டெல்லி: இன்று இரவு முதல் ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ள நிலையில் புதிய வகை ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இவை நவீன தொழில்நுட்பத்துடன் தயாரானவை. இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியிலிருந்தபடி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வழியாக திடீரென உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது ஷாக் கொடுக்கும் விதமாக, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற புதிய அறிப்பை வெளியிட்டார்.
ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு அழிக்க உள்ளதாகவும், எனவே இன்று அதாவது நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன், அந்த நோட்டுக்கள் செல்லாது எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், அரசு ஆஸ்பத்திரிகள், ஏர்போர்ட், ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை நோட்டுக்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், சில காரணங்களால் அதற்குள் மாற்றிக்கொள்ள இயலாதவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதிக்குள் நோட்டுக்களை மாற்ற அவகாசம் தரப்படும். தக்க அடையாள அட்டைகளை காண்பித்து பணத்தை மாற்றிக்கொள்ளலாம்.
இப்படி மாற்றும்போது, அதற்கு பதிலாக புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 முக மதிப்பிலான நோட்டுக்களை அரசு சப்ளை செய்ய உள்ளது. இது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே கள்ள நோட்டு புழக்கத்தையும், பண பதுக்கலையும் தடுக்க முடியும் என கூறப்படுகிறது. ரூ.2000 நோட்டுக்களில் அதிநவீன லேயர்கள் இருப்பதால் செயற்கைக்கோள் மூலமாக கூட அவற்றை கண்காணித்து பதுக்கலை தடுக்க முடியும் என்று ஒரு தகவல் உலவி வரும் நிலையில் பிரதமர் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே இனிமேல் 1000 ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் புழக்கத்தில் இருக்காது என்பது முதல்கட்டமாக புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/india/new-rs-2000-note-that-will-be-issued-266698.html
0 comments:
Post a Comment
Kindly post a comment.