Monday, September 12, 2016

"குதிரைக் கொம்பு' என்னும் தலைப்பில் இராமாயணக் கதை ? -மகாகவி பாரதியார்





பாரதியார் தனது கதையெழுதும் நோக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ""நான் கதைகளை எழுதும்போது வெறும் கற்பனை நயத்தைக் கருதி எழுதுவது வழக்கமன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கம் இல்லை'' என்று குறிப்பிடுவது இங்கு உற்று நோக்கத்தக்கது.

பாரதியார், இராமாயணக் கதையை ஒரு விநோத முயற்சியில் படைத்துக் காட்டியிருப்பது இந்தப் புதுமைகளின் வரிசையில் சேர்க்கப்பட வேண்டியதாகும். "குதிரைக் கொம்பு' என்னும் தலைப்பில் இராமாயணக் கதையைத் தலைகீழாக மாற்றி இவர் தந்துள்ள நகைச்சுவை ததும்பும் வருணனை வடிவக் கதை ஒருபக்கம் நம்மையெல்லாம் சிரிக்க வைக்கிறது என்றால், மறுபக்கம் தேசம் இன்றுள்ள நிலையோடு ஒப்புமைப்படுத்திச் சிந்திக்கவும் வைக்கிறது.

இராவணனுடைய வம்சம் எனச் சொல்லிக் கொள்ளும் ரீவண நாய்க்கன் என்னும் மகாராஜனுக்கு எழும் சந்தேகத்திலிருந்து இக்கதை தொடங்குகிறது. அவனுடைய கேள்வி, ""குதிரைக்கு ஏன் கொம்பில்லை?'' என்பதே. இதற்கு வக்ரமுக சாஸ்திரி என்பவர் சொல்லும் பதிலை ஒரு கதையாக(புதிய இராமாயணக் கதையாக) அவர் வடித்துத் தருகிறார். (கதையை விவரித்தால் விரியும் என்பதால், முழு கதையையும் தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளவும்). அக்கதையின் தொடக்கத்தையும் முடிவையும் மட்டும் பாரதியின் நடையிலேயே இங்குக் காண்போம்:

தொடக்கத்தில், ""ராவண ராஜ்ஜியத்தில் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்துநான்கு கலைஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், ஆயிரத்துத் தொள்ளாயிரம் கிளைப் புராணங்கள் என எல்லாவற்றிலும் ஓரெழுத்துக் கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம் வரை பார்க்காமல் சொல்லக்கூடிய திறமையுடையவர்கள் இருந்தார்கள். அப்போது அயோத்தி மன்னன் தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவனாகிய பரதனுக்குக்குப் பட்டங் கட்டுவதை விரும்பாமல் தனக்கே பட்டம் கட்டிக்கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்குக் கோபமுண்டாகி அவர்களைத் துரத்த, மிதிலை நகரத்திலே போய் அவர்கள் சரணமடைந்தார்கள். இந்நிலையில், ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகில் மோகித்துத் திருட்டாகக் கவர்ந்து தண்டகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷ்மணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்து யாகங்களைக் கெடுத்தனர்'' என்கிறார் பாரதி.

முடிவில், ""ஜனகன் கிருபை மிகுந்து சீதையை ராமனுக்கே விவாகம் செய்து தந்தான். அப்பால் ராம லக்ஷ்மணர் அயோத்திக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள். இதுதான் நிஜமான இராமாயணக் கதை'' என்று சுழித்து விடுகிற பாரதியாருக்குக் கதையை முடித்துவிட விருப்பம் இல்லை. மேலும் தொடர்கிறார். ""ரீவணன் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லையே சாஸ்திரியாரே! குதிரைக்கு ஏன் கொம்பில்லை?'' என்று கேட்டு, ""இன்னும் அதற்கு மறுமொழி வரவில்லையே'' என்று நீட்டுகிறார்.

இராமாயணத்தை முழுவதும் சாஸ்திரியார் கூற்றில் கூறிவிட்டு, பாரதியார் குதிரைக் கொம்பை ஓர் அடையாளமாகக் காட்டிக் கதையை முடிக்கிறார். கதையின் முதலையும் முடிவையும் வேறு மாதிரியாகக் காட்டி நம்மை (ஏ)மாற்றி இராமாயணத்தைச் சொல்லி குதூகலிக்க வைக்கிறார்.

கேள்விக்கு விடைதான் என்ன? என்று கேட்பவர்களுக்குப் பாரதியார், சாஸ்திரியார் மூலம் சொல்கிற பதில்: ""இராவணன் கூச்சலிட்டபோது, சூரியமண்டலம் விழுந்தபோது சூரியனின் ஏழு குதிரைகளும் விழுந்து கொம்புகளை முறித்துக் கொண்டன. இராவணனிடம் அழுது முறையிட்ட சூரியனைத் தேற்றி இராவணன் பிரமதேவனிடம் "இனிமேல் குதிரைகளுக்குக் கொம்பில்லாதபடி படைக்க வேண்டும்' என்று சொன்னான். அன்றிலிருந்து பிரமனும் அவ்வாறே குதிரைகளுக்குக் கொம்பில்லாதபடி படைக்க ஆரம்பித்தான்'' என்று பதில் கூறி, முடிவுரை எழுதுகிறார்.

பாரதியார் சொன்ன இந்த இராமாயணக் கதையின் உள்ளர்த்தம் உணர்ந்தவர்களுக்கே புரியும்!

- நன்றி:- சொ.அருணன், தமிழ்மணி, தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.