Friday, November 11, 2016

அடுத்த வாரம் வீடு திரும்ப வாய்ப்பு: ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்றதாக லண்டன் டாக்டர் பீலே பேட்டி!



முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்றுவிட்டதாகவும், அடுத்த வாரம் அவர் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே கூறினார்.

அ.தி.மு.க. பொது செயலாளரும், தமிழக முதல்–அமைச்சருமான ஜெயலலிதா, உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22–ந் தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

50–வது நாளாக சிகிச்சை
நேற்று 50–வது நாளாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிங்கப்பூர் பிசியோதெரபி சிகிச்சை நிபுணர் ஜூடி மட்டும் உடற்பயிற்சி அளித்தார். நேற்று காலை 8.15 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்த அவர் மாலை 6.15 மணிக்கு அங்கிருந்து வெளியே சென்றார்.

இதற்கிடையே, லண்டன் திரும்பி சென்றுள்ள டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவை சந்திக்க அங்குள்ள தமிழர்கள் கடந்த 3 வாரத்திற்கு முன்பு முயற்சி மேற்கொண்டனர். அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது அலுவலகத்தில் இருந்தவர், டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது, டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே லண்டன் திரும்பியுள்ள நிலையில், நேற்று முன்தினம் காலை 11.30 மணி அளவில் லண்டன் வாழ் தமிழர்கள் அவரை சந்தித்து பேசினார்கள். அப்போது, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

லண்டன் டாக்டர் விளக்கம்
பின்னர், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் லண்டன் வாழ் தமிழர்களிடம் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே விளக்கி கூறினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் கொடுத்த மருத்துவம் சரியான பாதையில் சென்றது. அதை அவருடைய உடல் ஏற்றுக்கொண்டது. அவர் தற்போது பூரண நலம் பெற்றுவிட்டார். வரும் வாரத்தில் அவர் வீடு திரும்புவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை அவரே முடிவு செய்வார்.

நான் உலகின் பல தலைவர்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறேன். ஆனால், தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததில் பெருமையடைகிறேன். அவர் ஒரு சிறந்த தலைவர். தமிழக மக்கள் அவர் மீது வைத்துள்ள அன்பை கண்டு நான் நெகிழ்ச்சி அடைந்தேன். தீபாவளி பண்டிகையை தமிழகத்தில் தான் கொண்டாடினேன். தமிழக மக்கள் மிகவும் அன்பானவர்கள்.  இவ்வாறு டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே கூறினார்.

நடிகர் ஆனந்தராஜ்
இந்த நிலையில், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக தினமும் முக்கிய பிரமுகர்கள் பலர் வந்து செல்கின்றனர். நேற்று பிரபல நடிகரும், அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளருமான ஆனந்தராஜ் வந்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.

அப்போது, நடிகர் ஆனந்தராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

நம்முடைய பிரார்த்தனையினாலே எப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற்றாரோ, மிக விரைவில் அவர் வீட்டிற்கும் திரும்புவார். அது நமக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும். தமிழகத்தில் 3 தொகுதியிலும், புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க. பெறப்போகும் வெற்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறந்த மருந்தாக அமையும். அது நிறைவேறும். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் இருந்து எப்படி ஒரு சாதனையை படைத்தாரோ அதேபோன்ற ஒரு சாதனையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நிச்சயம் செய்வார்.  இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.