Wednesday, September 14, 2016

285 மொழிகளில் ஒரு அறிவுக்களஞ்சியம் :அள்ள அள்ளக் குறையாத ஓர் அட்சய பாத்திரம்.!




கலைக்களஞ்சியங்கள் அறிவைத் தேடுபவர்களுக்குப் புதையல்கள் போல. இணையம் என்ற புதிய தொழில்நுட்பம் உருவான பிறகு, புத்தக வடிவத்திலிருந்து விடுதலையாகி இணைய வடிவத்திலும் மலர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது கலைக்களஞ்சியம். அதுதான் விக்கிப்பீடியா செயல்படுவதற்கான ஆதாரமான மென்பொருளை 1994-ல் அமெரிக்காவைச் சேர்ந்த கன்னிங்காம் எனும் கணினி அறிஞர் கண்டுபிடித்தார். விக்கி என்ற பெயரை அவர்தான் வைத்தார். ஹவாய் மொழிச் சொல் இது. விரைவு என்று பொருள்.

இணையத்தில் மிகப் பெரிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க நினைத்தார்கள் ஜிம்மி வேல்ஸ், லாரி சாங்கர் எனும் இரு அமெரிக்கர்கள். அவர்கள் 2001-ல் விக்கி மென்பொருளின் பெயரையும் கலைக்களஞ்சியத்துக்கான ஆங்கிலச் சொல்லான என்சைக்ளோபீடியாவிலிருந்து பீடியாவைத் தனியாக எடுத்தும் ‘விக்கிப்பீடியா’வை உருவாக்கினார்கள்.

இதில் நீங்கள் கட்டுரைகள் கூட எழுதலாம். ஆனால், அவற்றுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கட்டுரைகளின் நம்பகத்தன்மை பற்றி கேள்விகள் எழுப்பவும் அதில் இடம் உண்டு. இவற்றை ஒழுங்குபடுத்த ஆசிரியர் குழுக் கொள்கையும் உண்டு. விக்கிப்பீடியா கட்டுரையின் அடியில் தரப்பட்டுள்ள ஆதார ஆவணங்களின் அடிப்படையில் நாம் அதனைப் பயன்படுத்தலாம். மேலும், ஆதாரங்களை நாமும் சமர்ப்பித்து, அந்தக் கட்டுரையை மேலும் தரமுள்ளதாக்கலாம்.

உலகம் முழுவதும் ஏராளமானோர் இதை உருவாக்க உழைத்துவருவதால் மனிதர்கள் உருவாக்கிய கலைக் களஞ்சியங்களில் இது மிகவும் பெரியதாக வளர்ந்துள்ளது.

தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் 60,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. 285 மொழிகளில் விக்கிப்பீடியா செயல்படுகிறது. எல்லா மொழிகளிலும் சேர்ந்து சுமார் 2.4 கோடிக் கட்டுரைகள் உள்ளன. விக்கிப்பீடியா வுக்குள் தினமும் புதிய தகவல்களைச் சேர்த்துக் கொண்டேயிருக்கும் பணியில் சுமார் ஒரு லட்சம் பேர் செயல்படுகின்றனர்.

தண்ணீர் நீக்கிப் பாலை மட்டும் அருந்தும் அன்னப்பறவை போல கவனத்துடன் பயன்படுத்தினால், விக்கிப்பீடியா அள்ள அள்ளக் குறையாத ஓர் அட்சய பாத்திரம்.

- த.நீதிராஜன்

நன்றி :- இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.