Monday, November 14, 2016

11 வயதிலேயே கற்றுக்கொண்ட பாடம்தான் இன்றும் கைகொடுக்கிறது” -பாக்கியலட்சுமி
திருச்சூரைச் சேர்ந்த பெண் ஒருவரை, ஆளும் கட்சியின் கவுன்சிலர் உட்பட நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கேரளாவே அதிர்ந்துபோயிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இது கடனால் எழுந்த பிரச்சினை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஊடகத்தைத் திரட்டி நீதி கேட்டவர், கேரளா முழுவதும் அறியப்பட்ட பிரபல டப்பிங் கலைஞர் பாக்கியலெட்சுமி.

இவர் சுமலதா, நதியா மொய்து, கார்த்திகா, பார்வதி, ஊர்வசி, மீனா, ரேவதி, ஷோபனா, அமலா, ஸ்வேதா மேனன் உள்ளிட்ட 148 நடிகைகளுக்கு, நான்காயிரம் திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். 12 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சுயசரிதையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

பாக்கியலெட்சுமியின் போராட்டத்துக்குப் பிறகு, சொந்தக் கட்சியினர் என்பதையும் மீறி, நடவடிக்கை எடுத்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை ஊடகத்தார் முன்னிலையில் பகிரங்கமாக, விதிகளுக்கு மாறாக அறிவித்த முன்னாள் சபாநாயகர் ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டுள்ளது. சர்ச்சையில் சிக்கிய நபரைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. புகார் கொடுக்க வந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணை, உதாசீனப்படுத்திக் கேள்வி கேட்ட ஆய்வாளர் மணிகண்டன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள ஊடகங்கள் திருச்சூர் பெண் விவகாரம் தொடர்பாக விரிவான பேட்டிக்கு பாக்கியலெட்சுமியைத் துரத்திக்கொண்டிருக்க, ‘பெண் இன்று’ வாசகிகளுக்காக மனம்திறந்து பேசினார்.

“எங்கள் பூர்வீகம் பாலக்காடு. மூன்று வயதிலேயே அப்பாவை இழந்தேன். மூன்று குழந்தைகளை வளர்க்க முடியாமல், என் அம்மா எங்களை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் விட்டுவிட்டார். பெரியம்மா எங்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்படித்தான் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.

நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது, அம்மாவுக்குப் புற்றுநோய் வந்துவிட்டது. என் பள்ளிப் படிப்பு ஒரு வருடம் தடைபட்டது. அம்மாவையும் இழந்தபோது, வாழ்க்கையே இருண்ட மாதிரி இருந்தது. அம்மா, அப்பா இல்லாமல் உறவுக்காரர் வீட்டில் வளர்வது என் அண்ணனுக்குப் பிடிக்கவில்லை. வீட்டை விட்டு ஓடிவிட்டான். இன்றுவரை அவனைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாது. பெரியம்மா என்னை மீண்டும் பள்ளியில் சேர்த்துவிட்டார். பெரியம்மாவுக்குத் தமிழ்த் திரைப்படத் துறையோடு தொடர்பு இருந்தது. சாரதா உள்ளிட்ட நடிகைகளுக்கு மலையாள வகுப்பும் எடுத்துவந்தார்.

துணிந்து நின்றால் நீதி கிடைக்கும்

அப்போது நாங்கள் வடபழனியில் குடியிருந்தோம். தண்ணீர் லாரி வருகைக்காகக் குடத்தை வைத்திருந்தேன். முதலில் என் குடம்தான் இருந்தது. அந்தப் பேட்டை ரவுடியின் மகள் என் குடத்தைத் தூக்கியெறிந்து விட்டு, அவள் குடத்தை வைத்தாள். எனக்கு அவள் யார் மகள் என்றெல்லாம் தெரியாது. கையில் இருந்த குடத்தால் அவள் தலையில் இடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்று விட்டேன். சிறிது நேரத்தில் வீட்டுக்கு முன்பு பெருங்கூட்டம். நான் ரவுடியிடம் போய் நடந்ததைச் சொன்னேன். அவர், தனது மகளை மன்னிப்பு கேட்கச் செய்து, அழைத்துச் சென்றார். அநீதிக்கு எதிராகத் துணிந்து நின்றால் நீதி கிடைக்கும் என்று 11 வயதிலேயே கற்றுக்கொண்ட பாடம்தான் இன்றும் கைகொடுக்கிறது” என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் பாக்கியலெட்சுமி.

பிறகு இவருடைய பெரியம்மாவும் புற்றுநோயால் இறந்து போனார். அப்போது பாக்கியலெட்சுமி பின்னணிக் குரல் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.

“ஃபாசில் இயக்கத்தில் வெளியான நதியா மொய்துவின் முதல் படம் எனக்குத் திரைப்படத் துறையில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. மலையாள இயக்குநர்கள் மூலமாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்குப் பிறகு கேரளா வந்தபோதுதான், டப்பிங் ஆட்டிஸ்ட்களின் நிலை மிக மோசமாக இருந்ததை அறிந்தேன். உடனே கேரள இயக்குநர்களிடம் பேசி, 1991-ல் மலையாள டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷனை ஏற்படுத்தினேன். மாநில அரசு அந்த ஆண்டு முதல் சிறந்த பின்னணிக் குரலுக்கும் விருது வழங்கிவருகிறது. நானும் இதுவரை நான்கு முறை விருதுகளைப் பெற்றிருக்கிறேன்” என்கிறார் பாக்கியலெட்சுமி.பிரிவைத் தந்த சந்தேகம்

திருமண வாழ்க்கை இவரை வலியோடு எதிர்கொண்டது. கணவரின் சந்தேகத் தீயால் ஒவ்வொரு நாளும் வதைபட்டார். ஒருகட்டத் தில் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, கணவரை விவாகரத்து செய்தார். தன் வாழ்க்கையில் நடந்த சோகத்துக்காகப் பொதுவாழ்வில் ஈடுபடுவதை பாக்கியலெட்சுமி நிறுத்திவிடவில்லை. தற்போது கைரளி தொலைக்காட்சியில் செல்பி என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.

“இந்த நிகழ்ச்சி மூலமாகவும், பொதுத்தளத்திலும் பல பெண்களுக்கு கவுன்சலிங் அளித்துவருகிறேன். கணவருடன் வாழாதவர் கவுன்சிலிங் கொடுப்பதா என்று கேட்பவர்களுக்கு, என் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே அந்த முடிவை எடுத்தேன் என்று தைரியமாகப் பதில் அளிப்பேன்” என்கிறார் பாக்கியலெட்சுமி

நிமிர்ந்து நிற்பதே பெருமிதம்

அம்மா, அப்பா, அண்ணன், கணவர் என்று பல பிரிவுகளைச் சந்தித்தாலும் தன் மனத் திடத்தை இவர் இழக்கவில்லை. “சுவர் இருந்தால்தானே சாய முடியும்? சுவர் இல்லையெனில் நிமிர்ந்தே இருந்து முதுகெலும்பு பலம்பெறும். நான் அந்த ரகம்! என் சுயசரிசதையை ‘ஸ்வர பேதங்கள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன். மூன்றே ஆண்டுகளில் 15 பதிப்புகள் வந்துவிட்டன. மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தில் என் சுயசரிதை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது” என்று சொல்கிறவரின் வார்த்தைகளிலும் அத்தனை உறுதி!

பாலியல் வன்கொடுமை குறித்து ஊடகத்தாரிடம் பேசியதற்குப் பதில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே பேசி முடித்திருக்கலாமே என்று இவரிடம் பலரும் கேட்கிறார்களாம்.

“சமரசம் செய்வதற்கு, அது என்ன கணவன், மனைவிக்குள் நடந்த சண்டையா? தமிழ்நாடுதான் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஊக்கத்தை, வலிமையை எனக்குக் கற்றுக் கொடுத்தது. ஆனால் அங்கு குரல் கொடுக்க சுதந்திரம் இல்லை. கேரளாவில் அந்த நிலை இல்லை. அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராடினாலும் சிறு மிரட்டல்கூட வராது. சொந்தக் கட்சியினராக இருந்தாலும் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதுதான் கேரளாவைப் பெருமையோடு நினைக்கவைக்கிறது” என்று சொல்லும் பாக்கியலெட்சுமி, பின்னணிக் குரல் கொடுப்பதைக் குறைத்துவிட்டு, பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கும் அமைப்பை ஏற்படுத்த இருப்பதாகச் சொல்கிறார்.

“கணவரை இழந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண், இரு மகள்களுடன் வசித்துவருகிறார். அந்தப் பகுதி இளைஞர்கள் அடிக்கடி தகராறு செய்வதாகவும், சொந்தமாகத் தொழில் செய்ய உதவ வேண்டும் என்றும் கேட்டார். நண்பர் மூலம் ஐந்து தையல் மிஷின்கள் வாங்கிக் கொடுத்தோம். கடைக்கு ‘பாக்கியலெட்சுமி’ என்று என் பெயரை வைத்து, திறப்பு விழாவுக்கு அழைத்தார். நான் பெயர் வேண்டாம் என்று மறுத்தேன். உங்கள் பெயரை வைத்ததால்தான் அந்த இளைஞர்களின் தொல்லை குறைந்துள்ளது என்றார். என் வாழ்க்கையில் ஆயிரம் படங்களுக்கு மேல் குரல் கொடுத்திருந்தாலும், இவரைப் போன்ற குரலற்றவர்களுக்காகக் கொடுக்கும் குரலே உண்மையில் நிறைவைத் தருகிறது” என்கிறார் இந்தத் தைரியலட்சுமி!


பத்திரிகையாளர் சந்திப்பில்...என்.சுவாமிநாதன்  

மூகம் » பெண் இன்று Published: November 13, 2016 14:44 IST

நன்றி :- இந்து தமிழ் நாளிதழ்0 comments:

Post a Comment

Kindly post a comment.