாளில் கூறினார், “மனித ரத்தத்தின் கறை படியாமல் ஒரு அவுரி பெட்டிகூட இங்கிலாந்துக்குப் போனதில்லை... மாஜிஸ்திரேட்டாக இருந்த என்னிடம் கத்தியால் குத்திக்கிழிக்கப்பட்ட, துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில்கூட விவசாயிகள் வந்திருக்கிறார்கள்.”
ஜெர்மனியில் ரசாயன சாயம் கண்டுபிடிக்கப்பட்ட பின் நிலைமை இன்னும் மோசமானது. இப்போது, அவுரி சாகுபடி நிபந்தனையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க பிரபுக்கள் தயாராக இருந்தார்கள். பதிலீடாக ஒரு பெரும் தொகையைக் கேட்டார்கள். அங்கு, இங்கு என ஓடிப் பணத்தைப் புரட்டிக் கொடுத்தார்கள் கொஞ்சம் விவசாயிகள். ஆனால், இம்முறை நீடித்தால் தாங்கள் சாவதைத் தவிர வேறு வழியில்லை எனும் நிலையில் இருந்தார்கள் பெரும்பான்மை விவசாயிகள்.
அண்ணலின் வருகை
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின் தன்னுடைய குரு கோகலே சொன்னபடி, இந்தியாவைப் புரிந்துகொள்ளும் பயணத்தில் ஈடுபட்டிருந்தார் காந்தி. கல்கத்தா - ரங்கூன், கான்பூர் ரிஷிகேஷ் என்று சுற்றிக்கொண்டிருந்தவர் 1916 டிசம்பரில், காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக லக்னௌ வந்தார். முதன்முதலில் ராஜ்குமார் சுக்லாவை அங்கேதான் அவர் சந்தித்தார். சம்பாரணிலிருந்து தன்னுடைய நண்பருடன் வந்திருந்த இந்த ஏழை விவசாயி, சம்பாரண் விவசாயிகள் அனுபவிக்கும் சித்ரவதையை காந்தியிடம் சொன்னார். காங்கிரஸ் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்க அவர் கோரினார். விஷயத்தைக் கேட்டறிந்த காந்தி, இது தொடர்பில் தீர்மானம் கொண்டுவர உதவினார். மாநாட்டில் ராஜ்குமார் சுக்லா பேசும் வாய்ப்பையும் உருவாக்கித் தந்தார். அதேசமயம், நேரில் வந்து பார்க்காமல், தான் அதற்கு மேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார்.
சுக்லா இந்த மனிதரை விட்டுவிடக் கூடாது என்று புரிந்துகொண்டார். சம்பாரணுக்கு காந்தியை அழைத்துச் சென்றுவிட்டால், விவசாயிகள் பிரச்சினைக்கு விமோசனம் கிடைத்துவிடும் என்று அவர் கருதினார். அப்போது தொடங்கி காந்தியை அவர் பின்தொடரலானார். காந்தி கான்பூர் சென்றால், அங்கு சென்றார். காந்தி அகமதாபாத் திரும்பினால், அங்கும் சென்றார்.
கல்கத்தா பயணத்தின்போது அப்படியே சம்பாரண் வருவதாக சுக்லாவிடம் சொன்னார் காந்தி. சுக்லா நினைவூட்டல் கடிதங்களை எழுதினார். சுக்லாவின் விடாப்பிடியான இந்த முயற்சி காந்தியை ஈர்த்தது. காந்தியின் கல்கத்தா பயணத்தின்போது அங்கு சென்றார் சுக்லா. சொன்னபடி அவருடன் சம்பாரண் நோக்கி ரயிலில் புறப்பட்டார் காந்தி.
துயரப் பிராந்தியம்
சம்பாரணை அறியாமை, ஏழ்மை, வறுமை, கூடவே பஞ்சமும் அப்போது சூழ்ந்திருந்தது. கிராமங்கள் சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கியிருந்தன. தொற்றுநோய் மரணங்கள் மலிந்திருந்தன. விவசாயிகளின் நிலைமையைக் கேட்டறிந்த மாத்திரத்தில், இதற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டார் காந்தி. பிரபுக்களிடமும் அரசிடமும் பேசுவது என்ற முடிவுக்கு வந்தார். தோட்ட முதலாளிகள் சங்கத் தலைவர், திர்ஹத் சரக ஆணையர் இருவரையும் சந்தித்தார். இருவருமே மிரட்டல் தொனியில் காந்தியை எதிர்கொண்டார்கள். காந்தி ஒரு விஷயத்தை அவர்களிடம் சுட்டிக்காட்டிவிட்டார். “நான் அமைதியான வழியில் போராடப்போகிறேன். அதேசமயம், தீர்வு கிடைக்கும் வரையில் ஓய மாட்டேன்.”
போராட்டத்தை எதிர்கொள்ள பிரிட்டிஷார் என்னென்ன வியூகங்களைக் கையாள்வார்கள் என்பதை காந்தி உணர்ந்திருந்தார். இது சமமில்லாத இரு தரப்புகள் இடையிலான போராட்டம். இதில் நியாயம் கோரி நிற்கும் பலவீனமான தரப்பு, ஏதாவது ஒரு தவறிழைக்காதா என்ற தருணத்துக்காகவே பலமான தரப்பு காத்திருக்கும். அத்தருணத்தை அவர்களுக்கு அளித்துவிடக் கூடாது என்றால், முன் தயாரிப்பு வேண்டும். விவசாயிகளிடம் காந்தி இதை விவரித்தார். அவர்களிடம் இரு உறுதிகளை அவர் எதிர்பார்த்தார். சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்க வேண்டும்; கடைசி வரை போராட வேண்டும். விவசாயிகள் உத்வேகமான பதிலைக் கொடுத்தனர். காந்தி அங்கேயே தங்கும் முடிவுக்கு வந்தார்.
இதனிடையிலேயே, காந்தியை நோக்கி பிரிட்டிஷார் காய்களை நகர்த்தத் தொடங்கியிருந்தனர். சம்பாரணை விட்டு காந்தி உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார் ஜில்லா மாஜிஸ்திரேட்.
“இந்த உத்தரவைப் பின்பற்றப்போவதில்லை. அமைதியான வழியில், இந்த விஷயத்தைக் கையாண்டுவரும் என்னால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. அதேசமயம் மாஜிஸ்திரேட்டின் உத்தரவை மீறுவதால் எந்தத் தண்டனை அளிக்கப்பட்டாலும் அதை ஏற்கத் தயார்’’ என்று பதில் அனுப்பினார் காந்தி.
இதையடுத்து, காந்தியை நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பினார் மாஜிஸ்திரேட். விவசாயிகளிடத்தில் தீயாகப் பரவியது செய்தி. நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தார்கள். ஏப்ரல் 16 இரவுக்குள் சம்பாரணை விட்டு, வெளியேறும்படி உத்தரவிட்டதை மீறிய காந்தி, சட்டத்தை மீறியவராகிறார் என்றது அரசு.
“நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். ஆனால், விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் வந்துவிட்டு, பாதியில் அவர்களைக் கைவிட்டுத் திரும்ப மனசாட்சி இடமளிக்கவில்லை. அரசின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாததன் காரணம் அதிகாரத்தை உதாசீனப்படுத்துவதல்ல; எல்லா சட்டங்களுக்கும் மேலான மனசாட்சியின் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதே நோக்கம்’’ என்றார் காந்தி. சம்பாரணைவிட்டு காந்தி வெளியேறுவதோடு, திரும்பி வர மாட்டேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்தால், வழக்கு திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என்றார் நீதிபதி. “அது நடக்காது. இந்த முறை மட்டுமல்ல, இன்னும் எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் சிறைவாசம் முடிந்து சம்பாரணுக்குத்தான் வருவேன். இனி இதுதான் என் வசிப்பிடம்” என்றார் காந்தி.
வெளியே கூட்டம் கொந்தளித்தது. தீர்ப்பைத் தள்ளிவைத்தார் நீதிபதி. காந்தியைக் கண்ணீரோடு கட்டித் தழுவிக்கொண்டனர் விவசாயிகள். எங்கிருந்தோ வந்த மனிதர்! எத்தனை ஆண்டுகள் சிறை செல்லவும் தயாராகிவிட்டார். போராட்டம் எவ்வளவு காலம் நீடித்தாலும் அவர்களுடனேயே இருக்கும் முடிவை எடுத்துவிட்டார்!
காந்தி சிறை செல்வதற்கு ஒரு பெரும் படையை அணி அணியாகத் தயார்படுத்தினார். சிறை செல்லத் தயார் என்று நூற்றுக்கணக்கானோர் தங்கள் பெயரை அளித்தனர். கட்டுக்கடங்காத கூட்டம். அரசு பின்வாங்க முடிவெடுத்தது. காந்திக்கு எதிரான வழக்கு திரும்பப்பெறப்பட்டது. எல்லையில்லா உற்சாகத்துக்குச் சென்றார்கள் விவசாயிகள்.
பயத்திலிருந்து விடுதலை
தடையை உடைத்த காந்தி கிராமங்களை நோக்கிப் புறப்பட்டார். ஒவ்வொரு ஊரிலும் பிரபுக்களின் அத்துமீறல்கள், விவசாயிகளின் புகார்கள் கணக்கெடுக்கப்பட்டன. ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் காந்தி பக்கம் அணிதிரள்வதும், சம்பாரணிலிருந்தபடி சுரண்டலுக்கு எதிராக காந்தி பத்திரிகைகளுக்கு எழுதிவந்ததும் ஆங்கிலேயே அரசைப் பதற்றத்தில் தள்ளியது. தன்னைச் சந்திக்க வருமாறு காந்திக்கு சம்மன் அனுப்பினார் லெப்டினென்ட் கவர்னர் எட்வெர்ட் கெய்ட். காந்தி மீண்டும் சிறைவாசத்துக்குத் தயாரானபடியே விவசாயிகள் நியாயத்தைச் சொல்லும் ஆவணங்களைத் தயாரித்தார். எட்வெர்ட் கெய்டைச் சந்தித்தார். விவசாயிகளின் துயரங்களை அவருக்கே உரிய மென்மையான- தீர்க்கமான மொழியில் பேசினார். விளைவாக, விசாரணைக் குழு அறிவிக்கப்பட்டது. அதன் பரிந்துரையின்படி அடுத்த ஆண்டே சம்பாரண் விவசாயிகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையிலேயே நெருக்கடியின் விளைவாக காந்தியுடன் பேசும் முடிவுக்கு வந்தனர் பிரபுக்கள். காந்தியின் கை ஓங்கியிருந்த நிலையில், விவசாயிகளிடமிருந்து பெற்ற தொகையை முழுமையாக அவர் திரும்பக் கேட்பார் என்ற அச்சத்துடனேயே அவர்கள் வந்திருந்தார்கள். காந்தியோ, 50% தொகை என்ற கோரிக்கையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். பிரபுக்கள் தரப்பு 25% தொகையைத்தான் தர முடியும் என்று இறுதியாகச் சொன்னபோது அதை ஏற்றுக்கொண்டார். ஒப்பந்தம் நிறைவேறியது.
பின்னர் காந்தி சொன்னார், “ஆங்கிலேயர்கள் வாபஸ் கொடுக்கும் பணம் எவ்வளவு என்பது முக்கியம் அல்ல. அவர்கள் வாங்கிய பணத்தின் ஒரு பகுதியையேனும் திரும்பக் கொடுக்கும் நிலை ஏற்பட்டதுதான் முக்கியம். இதோடு அவர்கள் அந்தஸ்தையும் இழந்துவிட்டார்கள். நேற்றுவரை சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஆண்டைகளாக அவர்கள் நடந்துகொண்டார்கள். இன்று அந்தச் சூழல் மாறிவிட்டது. தனக்கும் உரிமைகள் உண்டு என்பதை இந்தியக் குடியானவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பயத்திலிருந்து அவர்கள் விடுபட்டிருக்கிறார்கள். நியாயமான கோரிக்கையுடன் நின்றால், அவர்களுக்குப் பரிந்து பேசவும் உடன் அணி திரளவும் தமக்கும் ஆட்கள் உண்டு என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் முக்கியம்!”
காந்தியின் கணக்கு வென்றது. வெகுவிரைவில் பிரபுக்கள் தங்கள் தோட்டங்களை விட்டு வெளி யேறினார்கள். அவுரி பயிர்வாரி முறை ஒழிந்தது. குடியானவர்களின் கைகளுக்கு நிலம் வந்தது. 22 லட்சம் விவசாயிகள் நேரடியாகப் பயனடைந்த போராட்டம் இது.
பல பரிமாணப் போராட்டம்
போராட்டம் என்கிற வார்த்தையின் இன்றைய அர்த்தத்தில்பார்த்தால், சம்பாரண் போராட்டமே அல்ல. ஆனால், காந்தியைப் பொருத்த அளவில் போராட்டம் என்பது உரையாடல். எதிர்த் தரப்போடு மட்டும் அல்ல; சொந்தத் தரப்போடும் நடத்தும் உரையாடல். காந்தியப் போராட்டங்களின் மிக முக்கியமான அம்சம் அவற்றின் பன்பரிமாணத்தன்மை. சம்பாரணிலேயே அது பிரதிபலித்தது.
விவசாயிகளுக்கான போராட்டத்தை விவசாயிகளைத் தாண்டிய, சாதி, மத, வர்க்க வேறுபாடுகளைக் கடந்த மக்கள் போராட்டமாகக் கட்டமைத்தது, சம்பாரணில் காந்தி செய்த முதல் சாதனை. தலித்துகள், முஸ்லிம்கள், பெண்களைப் பெருமளவில் போராட்டத் தளத்தில் காலடி எடுத்துவைக்க வைத்ததோடு, அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் எனப் பல்வேறு தரப்புகளையும் இப்போராட்டம் ஒருங்கிணைத்தது. ராஜேந்திர பிரசாத், ஜே.பி.கிருபளானி போன்றவர்களையெல்லாம் முழுநேர அரசியல்வாதிகளாக்கியதோடு மகாதேவ் தேசாய், நரகரி பாரிக், காகா கலேல்கர் போன்றவர்களை வாழ்நாள் சமூக நலச் சேவகர்களாக உருமாற்றியதிலும் இப்போராட்டத்துக்கு முக்கியமான பங்குண்டு.
ஒருமுனையில் சட்டரீதியாக பிரபுக்களை எதிர்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டபடி மறுமுனையில் மக்களை அணிதிரட்டிய காந்தி, மூன்றாவது முனையில் மிக முக்கியமான இன்னொரு வேலையைச் செய்தார். சம்பாரண் மக்களைச் சமூக மாற்றத்துக்குத் தயார்படுத்தியதே அது. செல்லும் இடங்களிலெல்லாம் தென்பட்ட ஏழ்மை, தீண்டாமை, அறியாமை, சுகாதாரமின்மையை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. மனைவி கஸ்தூரி பாவையும் நண்பர்களையும் வரவழைத்தவர் இவற்றுக்கு எதிராகப் போராட ஆறு பள்ளிக்கூடங்களை அங்கு தொடங்கினார். 12 வயதுக்குட்பட்ட எல்லோருக்கும் கல்வி போதிக்கும் பணியில் ஈடுபட்டனர் காந்தியின் தோழர்கள்.
போராட்டக் காலம் முழுவதும் பொதுச் சமையலே நடந்தது. இதற்கான பொறுப்பு கஸ்தூரி பாவினுடையது. பள்ளிக்கூடங்களில் மட்டும் அல்லாது, வீடுகளுக்கும் சென்று மக்களிடம் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள் காந்தி குழுவினர். நெசவு, தச்சு, தையல் போன்ற மாற்று ஆதாரங்களில் தொடங்கி கொள்ளைநோய்களையும் தொற்றுநோய்களையும் எதிர்கொள்வதற்கான எளிய வைத்திய முறைகளையும்கூட மக்களிடம் அவர்கள் கொண்டுசேர்த்தார்கள்.
இன்றைக்கும் பொருத்தப்பாடு இருக்கிறதா?
அறப் போராட்டங்களில் ஈடுபட்டு இன்றெல்லாம் பெரிய மாற்றங்களைச் சாதிக்க முடியவில்லை என்ற குறையோடு பேசுபவர்களிடம் எப்போதும் சம்பாரண் போராட்டத்தைத்தான் நான் முன்னுதாரணமாகக் கூறுவேன்.
இந்தியா போன்ற ஒரு மாபெரும் நாட்டின் விடுதலையை இலக்காகக் கொண்டு தன் பயணத்தைத் தொடங்கும் ஒரு தேசியத் தலைவரின் நிலையில் நாம் இருந்தால், இன்றைக்கெல்லாம் சம்பாரண் போன்ற யாராலும் கவனிக்கப்படாத ஒரு பகுதியின் விவசாயிகள் போராட்டத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருவோம்? ஒரு போராட்டத்துக்காக எத்தனை நாட்கள் ஒப்பளிப்போம்? காந்தி தன் ஆயுளில் கிட்டத்தட்ட ஒரு வருடம் சம்பாரண் போராட்டத்தில் கழித்தார். மனைவி கஸ்தூரி பாவையும் உடன் அழைத்துக்கொண்டார். அதைவிட முக்கியம், சிறையில், அதுவும் எவ்வளவு காலமானாலும் அதற்காகவே செலவிட அவர் தயாராக இருந்தார்.
ஆயுதம் கையில் இல்லை என்பதாலேயே ஒரு போராட்டம் அறப் போராட்டம் ஆகிவிடுவதில்லை. மனமெல்லாம் வெறுப்பு பொங்க வார்த்தைகளில் நெருப்பைக் கக்குவது எப்படி அறப் போராட்டம் ஆகும்? காந்தியப் போராட்டத்தின் அடிப்படை அன்பு. எதிர்த் தரப்பின் நம்பகத்தன்மையையும் மதிப்பையும் முதலில் பெறுவது. அவர்களுடைய பேச்சுக்கும் முக்கியத்துவம் அளிப்பது. சமரசமும் விட்டுக்கொடுத்தலும் இங்கே இழிவு அல்ல. அதுவே நெகிழ்வு. அதுவே இரு தரப்பு நெருக்கத்துக்கான பாலம்.
இந்திய மக்களின் மனதில் எப்போதுமே அறச் செயல்பாடுகளுக்கு என்று உயரிய ஒரு இடம் இருக்கிறது. முக்கியமாக, தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை யின் வாயிலாகவே ஆளுமைகளின் அரசியலையும் நம் மக்கள் தொடர்புபடுத்திக்கொள்கிறார்கள். காந்தி தன்னுடைய நல்லெண்ணச் செயல்பாடுகளாலேயே இந்த அரசியல் ஒருங்கிணைப்பைச் சாத்தியப்படுத்தினார். சம்பாரண் வெற்றிக்குப் பின் அதுவே விவசாயிகள் நாடான இந்தியா முழுமைக்கும் அவர் பெயரைக் கொண்டுசெல்லும் ஊடகமானது.
நீங்கள் ஆத்மசுத்தியோடு ஒரு காரியத்தைத் தொடர்ந்து செய்யும்போது, இந்நாடு உங்களைப் போற்றும் என்பதற்கான சம்பாரண் மரபின் சமீபத்திய உதாரணங்கள்தான் ஒரு சின்ன கிராமத்தில் வேளாண் மாற்றங்களுக்கு வித்திட்ட அண்ணா ஹசாரே முதல் முறை உண்ணாவிரதத்தில் உட்கார்ந்தபோது நாடு முழுக்க அவருக்குக் கிடைத்த பிரம்மாண்ட மரியாதை. தமிழகத்தில் மக்களிடம் தொடர்ந்து பயணித்த நம்மாழ்வாருக்கு விவசாயிகளிடம் கிடைத்த பெரும் மரியாதை!
காந்தி சொன்னார், “சம்பாரணில் நான் செய்த காரியம் சாதாரணமானது. ஆனால், என் நாட்டிலே பிரிட்டிஷார் ‘இப்படி நட, அப்படி நட’ என்று எனக்கு உத்தரவு போட முடியாது என்பதை அந்தப் போராட்டத்தின் மூலமாகப் பகிரங்கமாக அறிவித்தேன்.’’
சாதாரண காரியம். ஆனால், ஆத்மசுத்தியுடன் மேற்கொள்ளப்பட்ட அந்த சத்தியாகிரகமே பல்லாயிரம் ஆண்டுகளாக சாதிய, நிலவுடைமை ஆதிக்கச் சமூகமாக இருந்த இந்த நாட்டை அடுத்த முப்பதே ஆண்டுகளில் ஜனநாயகத்தில் காலடி எடுத்துவைக்க வழிவகுத்த மாபெரும் இந்தியப் புரட்சியாக உருவெடுத்தது. அதுவே இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மனித குலத்தின் பூர்வ விடுதலைக்கு ஒளி காட்டுகிறது.
வாழீ நீ எம்மான்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

0 comments:

Post a Comment

Kindly post a comment.