Sunday, October 16, 2016

ஆளில்லா நூலகம் :கே.ஆர்.மகேந்திர குமார், அம்பத்தூர் திருமுல்லைவாயில்




கே.ஆர்.மகேந்திர குமார், அம்பத்தூர் திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர். டெலி கம்யூனிகேஷன்ஸ் துறையில் அஸிஸ்டென்ட் ஒயர்லெஸ் அட்வைஸராக இருந்த இவருக்கு ஓயாமல் ஒரு சிந்தனை இருந்தது. "வெளிநாடுகளில் கடைகளில் ஆளில்லாமல் வியாபாரம் நடக்கிறது. மக்கள் வந்து தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு அதற்குரிய பணத்தை வைத்துவிட்டுப் போகிறார்கள். இங்கே நாமும் ஏன்  ஏதாவது செய்யக்கூடாது என்ற சிந்தனை.

 "நம் வீட்டின் முன்பாக தெருவில் பூட்டாத ஒரு பீரோவில் புத்தகங்களை அடுக்கி வைப்போம். படிக்க விரும்புகிறவர்கள்  வந்து பீரோவைத் திறந்து தேவைப்படுகிற புத்தகங்களை எடுத்துக் கொண்டு போகலாம். எப்போது முடிகிறதோ அப்போது அந்தப் புத்தகங்களைக் கொண்டு வந்து திரும்பவும் பீரோவில் வைத்து விடலாம்.

 பதிவேடு, உறுப்பினர் அட்டை  இல்லை. மகேந்திர குமார் தனது சிந்தனையைச் செயலாக்க  விரும்பினார். மேலும் தொடர்கிறார்:

 ""ரீட் அண்ட் ரிட்டர்ன் லைப்ரரி' என்று சும்மா கையால் எழுதி அந்தப் பீரோவின் அருகே ஒட்டி வைத்தேன். முதலில் யாரும் வரவில்லை. காரணம் என் வீடு இருப்பது முட்டுச் சந்தில். சில நாட்கள் கழித்து ஒருவர் வந்தார். விவரம் சொன்னேன். பாராட்டிவிட்டு புத்தகம் எடுத்துச் சென்றார். பின்னர், கொண்டு வந்து வைத்தார். அவர் இன்னொருவருக்குச் சொல்ல இப்படி வாய்வழி விளம்பரம்தான்.

புத்தகங்களை எப்படிச் சேகரிக்கிறீர்கள்?
 எழுத்தாளர்களை நானே சென்று சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். லைப்ரரி பற்றி சொல்கிறேன். தாங்கள் எழுதிய அல்லது தங்களிடம் இருக்கிற புத்தகங்களைத் தருகிறார்கள்.

 ஜோதிர்லதா கிரிஜா, இந்துமதி, லேனா தமிழ்வாணன், பட்டுக்கோட்டை பிரபாகர், சு.சமுத்திரம் குடும்பத்தினர் போன்று பலரும் புத்தகங்கள் தந்திருக்கிறார்கள். தந்து வருகிறார்கள்.

 நாற்பது புத்தகங்களோடு தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் இன்று இரண்டாயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. ஒரு பீரோவுக்குத் துணையாக மேலும் இரண்டு பீரோக்கள் இப்போது சேர்ந்திருக்கின்றன.

பதிவேடு போன்ற எதுவும் இல்லை. கண்காணிக்க ஆளும் கிடையாது. புத்தகம் கொண்டு போகிறவர்கள் திரும்பக் கொண்டு வரவில்லை என்றால்?

 ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் யார் எந்த நூலை எடுத்துக் கொண்டு போகிறார்கள் என்ற விவரம் ஏதும் எனக்குத் தெரியாது. ஆனால் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன என்ற பட்டியல் இருக்கிறது. என்றைக்காவது ஒரு நாள் பீரோவைத் திறந்து பார்ப்பேன். பட்டியலை வைத்துப் பார்க்கும்போது ஒரு சில புத்தகங்கள் பீரோவில் இருக்காது. எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்புறம் மீண்டும் என்றைக்காவது திறந்து பார்த்தால் அன்று இல்லாத புத்தகங்கள் கண்ணில் படும். திரும்பக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

   தினமணிக் கதிர்

1 comments:

  1. similar to
    https://littlefreelibrary.org/history/
    https://en.wikipedia.org/wiki/Little_Free_Library

    Wishes

    ReplyDelete

Kindly post a comment.