Tuesday, November 8, 2016

சீக்கிய ஞானாசிரியரை வணங்குவதா?





பேஸ்புக்கில் தீபாவளி பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன். அதற்கு சில எதிர்வினைகள் வந்தன. இது தொடர்பான என் பதில் :

முதலில் நான் இட்ட பதிவு :

தீபாவளி சமணப் பண்டிகை. அதை இந்துக்கள் ஏன் கொண்டாட வேண்டும்? என்று கேட்கிறார்கள்.

பவுத்த, ஜைன மதங்கள், அவற்றின் பிம்பங்கள், குருமார்கள், தீர்த்தங்கரர்கள் இவர்கள் அனைவருமே நமது மூதாதைகள் தான். பாரதவர்ஷத்தில் பிறந்த பெரும் ஞானத் தேடல் பாதைகளின் பிரதிநிதிகள் இவர்கள். இவர்களுடன் தொடர்புடைய ஒரு நிகழ்வே தீபாவளி என்று வைத்துக்கொண்டால் கூட, அதுவும் நமது பண்டைய நிகழ்வே.

இவை தவிர, இந்த ஞானத் தேடல்களின் மேல் கட்டி எழுப்பப் பட்ட அத்வைத, விசிஷ்டாத்வைத, துவைத ஞான மரபுகள், சில ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பாரத பண்பாட்டின் சங்கிலித் தொடர் அமைப்பை நமக்கு நினைவுபடுத்துவன.

ஒன்றை அழித்து இன்னொன்று என்பது அல்ல; ஒன்றிலிருந்து இன்னொன்று என்பது நமது பண்பாடு. இரண்டும் உண்மைகளே; இரண்டு வழிகளின் குருமார்களும் ஆச்சாரியர்களே. பாரதத்தின் பன்முகத்தன்மை இதுவே.

நமது தர்மத்தைக் காக்க சீக்கிய குருமார்கள் செய்த தியாகங்களை மறக்கமுடியுமா? ஆதிசங்கரரும், மத்வாச்சார்யரும், இராமானுஜரும் எப்படி நமது ஞானாசிரியர்களோ அப்படியேதான் பவுத்த, ஜைன, சீக்கிய ஞான ஆசிரியர்களும்.

அவர்களது பண்டிகைகளும் நம்முடையனவே. அவரே நாம்.

‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு

புத்தர் பிரானருள் பொங்கிய நாடு

பாரத நாடு பழம் பெரும் நாடு’ – பாரதி.

எதிர்வினைகள் வந்த பின் என் பதில்:

‘சீக்கிய குருமார்களை வணங்குவதா? அவர்களை சங்கரர், இராமானுசர் போன்ற ஞானாசிரியர்கள் வரிசையில் சேர்ப்பதா? ஏன் இந்த சமரசப் பேச்சு?’ என்று கேட்கிறார்கள்.

நண்பர்களே, உங்களுக்கு ரத்தத்தில் தோய்ந்த நமது வரலாறு தெரியுமா?

திருவரங்கத்தில் உலுக்கான் என்னும் துக்ளக் வம்ச அரசன் 12,000 வைணவர்களைக் கொடூரக் கொலை செய்தது நீங்கள் அறிந்தது அல்லவா? அந்த வெறியாட்டத்திற்கு இடையிலும் திருவரங்கனின் திருவுருவைக் காக்க வேதாந்த தேசிகரும், பிள்ளைலோகாசாரியரும் பட்ட துன்பங்களை நீங்கள் அறிவீர்கள் தானே? அது போல இன்னொரு ரத்தம் தோய்ந்த வரலாறும் உண்டு.

காஷ்மீரத்தின் பண்டிதர்களுக்கு இரண்டு வழிகளை அளித்திருந்தான் ஒ௱ரங்கஜீப். மதம் மாறினால் உயிர் வாழலாம்; இல்லையெனில் மரணம். பண்டிதர்கள் ஒன்பதாவது சீக்கிய குரு தெக் பகதூரிடம் முறையிட்டனர். சனாதன தர்மத்தைக் காப்பதில் பெரும் பற்றுடையவரான குரு தெக் பகதூர் தில்லி சென்று ஒ௱ரங்கஜீபிடம் பேசிப்பார்த்தார். காஷ்மீரத்துப் பண்டிதர்களை வற்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

விதி சிரித்தது. கொடுங்கோலன் ஒ௱ரங்கஜீப் குருவைக் கைது செய்தான். அவரையே மதம் மாற வற்புறுத்தினான். எண்ணிப்பார்க்க முடியாத கொடுமைகளை இழைத்தான். காஷ்மீரத்துப் பண்டிதர்களுக்காக அனைத்து சித்ரவதைகளையும் தாங்கிக்கொண்டார் குரு. அவருடன் தில்லிக்கு வந்த இரு தொண்டர்களை அவர் கண் முன்னரே வெட்டிச் சாய்த்தான். குரு மிருகங்கள் அடைக்கப்படும் கூண்டில் இருந்தபடி இதனைப் பார்த்தார்.

ஆயினும் அவர் மனம் மாறவில்லை. மதம் மாற மறுத்தார். மேலும் கொடுமைகளைச் சந்தித்த பின் நவம்பர் 11, 1675 அன்று தில்லியில் பலர் முன்னிலையில் தியாகமே உருவாக நின்ற குருவுன் தலையை வெட்ட. ஒ௱ரங்கஜீப் உத்தரவிட்டான். வீதியில் வணக்கத்திற்குரிய குரு தெக் பகதூரின் தலை தனியாக உருண்டது.

காஷ்மீரத்துப் பண்டிதர்கள் சீக்கியர்கள் அல்லர். ஆயினும் பாரதப் பண்பாட்டின் பிரதிநிதிகளாய் அவர்கள் இருந்ததை குரு தெக் பகதூர் உணர்ந்திருந்தார். தன்னிகரில்லாத் தியாகமாய் தனது உயிரை பலிதானமாக்கினார். தில்லியின் வீதியில், குருவின் குருதி கலந்தது; பாரதத்தாயின் மடியில் அவரது தலை வீழ்ந்தது. தனியான தலையை யாருமறியாமல் எடுத்துக்கொண்டு அவரது சீடர்  பாய் ஜீவன் சிங்  பஞ்சாபில் உள்ள ஆனந்தபூருக்குச் சென்றார். அங்கு குருவிற்கு இறுதி மரியாதைகள் நடந்தன.

350px-guruteghbahadurகவனிக்க வேண்டியவை: பாதிக்கப்பட்டவர்கள் காஷ்மீரத்து பண்டிதர்கள். அவர்களுக்காகத் தன்னையே பலிதானமாக்கிக் கொண்டவர் சீக்கிய ஞான மரபின் குரு.

காஷ்மீரத்து சாரதா பீடத்தில் இருந்த ‘பிரும்ம சூத்திரம்’ நூலிற்கு இராமானுசர் பாஷ்யம் எழுதினார் என்பது நினைவிருக்கலாம். பாரதப் பண்பாட்டின் ஊற்றுக்கண் காஷ்மீரம். அதன் பண்டித மக்கள் அந்த ஊற்றுக்கண்ணின் வாரிசுகள் என்பதை குரு தெக் பகதூர் உணர்ந்திருந்தார்.

பாரதப் பண்பாட்டிற்காக தன்னையே பலிகொடுத்த அந்த மகானை ஞானாசிரியனாக வணங்குவதில் என்ன தவறு உள்ளது? இதில் ‘சமரசப் பேச்சு’ எங்கிருந்து வந்தது?

தில்லியின் வீதிகளின் நடக்கும் போது அந்த ஞானாசிரியனின் ரத்தம் கலந்த அந்த மண்ணை சற்று எண்ணிப் பாருங்கள். அந்த மண் சொல்வது இது தான்: “பாரத மண்ணில் தோன்றிய எந்த ஞான மரபுமே நமது தாய் மரபு தான். இந்த உண்மையை உணர்வது நமது பண்பாட்டு ஒருமையை உணர்வதற்குச் சமம்.”

References:

Holy Warriors – Edna Fernandes..
Punjab: A history from Aurangazeb to Mountbatten – Rajmohan Gandhi.
Later Mughals – William Irvine.
Share this:
Click to share on Twitter (Opens in new window)44Share on Facebook (Opens in new window)44

 நன்றி :- :- https://amaruvi.in/

0 comments:

Post a Comment

Kindly post a comment.