Friday, November 20, 2015

சமையல் கியாஸ் வழிகாட்டுகிறது


பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தேவையற்ற மானியங்களைக் குறைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னமும் விறகை வைத்து அடுப்பெரிக்கும் ஏழை எளியவர்களுக்கு கியாஸ் சிலிண்டர் வழங்கும் கருணைத்திட்டத்துக்கு உதவ, எனக்கு மானியம் வேண்டாம் என்று சொல்பவர்கள், தங்கள் பெயரை பதிவுசெய்யலாம் என்ற பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழ்நாட்டில் மட்டும் 3 லட்சத்து 16 ஆயிரத்து 307 பேர்கள் மானியம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இதுபோல, மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் போலி பெயர்களில் பதிவுசெய்தவர்கள், ஒரே பெயரில் பல இணைப்புகளை பெற்றவர்கள் பட்டியலைக் கண்டுபிடித்து, அந்த இணைப்புகளையெல்லாம் ரத்து செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இதுபோல, வங்கிகள் மூலம் நேரடி மானியத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், சமையல் கியாசுக்கான மொத்த விலையையும் டெலிவரியின்போது கொடுத்துவிடவேண்டும், அந்த சிலிண்டருக்கான மானியத்தொகை மட்டும் உடனடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அதாவது, சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.560. வீட்டில் வந்து சிலிண்டர் சப்ளை செய்யும்போது இந்த தொகை முழுவதையும் கொடுத்துவிட வேண்டும். உடனடியாக இந்த சிலிண்டருக்கான மானியத்தொகையான ரூ.154 வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்தமுறை அமலுக்கு வந்தவுடன், மொத்தம் உள்ள 18 கோடியே 19 லட்சம் இணைப்புகளில், 30 லட்சத்து 93 ஆயிரம் இணைப்புகள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. இதனால் அரசாங்கத்துக்கு 2 ஆயிரத்து 28 கோடியே 54 லட்ச ரூபாய் மிச்சமாகியது.

இனி அடுத்து ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்குமேல் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை ரத்து செய்யவும் மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நிச்சயமாக இது வரவேற்புக்குரியது என்றாலும், இதுபோல மானிய ரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடம் இருந்து தொடங்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். சலுகைகள், மானியங்கள், இலவசங்கள் என்பது சாமானியர்களுக்கு, ஏழைகளுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டுமே தவிர, ஓட்டுக்காக எல்லோருக்கும் வழங்குவதை மத்திய–மாநில அரசுகள் உடனடியாக நிறுத்தவேண்டும். அந்த தொகையை வளர்ச்சி திட்டங்களுக்கு செலவழிக்கலாம். இதுபோல, சிலிண்டருக்கான தொகையை அதை வீடுகளுக்கு கொண்டுவருபவரிடம் கொடுப்பதற்கு பதிலாக, ஆன்லைன் மூலமே பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வரப்போகிறது. இப்போது ஏராளமானவர்கள் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவதால் இந்தமுறை அவர்களுக்கு மிகவசதியாக இருக்கும். இதன்மூலம் வேலைக்கு செல்பவர்கள் வீட்டில் வேலைக்காரர்கள் அல்லது வாட்ச்மேன்களிடம் சிலிண்டரை டெலிவரி செய்யச்சொல்லிவிடலாம். இதுபோல, மற்றொரு முறையும் அமலுக்கு வரப்போகிறது. கியாஸ் சிலிண்டர் விற்பனையாளரிடம் வாடிக்கையாளர்கள் ஒரு ‘ஸ்மார்ட் கார்டை’ விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். சிலிண்டர் காலியானவுடன், புதிய சிலிண்டருக்காக டெலிபோன் மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமோ பதிவு செய்துகொள்ளமுடியும். கடைகள், ஓட்டல்களில் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும்போது பயன்படுத்தப்படும் சாதனம்போல, ஒரு சாதனத்தை சிலிண்டர் டெலிவரி செய்ய வருபவர் கொண்டுவருவார். அவரிடம் இந்த ‘ஸ்மார்ட் கார்டை’ கொடுத்தவுடன் அதில் வைத்து ஒருமுறை தேய்ப்பார். பில் தொகை ‘ஸ்மார்ட் கார்டு’ தொகையிலிருந்து கழித்துவிடப்படும். இதே சாதனம் மூலம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டையும் பயன்படுத்தமுடியும். முதல் திட்டம் இந்த மாதமும், அடுத்த திட்டம் ஓரிரு மாதங்களுக்குள்ளும் நடைமுறைக்கு வந்துவிடும். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இந்த வேளையில், இதுபோன்ற முறைகளை அனைத்து சேவைகளிலும் பயன்படுத்தவேண்டும்.

நன்றி : தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.