Friday, November 4, 2016

ஒரு பார்வையில் சென்னை நகரம் - அசோகமித்திரன்


ஒரு பார்வையில் சென்னை நகரம்


வெனிஸ், பாங்காங் நகரங்கள் போலச் சென்னைக்கும் நீர்வழித் தடங்கள் மூன்று. அவை மக்கள் வசிக்கும் இடங்கள் நடுவில் சென்றாலும் மூன்றும் இன்று கழிவு நீர் எடுத்துச் செல்லவும், வெள்ளத் தடுப்புக் கால்வாய்களுமாகத்தான் உள்ளன. ஆனால் மூன்றில் ஒரு தடத்தின் பெயரில் ஒரு பேட்டையே உள்ளது. அது அடையார்.

இது அடையாரா அல்லது அடையாறா? ஓர் ஆற்றின் பெயரை ஆரு என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லியும் எழுதியும் அடையார் அடையாராகத்தான் இருக்கிறது.

ஆனால் அடையார் அடைந்துள்ள மாற்றங்கள் பல சென்னைப் பேட்டைகளுக்கு நேரவில்லை. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்பக்கம் ஒரே ஒரு பஸ்தான் போகும். அது ஐந்தாம் எண் வழித்தடம். இன்று இந்த ஐந்து தவிர இன்னும் இருபத்தைந்து வழித்தடங்கள் அடையார் செல்லவும், அடையாரைக் கடக்கவும் உள்ளன. ஒரு காலத்தில் தி.நகரிலிருந்து நடந்துதான் அடையார் செல்ல வேண்டும். சைக்கிள் உள்ளவர்கள் சைக்கிளில் செல்லலாம். அப்போது கோட்டூர்புரம் வழி கிடையாது. அங்கு அடையாரைக் கடக்கப் படகில் போக வேண்டும். சைக்கிளையும் எடுத்துக்கொண்டு படகில் ஏறலாம். எதற்கும் ஓரணா. அணா என்பது இன்றைய ஆறு பைசாவுக்குச் சமம். பைசா என்பது ஒரு ரூபாயில் நூறில் ஒரு பங்கு. பைசா எல்லாம் இப்போது புழக்கத்தில் இல்லை. அப்படியும் கூறுவதற்கில்லை. சென்னை மாநகரப் போக்குவரத்து பஸ்களில் பல தருணங்களில் கால் ரூபாய் சில்லறை திருப்பித் தர இருபது காசுகள்தான் தருகிறார்கள்.

அடையார் அதன் ஆலமரத்துக்காகப் பெயர் போனது. இந்த ஆலமரம் இருந்த இடம் பிரம்மஞான சபைக்கு உரிமையான மிக விசாலமான இடம். இது அடையாறு நதிக்கரையோரமாக ஒரு பாலத்திலிருந்து கடற்கரை வரையில் பரவியிருக்கிறது. நட்ட நடுவில் இந்த ஆலமரம். இதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய ஆலமரம் என்று கூறியவர்கள் உண்டு. சிறிது சந்தேகம் உடையவர்கள் இது இரண்டாவது பெரிய ஆலமரம் என்பார்கள். அப்படியானால் முதல் பெரிய ஆலமரம் எது? ஒருவர் கல்கத்தாவில் உள்ளது என்பார். இன்னொருவர் காசியில் உள்ளது என்பார். இன்னும் ஒருவர் பிரயாகையில் இருக்கிறது என்பார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெரிய புயல் அடித்ததில் இந்த மரம் சாய்ந்துவிட்டது. சாய்ந்ததை நிறுத்தி வைக்கப் பெரிய கிரேன்களெல்லாம் தருவிக்கப்பட்டு, ஒரு பெரிய குழி தோண்டப்பட்டு மரத்தை நிறுத்தி வைத்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை. ஆனால் மரத்திலிருந்து கீழிறங்கிப் பூமியில் வேரெடுத்த பல விழுதுகள் பல மரங்களின் கொத்தாகக் காட்சியளிக்கின்றன.

இந்த ஆலமரத்தின் அடியில்தான் உலகத்தின் தலைவிதியை அன்றே நிர்ணயித்து விடுவதுபோலப் பிரம்மஞான சபையினர் கூடிப் பேசுவார்கள். இந்த மரத்தடியில் ஜே. கிருஷ்ணமூர்த்தியும் பேசியிருக்கிறார். இந்த ஆலமரத்தை விட்டுவிட்டு ஓர் அரச மரத்தடியை அவர் தேடிக்கொண்டு போய்விட்டார். அந்த இடத்தையும் பல வருடங்கள் அடையார் என்று சொன்னாலும் இப்போது அண்ணாமலைபுரமாகி விட்டது. அடையாருக்கு இப்போது திட்டவட்டமான எல்லைகள் வகுக்கப்பட்டுவிட்டன. அடையாரிலேயே பல பகுதிகள் பெயரிடப்பட்டுத் தனித் தனியாகப் பிரதான சாலை, குறுக்குச் சாலை என்று ஏற்பட்டுவிட்டது.

தொடக்கத்தில் அடையார் இந்த பிரம்மஞான சபையைத் தவிர சில பணக்காரர்களின் வசிப்பிடமாக இருந்தது. கடற்கரையோரம் மீனவர்கள் இடமாக இருந்தது. ‘அடையார் பீச்’ என்பதற்கு யதார்த்தமாகவும் குதர்க்கமாகவும் பொருள் இருந்தது. அடையார் நூலகம் உலகப் பிரசித்தமாகச் சமீபகாலம்வரை விளங்கியது. பிரம்மஞான சபையின் ஓர் அங்கமாக விளங்கிய இந்த நூலகத்தில் பல புராதன ஓலைச்சுவடிகள் உள்ளன. இவை பற்றி பிரம்மஞான சபையின் ஸ்தாபகரும் முதல் தலைவருமான அமெரிக்கக் கர்னல் ஆல்காட் தன்னுடைய ‘ஓல்ட் டைரி லீவ்ஸ்’ என்று பெயரிடப்பட்ட சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆல்காட் துரையும் இன்னொரு ஸ்தாபகரமாக மேடம் பிளவாட்ஸ்கி அம்மையாரும் அமெரிக்காவில் நிறுவிய பிரம்மஞான சபையை அடையாருக்குப் புலம் பெயர்த்தனர். இது பல விதங்களில் புரட்சிகரமான முடிவு என்று எல்லாருக்கும் தெரியாது. பல சாமியார்க் கூட்டங்கள் போல இதுவும் ஒரு வெள்ளைச் சட்டைச் சாமியார்க் கூட்டம் என்றுதான் இன்றும் ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது. இந்த வெள்ளைக்காரர்கள் இந்தியத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டதோடு இவர்களுக்கு வழிகாட்டுபவர்கள் இமய மலையில் வாழும் சில சித்த புருஷர்கள் என்று நம்பினார்கள். அத்தகைய சித்த புருஷர் ஒருவர் ஆல்காட் துரை முன் பிரசன்னமாகி அவருடைய தலைப்பாகையைக் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இந்தத் தலைப்பாகை பத்திரமாக இரும்புப் பீரோவில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அந்த மகானின் பெயர்கூட முனி என்றும் இந்த ‘ஓல்ட் டைரி லீவ்ஸ்’ நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பிரம்மஞான சபை உலகளாவியதாக இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. முன்பு சென்னைக்கு வருபவர்கள் உயிர்க் காலேஜ் (மூர் மார்ககெட் பகுதியில் இருந்த வனவிலங்குக் காட்சி சாலை), செத்த காலேஜ் (மியூசியம்) மற்றும் மெரினா கடற்கரையோடு இந்த பிரம்மஞான சபையையும் சுற்றிப் பார்ப்பார்கள். மிக விசாலமான அந்த இடத்தில் அங்கோர் இடத்தில் இங்கோர் இடத்தில் எனப் பழங்காலக் கட்டிடங்கள் இருக்கும். மிகுதி இடங்கள் சோலை போலவும் இருக்கும், காடு போலவும் இருக்கும். அந்தச் சபையினர் நம்பிய ஆவிகள் உலவுவதற்கு மிகவும் ஏற்ற இடமாகத்தான் இருக்கும்.

அடையார் பாலம் சுமார் பன்னிரண்டு அடி அகலமாகத்தான் இருந்தது. பாலத்தின் கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு கடற்பக்கம் பார்த்தால் தூரத்தில் செட்டி நாட்டரசர்கள் மாளிகையும் ஆற்றின் நடுவில் சில சிறு தீவுகளும் தெரியும். என் சைக்கிளை நிறுத்தி வைத்து நான் எவ்வளவோ நாட்கள் அங்கு கடலைப் பார்த்தபடி மணிக்கணக்கில் நின்றிருக்கிறேன். எப்போதோ ஒரு சமயம் ஒரு வண்டி போகும். ஒரு ஜட்கா (குதிரை வண்டி) போகும். இன்று பழைய பாலத்தருகில் மிக அகலமான பாலம் அமைக்கப்பட்டு இரவு பகல் வேறுபாடு இல்லாமல் ஆயிரக்கணக்கில் பஸ்களும் இதர வண்டிகளுக்கும் செல்கின்றன. நடந்து வருவோர் மிக மிகக் குறைவு. தென் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்குப் போக அடையார் வழியாகச் செல்லும் சாலை மிகவும் முக்கியமானது.

ஆலமரம், கடற்கரை, பிரம்மஞான சபை, நூலகம் தவிர இன்னொரு நிறுவனத்துக்கும் அடையார் பெயர் போனது. அது ஒரு காலத்தில் பிரம்மஞான சபையிலே இருந்து வளர்ந்த கலாக்ஷேத்திரம் என்னும் கலைப்பயிற்சிக் கூடம். இதை நிறுவிய ருக்மணி தேவி அவர்கள் பரத நாட்டியத்தைக் கௌரவத்துக்குரிய கலையாக அங்கீகாரம் பெற வைத்தார்கள். அவர்களே நடனம் ஆடினார்கள். அவருடைய நெருங்கிய உறவினர்களை ஆட வைத்தார். அநேக குழந்தைகளுக்கு நடனம் மட்டுமல்லாமல் இசை, ஓவியம், கலை, வரலாறு இவற்றுடன் முறையான பள்ளிப் படிப்பு முடிக்கச் சாத்தியமுள்ள முறையில் கலாக்ஷேத்ராவை நடத்தினார். சில ஆண்டுகள் முன்பு பிரம்மஞான சபையிலிருந்து விலகி கலாக்ஷேத்ராவை ஒரு தனி, தன்னிறைவு பெற்ற நிறுவனமாகவும் பயிற்சிக் கூடமாகவும் அமைத்தார்.

ருக்மணி தேவி இதர பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். புலால் தவிர்க்கும் இயக்கத்துக்கு ஒரு முக்கிய தலைவராக விளங்கினார். கலாக்ஷேத்ரா நடத்தும் பொது நடன நிகழ்ச்சிகள் கலையழக்கும் பண்புக்கும் புகழ் பெற்றவை. தென்னிந்தியாவின் மகத்தான இசைக் கலைஞர்கள் கலாக்ஷேத்ரா வாயிலாகப் பணிபுரிந்திருக்கிறார்கள். சமீபத்தில் எழுத்தாளர் கல்கியின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக அவர் எழுதிய பாடல்களைக் கொண்ட இசை நிகழ்ச்சி கலாக்ஷேத்ராவில் நடத்தப்பட்டது. சொந்த வண்டிகள் இருப்பவர்கள்தான் கலாக்ஷேத்ராவுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் போக முடியும். அப்படியிருந்தும் சுமார் ஆயிரம் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்குக் குழுமியிருந்தார்கள். அது கலாக்ஷேத்ரா பங்கு பெற்றதாலேயே மிகுந்த நேர்த்தியும் பண்பாடும் கொண்டதாக விளங்கியது.

ஆன்மிகம், கலை தவிர இன்னொரு துறைக்கும் அடையார் பெயர் போனது. அது புற்று நோய் மருத்துவம். சென்னை புற்று நோய் மருத்துவமனை இப்போது விரிவடைந்து அதன் முக்கியப் பகுதிகள் ஐ.ஐ.டி. அருகில் உள்ளதோர் இடத்தில் இயங்குகின்றன. ஆனால் மருத்துவமனை இப்போதும் அடையாரில்தான் உள்ளது. அந்த மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளைக் கண்ணால் பார்த்தால் யாருமே சித்தார்த்த இளவரசன் போலத்தான் பாதிக்கப்படுவார்கள். மனிதனுக்கு இப்படியும் நோய் காண முடியுமா, இப்படியும் உடல் சிதைவுற முடியுமா என்று மூச்சே நின்று போகும்வண்ணம் அங்கு நோயாளிகள் படுக்கையில் கிடப்பார்கள்.

புகழ்பெற்ற ஔவை இல்லம் என்றதொரு விசேஷ அமைப்பும் அடையாரில் உள்ளது. பெண்ணாகப் பிறந்தவர் பலருக்குப் பல விபரீதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அனைவராலும் கைவிடப்பட்டு நிராதரவாகத் தெருவில் விடப்படும் பெண்களுக்கு ஒரு புகலிடம் ஔவை இல்லம். இந்த அரிய சமூகத் தொண்டில் தலைவராக விளங்கிய முத்துலட்சுமி ரெட்டி அவர்களைக் கௌரவிக்கும் வகையில் அடையாரின் ஒரு முக்கியச் சாலைக்கு முத்துலட்சுமி சாலை என்று பெயர் சூட்டப்பட்டது. அதே சாலைக்குக் கல்கி அவர்களின் பெயரும் சமீபத்தில் சூட்டப்பட்டது. பழைய பெயர்களை மாற்றுவதில் உள்ள அபாயங்கள் சரியாக உணரப்படாதிருப்பதையே இது காட்டுகிறது. ஏனோ அந்த சாலையை இன்னமும் பலர் ‘லாட்டிஸ் பிரிட்ஜ் சாலை’ என்றுதான் அடையாளம் சொல்கிறார்கள். அதாவது பலகை வாராவதி சாலை.

இன்றும் அடையார், வசதியுள்ளவர்கள் மிகுதியாக வசிக்கும் இடம்தான். அது அங்குள்ள கடைகளின் தோற்றத்திலும் அமைப்பிலும் நன்கு விளங்கும். ஏழைகள் கடற்கரையோரமாகவும் அடையாரின் ஓர் எல்லையாக விளங்கும் பக்கிங்காம் கால்வாய் ஓரமாகவும், தாமோதபுரம் என்ற இடத்திலும் வசிக்கிறார்கள். இப்பகுதிகளில்தான் சென்னையில் முதன்முறையாக அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்தக் கால்வாய்க் கூரைவாசிகளின் வாழ்வில் கூடிய விரைவில் ஒரு புதிய அனுபவம் ஏற்படப்போகிறது. அதுதான் ‘பறக்கும் இரயில்’. இப்போதே இந்த இரயில் பாதைக்கான தூண்கள் கால்வாய் ஓரமாக நிற்கின்றன. அடையார்வாசிகளுக்கே இது ஒரு முக்கிய திருப்பமாக இருக்கக்கூடும். இரயிலின் ஒரு முதல் விளைவு அந்தச் சுற்றுப்புறத்தை ஜனநாயகப்படுத்துதல்; இரண்டாவது அதிகப்படி வேலைவாய்ப்பு சிறு கடைகள் மூலம் கிடைக்கக்கூடும். இரயில் நிலையத்துக்குரிய விரும்பத்தகாத அம்சங்களும் புகுந்து விடும். எல்லாரும் முன்ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஆனால் எதற்குத்தான் எவ்வளவுதான் முன்ஜாக்கிரதையாக இருக்க முடியும்? எவ்வளவோ முன்ஜாக்கிரத்தையாக இருந்த பிரம்மஞான சபை ஸ்தாபகர்களுக்கே அபவாதம் நேர்ந்தது. உண்மையில் பிரம்மஞான சபை இன்று நூறாண்டு முடித்த அமைப்பாக விளங்கினாலும் அதன் பங்குக்குப் பல  துர்ச்சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பெரிய விஷயங்களுக்குப் போகாமல் ஒரு சிறிய நிகழ்ச்சி. பிரம்மஞான சபையின் மிக முக்கிய பதவி ‘ரிக்கார்டிங் செகரட்டரி’ என்பது. ஸ்தாபகர் மேடம் பிளவாட்ஸ்கியே ரிக்கார்டிங் செகரட்டரியாகத்தான் முடிவுவரை இருந்தார். இவர்கள் பம்பரமாக இயங்குவார்கள். எல்லாம் அறிந்தவர்களாக இருப்பார்கள். நான் 1970களில் திரும்பத் திரும்ப அந்த நூலகத்துக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அப்போது அங்கிருந்த ரிக்கார்டிங் செகரட்டரி ஜீன் ரேமண்டு. எப்போதும் சிரித்த முகமாக, அறிவின் உறைவிடமாக இருப்பார். அன்பு தவிர வேறேதும் அறிய மாட்டார் என்று யாரும் எண்ணக்கூடியவர். அந்த சபை போன்ற மிகவும் கட்டுப்பாடும் பாதுகாப்பும் உடைய இடத்தில் அவரை ஒரு நாய் கடித்து விட்டது. அந்த அம்மாள் இறந்தேவிட்டார்.

சென்னை தி.நகர் நடேசன் பூங்காவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறேன். சென்னை பற்றி நிறையக் கதைகள் எழுதியிருக்கிறேன்.இந்தத் தொகுப்பு அந்த வகையாகாது என்றாலும் எனக்குச் சிறுகதைகள் எழுதும் அனுபவமே கிடைத்தது. இதிலுள்ள தகவல்கள் எல்லாமே உண்மை என்றுதான் கூற வேண்டும். சென்னை நகரத்தில் அறுபது ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன்.ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் வசித்து விடுவதாலேயே அந்த இடம் பற்றிய பல தகவல்கள் தெரிந்துவிடும்.எனக்குத் தெரிந்தவற்றில் ஒரு பகுதியே இந்த நூல் ஆகும்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.