Thursday, April 27, 2017

மோடி உலகமயமாக்கலின் ஏக பிரதிநிதியானதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு என்ன?



சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தைக் கடக்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். எவ்வளவு பேருடைய உழைப்பும், தியாகமும் இன்று அர்த்தமற்ற ஒரு வெளிக்கூடாக உருமாறிவிட்டன! நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்குப் போகும் வழியில் உள்ள அந்தக் கட்டிடத்துக்கு, “கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம்” என்று வழி கேட்டு எங்கிருந்தேனும் ஒரு கிராமத்து விவசாயி வந்தால், அந்தக் கட்டிடத்தைப் பார்த்த மாத்திரத்தில் குழம்பிப்போவார். முழுக்க கார்ப்பரேட் அலுவலகப் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம். வெளியே கட்சியின் பெயர்ப் பலகைகூடக் கிடையாது. மாறாக, சர்வதேச சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனமான ‘தாமஸ் குக்’ நிறுவனத்தின் பெயர்ப் பலகை இருக்கும். அந்த ஏழு மாடிக் கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கும் நிறுவனங்களில் அதுவும் ஒன்று. காந்திய அறிஞரும் நண்பருமான அண்ணாமலையிடம் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தொடர்பில் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில், அவர் கேட்டார், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டிடத்திற்கும் ரிலையன்ஸ் அலுவலகத்தின் கட்டிடத்திற்கும் என்ன வேறுபாட்டை வெளியே மக்கள் உணருவார்கள்?”

இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் இன்று வந்தடைந்திருக்கும் முட்டுச்சந்து நிலைக்கான ஒரு பூடகக் குறியீடு என்று அந்தக் கட்டிடத்தைச் சொல்லலாம். சுதந்திரத்திற்குப் பின் தேர்தல் அரசியலில் பங்கேற்பது என்று இந்திய கம்யூனிஸ்ட்டுகள் முடிவெடுத்தது ஒரு வரலாற்றுத் தருணம். 1957-ல் கேரளத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு தலைமையில் அமைந்த அரசாங்கம், உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பது இந்திய பாணி கம்யூனிஸத்துக்கான மகத்தான அடிக்கல். அந்த சமரசம் - நெகிழ்வு ஒரு புரட்சிகர முடிவு.

அந்த சமரசத்தை ஆத்மார்த்தமாக அங்கீகரித்து, காலத்துக்கு ஏற்ப மாற்றங்களுக்கும், சமரசங்களுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் முகங்கொடுத்திருந்தால் இந்திய பாணி கம்யூனிஸம் இன்று சர்வதேசத்துக்கான முன்னுதாரணங்களில் ஒன்றாக இருந்திருக்கும். மாறாக, இங்கு நடந்த புரட்சிகளையும் இந்த மண்ணில் நடந்த சாதனைகளையும் பொருட்படுத்தாத அவர்களது மனம் ரஷ்யாவைப் பார்த்தும் சீனாவைப் பார்த்தும் குழம்பிக்கொண்டே இருந்தது. தீவிரத்தன்மையை முன்மொழியும் மாவோயிஸ இயக்கங்களின் எழுச்சியும் விமர்சனங்களும் அவர்களை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கின. உலகமயமாக்கலுக்குப் பிந்தைய காலகட்டத்தில் உறைந்தேபோனார்கள்.

உலகமயமாக்கல் ஒரு மாபெரும் வரலாற்றுப்போக்கு. சோஷலிஸ ஆதரவாளனாக எனக்குக் கடுமையான விமர்சனங்கள் அதன் மீது உண்டு. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றத்தாழ்வுகளை அது கடுமையாகத் தீவிரப்படுத்தியிருக்கிறது என்று குற்றஞ்சாட்டும் அதே நிலையில், மறுபுறம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெருந்தொகையிலான மக்களைப் பசியிலிருந்தும் அது மீட்டெடுத்திருக்கிறது என்ற பார்வையுடனேயே அதை அணுக முயற்சிக்கிறேன். சமத்துவத்துக்கு எதிரான பெரும் சுவராக அது உருவெடுத்திருக்கிறது என்று குற்றஞ்சாட்டும் அதே நிலையில், மறுபுறம் வாய்ப்புகளைப் பெரிய அளவில் பரவலாக்கியிருக்கிறது என்ற பார்வையுடனேயே அதை அணுக முயற்சிக்கிறேன்.

பொருளியல் அறிஞர் எஸ்.நீலகண்டன் சொல்வார், “பல்லாயிரம் ஆண்டு காலப் பழம்பெருமை பேசுகிறோம். ஆனால், ரயிலின் வருகைக்கு முன் உலகின் எந்த நாட்டிலும், யாருடைய அரசிலும் ஒரு ஆட்சியாளனும் மக்களும் ஒரே வேகத்தில் பயணித்தது கிடையாது. ஒரு யுத்தம் நடக்கிறது என்றால், அரசனும் ஒரு சிறு பகுதி படையும்தான் குதிரைகளில் சென்றார்கள். படையின் பெரும் பகுதியினர் கால்நடையாகத்தான் சென்றார்கள். மனித குல வரலாற்றில் முதன் முதலில் ஒரு ராஜாவும், ஒரு சாமானியனும் ஒரே நேரத்தில், ஒரே வேகத்தில் பயணிக்க முடிந்தது என்றால், ரயிலால் நிகழ்ந்த புரட்சி அது. ஒரு பிரதமர் சொகுசான வசதியோடு முதல் வகுப்பில் பயணிக்கலாம், ஒரு குடியானவர் இரண்டாம் வகுப்பில் கழிப்பறை அருகில் நிற்க இடமில்லாமல் நெரிசலில் நின்றுகொண்டிருக்கலாம். ஆனால், வரலாற்றில் அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் இன்று சென்றுகொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவம் சாமானியர்களுக்காக ரயிலைக் கொண்டுவரவில்லை. ஆனால், சாமானியர்களும் அதில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையினூடாகத்தான் நாம் ரயிலை அணுக வேண்டும்.”

நமக்கு ரயில் வேண்டும். அதேசமயம், இரண்டாம் வகுப்பில் கழிப்பறை அருகில் நிற்பவரும் கண்ணியமான இடத்தில் அமர்ந்து பயணிக்கும் நிலையும் வேண்டும். அதற்கேற்றபடி நம் கொள்கைகள் அமைய வேண்டும். நாம் வேறு ஒரு வாகனத்தை உருவாக்காத நிலையில், ரயில் எனும் அமைப்புக்கு நேர்மறையாக முகங்கொடுத்தால்தான், அதன் குறைகளைப் போக்குவதுபற்றி ஆக்கபூர்வமாக நாம் உரையாட முடியும். இன்று உலகின் பல கம்யூனிஸ நாடுகள் இந்தப் புள்ளியை நோக்கி நகர்ந்திருக்கின்றன. இந்தக் கட்டுரையை எழுதும் தருணத்தில் சீன அதிபர் ஜின் பிங் சமீபத்தில் டாவோஸில் நடந்த உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் பேசிய உரை என் கையில் இருக்கிறது. அமெரிக்க நலன்களை முன்னிறுத்தி உலகமயமாக்கலுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருக்கும் நிலையில், அதை நிராகரித்து, உலகமயமாக்கல் பாதையிலேயே உலகம் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தொடர்ந்தும் உலகமயமாக்கலை முன்னெடுக்க சீனா பொறுப்பேற்கும் எனும் சமிக்ஞையையும் வெளியிட்டிருக்கிறார் ஜின் பிங்.

மீண்டும் கூறுகிறேன். உலகமயமாக்கல் வெறும் எண்களில் மட்டும் இல்லை. பொருளாதாரத் தளத்திலிருந்து மட்டுமே அதைப் பார்ப்பவர்கள் கலாச்சாரத் தளத்தில் அது உண்டாக்கியிருக்கும் மாற்றங்களைப் பொருட்படுத்துவதில்லை. பாகுபாடு நிறுவனமயமாக்கப்பட்ட இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் கிராமங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, இருளில் முடங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான அடித்தட்டு மக்கள், முக்கியமாக பெண்கள் நவீன வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கான பாதையை அது இன்று திறந்துவிட்டிருக்கிறது.

எந்த இயக்கமும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். பாஜகவின் வளர்ச்சியை இதனூடாகவும் பார்க்க வேண்டும். காலங்காலமாக சுதேசியம் பேசிவந்த ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜக எப்படி இன்று உலகமயமாக்கல் பொருளாதாரத்தின் பிரதிநிதியாகத் தம்மை முன்னிறுத்திக்கொள்கிறது? நவீன வாழ்க்கை நோக்கி வேட்கையோடு வரும் இந்திய இளைய சமூகத்தை அவர்கள் புரிந்துகொண்டிருக்கின்றனர்.

எளிய மக்களைப் பரிவுணர்வோடு அணுகும் கம்யூனிஸ்ட்டுகள் உலகமயமாக்கல் சட்டகத்துக்குள் வந்து, ஒரு சோஷலிஸ மாற்றை முன்வைத்திருந்தால் இந்தியாவில் உலகமயமாக்கலின் இன்றைய கோரங்களை எவ்வளவோ கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றே நம்புகிறேன்.

ஒரு அமைப்புக்கு வெளியிலிருப்பதைக் காட்டிலும் உள்ளிருந்தால் அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதற்கு சுதந்திர இந்தியாவின் முதல் 70 ஆண்டுகளில் அதிகபட்ச வளர்ச்சியைக் கொடுத்த ஆட்சி என்று பலராலும் மெச்சப்படும் மன்மோகன் சிங்கின் முதல் 5 ஆண்டு கால (2004-2009) ஆட்சியை ஓரளவுக்கு இதற்கு உதாரணப்படுத்தலாம். கம்யூனிஸ்ட்டுகள் வெளியிலிருந்து ஆதரவு தந்து, கட்டுப்படுத்திய தாராளமய ஆட்சி அது.

உலகமயமாக்கலைப் பொருளாதாரரீதியாக வரித்துக் கொள்வதில் காங்கிரஸோடு, திமுக, அதிமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் பாஜகவைக் காட்டிலும் ஒருபடி முன்னே நின்றன. விமர்சனப் பார்வையினூடாக அவற்றால் உலகமயமாக்கலைப் பார்க்க முடியவில்லை; எல்லோருக்குமான வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி எனும் நிலை நோக்கி அவர்களால் செல்ல முடியவில்லை என்றாலும், பாஜகவைக் காட்டிலும் அவர்கள் சாதித்தவை ஏராளம். தனித்து நின்ற கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் அதீத எதிர் பிரச்சாரத்தால் சாதித்தது என்னவென்றால், எல்லோரையும் பொதுமைப்படுத்தியதும், இடது பக்கமிருந்தவர்களின் சாதனைகளை அவர்களே பேச முடியாதபடி, குற்றவுணர்வை நோக்கி அவர்களைத் தள்ளியதும்தான். நரசிம்ம ராவ் தொடங்கி கருணாநிதி, ஜெயலலிதா வரை உலகமயமாக்கலை முன்வைத்து தாம் கொண்டுவந்த கொஞ்ச நஞ்ச வளர்ச்சிக்கும் உரிமை கோராமலேயே மௌனித்திருந்தார்கள். மௌனச் சூழலில் எதிரே உலகமயமாக்கலின் ஏக பிரதிநிதியாக ‘வளர்ச்சியின் நாயகன்’ என்று மோடி தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டு நிற்கிறார்!

(உணர்வோம்)

- சமஸ்,

தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

the hindt tamil

0 comments:

Post a Comment

Kindly post a comment.