Wednesday, August 31, 2016

தினமணியில் வெள்ளிதோறும் தொல்லியல்மணி ! யுத்தபூமி & புதையுண்ட தமிழகம் - ச.செல்வராஜ் & த. பார்த்திபன்.






தமிழக வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமானால், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த பகுதிகளை அகழாய்வு செய்து, அவற்றின் மூலம் கிடைக்கும் தொல்பொருள் சான்றுகளை அடிப்படையாக வைத்துச் சொன்னால்தான் முடியும். அந்த அறிவே தமிழக வரலாற்றுக்குச் சிறப்பு சேர்க்க முடியும்.

அந்த வகையில், தொல்லியல் ஆர்வலர் திரு. த. பார்த்திபன், தொல்லியல் துறை நிபுணர் ச. செல்வராஜ் ஆகியோர், தொல்பொருள் மற்றும் அகழாய்வுச் சான்றுகளுடன் எழுதும், தொல்லியல் சார்ந்த இரண்டு தொடர்களை, தினமணி இணையத்தள வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

'யுத்தபூமி', 'புதையுண்ட தமிழகம்' என்ற இரண்டு தொடர்கள், பண்டைய தமிழகத்தின் நிலவியல் அமைப்பு, அவ்வப்போது வாழ்ந்த மக்கள், அவர்களது நாகரிகம் போன்ற பல விஷயங்களை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, அதன் பதிவுகளை உங்கள் மனத்தில் பதிந்து செல்லப்போவது உறுதி.





ச.செல்வராஜ், தொல்லியல் துறையில், மண்டல உதவி இயக்குநராக (ப.நி.) பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.தோப்பூர் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1953-ல் பிறந்த இவர், இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘பண்டைய வரலாறும் தொல்லியலும்’ என்ற பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1979 முதல், தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் மாவட்டத் தொல்லியல் அலுவலராகப் பணியில் சேர்ந்து, 2011-ல் பணிஓய்வு பெற்றார். 32 ஆண்டுகள் தொல்லியல், கல்வெட்டு, அகழாய்வு, கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றில் திறம்படப் பணியாற்றியவர். 

இவரது குறிப்பிடத்தக்க சிறப்புப் பணி, அகழாய்வுதான். இவர் காஞ்சிபுரம், கரூர், கங்கை கொண்டசோழபுரம், பூம்புகார், படைவீடு, கண்ணனூர் (சமயபுரம்), அழகன்குளம், செம்பியன்கண்டியூர், தலைச்செங்காடு, மாங்குளம், மாங்குடி, பரிக்குளம், மோதூர் போன்ற பல நில அகழாய்வுகளில் பணியாற்றியுள்ளார். ஆழ்கடல் அகழாய்வில் அகழாய்வாளராகவும், மூழ்குநராகவும் பணிபுரிந்து, பல அரிய சங்ககால வாழ்விடப் பகுதிகளை வெளிக் கொணர்ந்துள்ளார். வானகிரிப் பகுதியில் மூழ்கிய கப்பல் ஒன்றை, மூழ்கிக் கண்டுபிடித்து, அவற்றில் இருந்த தொல்பொருட்களைச் சேகரித்துள்ளார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். தருமபுரி அகழ்வைப்பகம், தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு, மராட்டியர் அகழ்வைப்பகம் போன்ற மாவட்ட வரலாற்று நூல்களும், கோயில்களைப் பற்றிய ‘தகடூர் நாட்டுக் கோயில்கள் தொகுதி – 1’, ‘தகடூர் நாட்டில் சமணமும் பௌத்தமும்’ என்ற நூல்களும், ‘மனோரா கையேடு’ என்ற நூலையும் எழுதியுள்ளார். வரலாறு, தொல்லியல் இவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 

தொடர்புக்கு

 selvaraj.sabapathi@gmail.com

புதையுண்ட தமிழகம்

தமிழக வரலாற்றை, வரலாற்றுக்கு முந்தைய காலம்; வரலாற்றுக் காலம் என்று இருபெரும் பிரிவுகளாகப் பிரிப்பர்.

கால அடிப்படையில் பகுத்துக்கொண்டு வரலாற்றைப் பார்க்க வேண்டும். அந்த வகையில், எழுத்துச் சான்றுகள் தோன்றவதற்கு முன் உள்ள காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம் அல்லது தொல்பழங்காலம் (Pre Historic Period) என்றும், எழுத்துகள் தோன்றி அதனை அடிப்படைச் சான்றாகக் கொண்டு அமைந்த காலத்தை வரலாற்றுக் காலம் (Historic Period) என்றும் பகுத்தனர்.

உலகில், முதன்முதலில் தோன்றிய மனிதனது உடனடித் தேவைக்கு எளிதில் கிடைத்த வலிமையான பொருள், இயற்கையாகக் காணப்பட்ட கற்களே. எனவே, கற்களைப் பயன்படுத்தி கற்கருவிகளையும், கற்களையே அடிப்படையாக கொண்டு அனைத்து தேவைகளையும் அமைத்துக்கொண்டு வாழ்ந்துள்ளான். அத்தகைய காலத்தைத்தான் கற்காலம் என்று ஆய்வாளர்கள் வரையறை செய்தனர். இத்தகைய கற்களைப் பயன்படுத்தி மனிதன் எத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்தான் என்பதற்கு சான்றுகள் இல்லை. இருப்பினும், ஆய்வாளர்களுக்குக் களஆய்வில் கிடைத்த கற்கருவிகளையும், கல்லால் ஆன பிற தொல்பழங்காலக் கற்கருவிகளையும், அவ்வப்போது கிடைக்கக்கூடிய சான்றுகளையும் இணைத்து, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை, அதாவது தொல்பழங்காலத்தை வரையறுத்து நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்தனர். அவை – பழைய கற்காலம் (Paleolithic Age), நுண் கற்காலம் (Microlithic Age), புதிய கற்காலம் (Neolithic Age), பெருங் கற்காலம் (Megalithic Age).

களஆய்வு ஒன்றை வைத்துக்கொண்டு முன்னோர்களின் வாழ்க்கை முறைகளையும், தொழில் அமைப்புகளையும், சமூகநிலையையும் தெளிவாகக் கூற இயலாது. எனவே, தமிழகத்தில் மேற்கொண்ட அகழாய்வுகளின் அடிப்படையில், நமது வரலாற்றையும் தொல்பழங்கால வரலாற்றையும் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களின் அடிப்படையில் களஆய்வுப் பொருட்களையும் தொகுத்து இணைத்துப் பார்த்தால், ஓரளவு நமது வரலாற்று உண்மைகள் வெளிப்படும். அந்தக் கருத்தில் எழுதப்படுவதுதான் ‘புதையுண்ட தமிழகம்’.

இத்தொடர், பழைய கற்காலம் முதல் வரலாற்றுக் காலம் வரை கூறப்பட்ட வரலாற்று உண்மைகளை, ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வுச் சான்றுகளுடன் இணைத்து, நம்முடைய வரலாற்றுப் பார்வையை சற்று விரிவாக்கி, ஒரு முழமையான வரலாற்றை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படுகிறது. 

காலவரிசைப்படி, ‘கொற்றலையாற்றுப் படுகையில் தமிழர் ஆய்வு’ என்ற பழைய கற்காலத்தைப் பற்றிய முதல் கட்டுரையைத் தொடர்ந்து, நுண் கற்காலம், புதிய கற்காலம் மற்றும் பெருங் கற்காலம் என தொடர்ந்து, வரலாற்றுக் காலத்தில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலம் வரை, ஒரு நீண்ட வரலாற்றுத் தொடராக, இந்தப் ‘புதையுண்ட தமிழகம்’ வரவுள்ளது. 

நமது தாய்த் திருநாட்டின் வரலாற்றை கற்பனை கலக்காமல், நமது பண்டைய மக்கள் பயன்படுத்தி, பின்னால் காலவெள்ளத்தில் மண்ணோடு மண்ணாகி மறைந்திட்ட எச்சங்களை, அகழாய்வுகள் வாயிலாகக் வெளிக்கொணர்ந்து இணைத்து, ஆங்காங்கே உரிய புகைப்படச் சான்றுகளோடு சேர்த்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏதேனும் புதிய தகவல் இருந்தால் பகிர்ந்துகொள்ளவும், சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும் ச.செல்வராஜ் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளுங்கள்.
தொடர்புக்கு

 selvaraj.sabapathi@gmail.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.