Sunday, November 8, 2015

மனித வளத்தை மதியா திருப்பதோ.. -ஜெ.ஹஜாகனி


ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற சட்டத்தை அண்மையில் மக்கள் சீனக் குடியரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. அந்தச் சட்டம் தேசத்திற்குத் தீங்கு விளைவித்திருப்பதையும் அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது. 

1970-ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இச்சட்டத்தால் சீனாவின் மனிதவளம் சிதைந்ததோடு முதியோர்களின் தொகைகூடி, இளமைப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டின் உற்பத்தித் திறனையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

இச்சட்டம் அதே காலத்தில் நம் நாட்டிலும் நடைமுறைக்கு வந்திருக்குமானால் 1970-க்குப் பிறகு முதல் குழந்தையாகப் பிறவாத பலரும் இப்போது இருந்திருப்பார்களா என்பது கேள்விக்குறி. இவ்வாறு எழுதுவதற்கு நாமும் இருந்திருக்க மாட்டோம். (இரட்டை ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல்துறைச் சாதனையாளர்களை இத் தேசம் இழந்திருக்கும்). 

குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை நம் நாடு சீனாவைப் போலக் கடுமையாகச் செயல்படுத்தவில்லையெனினும், அத்திட்டத்தைக் கொள்கையளவில் ஏற்றே இருந்தது. குடும்பக் கட்டுப்பாட்டிற்குப் பெருமளவிலான பரப்புரைகள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. 

 குழந்தை வேண்டுமென்று
 பெண்கள் 
 அரசு சுற்றியது அக்காலம்
 குழந்தை வேண்டாமென்று
 பெண்களை
 அரசு சுற்றுவது இக்காலம்

 -என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் வரிகள் இங்கு நினைவு கூறத்தக்கவை.

முத்தான வாழ்வுக்கு மூன்று எனத் தொடங்கி, இரண்டே பெறுக இனிதே வாழ்க எனச் சுருங்கி, ஒன்று பெற்றால் ஒளிமயம், அதிகம் பெற்றால் அல்லல்மயம் என்று குறுகி, நாமே குழந்தை நமக்கேன் குழந்தை என்ற கட்டத்திற்கு வந்துள்ளது குடும்பக் கட்டுப்பாடு பரப்புரை. இதற்குக் காரணம், மக்கள்தொகைப் பெருகினால் அபாயம் என்ற கோட்பாட்டை அதீதமாய் அரசுகள் நம்பியதே.

1798-ல் தாமஸ் ராபர்ட் மால்தூஸ், மக்கள்தொகைக் கோட்பாடுகள் என்றொரு நூலை வெளியிட்டார். அவரது கோட்பாட்டை மால் தூசியன் கோட்பாடு என்று குறிப்பிடுவர். இவரது கோட்பாட்டின்படி, மக்கள்தொகைப் பெருக்கம் பெரும் தீமைகளை ஏற்படுத்தும். உணவுப் பஞ்சம், இட நெருக்கடி, சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல அபாயங்களை இதனால் உலகம் எதி

உணவு வளர்ச்சி, 2, 4, 6, 8 என்ற விகிதத்திலும் மக்கள் தொகைப் பெருக்கம் 2, 4, 16, 256 என்ற விகிதத்திலும் உள்ளதாக மால்தூஸ் எச்சரித்தார். இவரது கோட்பாடு அறிவியல் பூர்வமானதாக பெரும்பான்மையான உலகால் ஏற்கப்பட்டது. ஆனால் பின்னாளில், எதார்த்தமோ இதற்கு எதிராக இருந்தது.

 ""முப்பது கோடி முகமுடையாள் - உயிர்
 மொய்ப்புற ஒன்றுடையாள் - இவள்
 செப்புமொழி பதினெட்டுடையாள் - எனில்
 சிந்தனை ஒன்றுடையாள்''
 என்று அடிமை இந்தியாவில் கவிமுரசு கொட்டினான் மகாகவி பாரதி.

பாகிஸ்தானும், வங்கதேசமும் இணைந்திருந்த ஏக இந்தியாவின் மக்கள் தொகை அன்று முப்பதுகோடி. அந்நாளில் தேச மக்களின் வாழ்நிலை எப்படி இருந்தது? "பாரத ஜனங்களின் தற்கால நிலை' என்ற பாடலில் கஞ்சி குடிப்பதற் கில்லார் - அதன் காரணங்கள் இவையென்றும் அறிவுமில்லார் என பாரதி நெஞ்சு பொறுக்காமல் பாடுவான்.

மக்கள்தொகை முப்பது கோடியாக இருந்த காலத்தில், விளைநிலங்கள் இப்போதைய பரப்பளவை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்த காலத்தில், பஞ்சமோ பஞ்சம் என்று தினம் பரிதவித்து, உயிர் துடிதுடித்து மக்கள் வதைபட்டுள்ளதை பாரதியின் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

இப்போது இந்திய மக்கள்தொகை சுமார் 127 கோடி. 

ஒரு காலத்தில் பணக்காரர்களின் ஆடம்பர உணவாக இருந்த அரிசிச் சோறு இப்போது எல்லோர்க்கும் கிடைக்கிறது. இப்போது, ஆடு, மாடு, கோழி இவற்றை தரையில் பார்ப்பதை விடத் தட்டில் பார்க்கும் சூழல் அதிகமாகியுள்ளது. மக்கள்தொகைப் பெருக்கத்தால் பஞ்சமும், பசியும் பெருகி வாழ்க்கை நிலை தாழும் என்ற கோட்பாடு தகர்ந்து போய்விட்டது.

அதேநேரம் பஞ்சமும், பட்டினியும் முற்றிலும் அற்றுப் போய்விட்டதா? ஆயிரக் கணக்கான விவசாயிகளின் தற்கொலைக்குப் பொருள் என்ன?
இது மக்கள்தொகையால் விளைந்த சிக்கல் இல்லை, விநியோக முறையில் உள்ள குளறுபடிகளும், ஊழலையும், சுரண்டலையும் ஊக்குவித்து வளர்க்கும் அரசியல் மற்றும் சமுதாயக் கோளாறுகளும்தான் இதற்குக் காரணம்.

இந்தியா ஒரு நாடல்ல துணைக்கண்டம். சிரபுஞ்சியில் மழை பெய்யும்போது சித்தன்னவாசலில் வெயிலடிப்பது தேசத்துக்குப் பெருமைதான். அதேநேரம், தானியக் கிடங்குகளில் புழுத்துப்போன கோதுமையைக் கடலில் கொட்டும் செய்தியும், உணவுக்கு வழியின்றி மாங்கொட்டைகளைத் தின்று மக்கள் மடிந்த செய்தியும் ஒரே செய்தித்தாளில் வருவது தேசத்துக்குப் பெருமையா?

ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் குவிவதும் மக்களின் நெருக்கடிக்குக் காரணம்.

சிங்காரச் சென்னை இப்போது செங்கல்பட்டு வரை நீள்கிறது. சில பத்தாண்டுகளுக்கு முன் மயிலாப்பூரிலிருந்து பாரிமுனை செல்வோர் மெட்ராஸ் போறேன் என்று சொல்லும் வழக்கமிருந்தது. வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் பரவலாக்குவதன் மூலம் மக்கள் நெருக்கடியைக் குறைக்கலாம்.

மக்கள்தொகைப் பெருக்கமே இன்று பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கும், நாம் அனுபவிக்கும் வசதிகளுக்கும் காரணம் என்பதை மறந்துவிட முடியாது.
கிராமங்களில் பெரிய அளவிலான கூட்டுக் குடும்ப அமைப்பில், வறுமை இருந்திருக்கலாம். உன்னதமான பண்பாட்டிற்கும், உறவுகளைக் கொண்டாடும் மேன்மைக்கும் அத்தகைய குடும்ப அமைப்பே ஊற்றுக் கண்களாய் இருந்தன.

பெற்றோர்களைப் பாரமாகவும், பிள்ளைகளைத் தொல்லைகளாகவும் பார்க்கும் சுயநலச் சுயம்புகளைத்தான் இன்றைய நுகர்வுக் கலாசாரம் உருவாக்கிக் பெருக்குகிறது.

உயர் வருவாய்ப் பிரிவினர் ஒன்றே பெறுவதும், அறியா ஜனங்கள் அதிகம் பெறுவதும் எதார்த்தமாக உள்ளது. உயர்தட்டினர் தங்களின் ஒரே பிள்ளைக்கு அதிஉயர் நவீன கல்வியைப் புகட்டி, அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவதும், அதிகப் பிள்ளைகள் பெற்ற அடித்தட்டு மக்கள், முறையாக அவர்களை வளர்க்காமல், பிள்ளைகளை சமூகத்தின் தொல்லைகளாய் மாற்றி விடுவதுமான அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இளங் குற்றவாளிகளாய் மாறும் இவர்களை தேசத்தின் ஆக்க சக்திகளாய் ஆக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? இந்தியாவின் பிரச்னையாய்க் கருதப்பட்ட மக்கள்தொகைதான் இன்று பெருமையாக மாறியிருக்கிறது.

உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு நம் நாடுதான்.

வல்லரசு என தம்பட்டம் அடிக்கும் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 31 கோடி, ஜப்பானில் 13 கோடி, உலக வங்கி முதல் ஊடக உலகம் வரை ஆட்டிப் படைக்கும் யூதர்களின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி தான். உலக மக்கள் தொகையில் 17.5 விழுக்காடு இருக்கும் இந்தியர்களின் மனவளம் பெருகி, முழு ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டால், எத்தனையோ சாதனைகள் இங்கு சற்று சாதாரணமாய் நிகழும்.

சீனாவின் ஒரு குழந்தைக் கொள்கையால் விளைந்த பேரபாயங்களில் ஒன்று பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. ஒரே குழந்தைதான் பெறமுடியும் என்பதால் பெரும்பாலோர் கருவிலேயே பாலினத்தை அறிந்து பெண் கருக்கொலை செய்தனர். 2030-இல் சீன இளைஞர்களுக்கு மணப்பெண் கிடைப்பதே பெரும் சவால் என்ற நிலைக்கு இது இட்டுச் சென்றுள்ளது. 

இந்தியாவில் 62.37 கோடி ஆண்களும், 58.65 கோடி பெண்களும் உள்ளதாக மக்கள்தொகைக் கணக்கு சொல்கிறது. இதுவும் ஒரு சமூக அபாயம்தான்.
கருக்கொலை, சிசுக்கொலை, ஆணவக் கொலை ஆகிய மூன்றுவகைக் கொலைகளை இந்தியப் பெண் தாண்டி உயிர் தரிக்க வேண்டியுள்ளது.

சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளில் பெண் குழந்தை பிறந்தால் குலவையிட்டுக் கொண்டாடுகிறார்கள். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று, முறையான கல்வி புகட்டி வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் நெருங்கி இருப்போம் என்ற நபிகளாரின் பொன்மொழிதான் இதற்குக் காரணம். வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் என்று திருக்குர்ஆனில் இறை எச்சரிக்கை இடம் பெறுகிறது. இந்து சமயம், கிறிஸ்தவம் உள்ளிட்ட எந்தச் சமயமும் கரு, சிசுக் கொலைகளை ஏற்கவில்லை.

2.11.2015 தேதியிலான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பிரிவின் அறிக்கையின்படி, உலக மக்கள்தொகை 751 கோடி.
எதிர்வரும் காலங்களில் இத்தொகை மென்மேலும் அதிகரிக்கலாம். அப்போது அதற்கேற்ப அகிலம் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். அதிகமாகக் குழந்தை பெறுவோர்க்கு வரிச் சலுகை, ஊதியத்துடன் கூடிய விடுமுறை ஆகியவற்றை ஃபிரான்ஸ், ஸ்வீடன், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் வழங்குவதாக அறிகிறோம்.
மனித வளம் செயற்கையாக உருவாக்க முடியாதது. உலக விஞ்ஞானிகள் அனைவரும் சேர்ந்தாலும்கூட ஒரு துளி இரத்தத்தை உருவாக்கிவிட முடியாது.
அடிப்படை வசதிகள் அற்றவர்கள் அதிகமாகப் பிள்ளைகளைப் பெறுவதும், அதிகமான வசதிகளைப் பெற்றவர்கள் பிள்ளைகள் பெறுவதைத் தவிர்ப்பதும், ஆரோக்கியமானதன்று...

மக்கள்தொகையை மதவாதக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதும் ஆபத்தானது. அதிகக் குழந்தைகள் பெறாதே என அரசு கூறுவதும், இந்துப் பெண்கள் ஐந்து குழந்தைகள் பெற்றே தீர வேண்டும் என அரசியல் சாமியார்கள் ஆணையிடுவதும் தேவையற்றது.

பாபா சாஹேப் அம்பேத்கர் 14-ஆவது குழந்தை, அண்ணல் காந்தி 4-ஆவது குழந்தை, அப்துல் கலாம் 5-ஆவது குழந்தை... இவர்தம் பெற்றோர் ஒன்றே போதும் என்று இருந்திருந்தால்...

வசதி பெற்றவர்கள் இயன்ற அளவு பெறட்டும். மனித வளத்தாலும், மன வளத்தாலும் இந்தியா ஓங்கட்டும்...

கட்டுரையாளர்:
தமிழ்ப் பேராசிரியர்.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.