Tuesday, November 10, 2015

கடப்பாவில் தொல்பொருள் ஆர்வலர்களால் இடைக்கற்கால ஓவியம் கண்டுபிடிப்பு !

கடப்பா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இடைக்கற்கால பாறை ஓவியம்

கடப்பா மாவட்டத்தில்
கண்டுபிடிக்கப்பட்ட 
இடைக்கற்கால பாறை ஓவியம்


தொல்பொருள் ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராமகிருஷ்ண ரெட்டி மற்றும் லட்சுமி காந்த ரெட்டி ஆகிய இருவரும், கடப்பா மாவட்டத்தில் உள்ள காண்டிகோட்டா என்னும் கோட்டையில் இடைக்கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

அரசு வேலையில் இருக்கும் இருவரும் தொல்பொருள் ஆராய்ச்சி மீது தீராத ஆர்வம் கொண்டவர்கள். ஆந்திரப்பிரதேச மாநில போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிகிறார் ராமகிருஷ்ண ரெட்டி. ஆந்திர பிரதேசம், சித்தாவட்டம் பட்டாலியனில் கான்ஸ்டபிளாக இருக்கிறார் லட்சுமி காந்த ரெட்டி. இவர்கள் இருவரும் காண்டிகோட்டா கோட்டைக்குச் சென்றபோது ஓவியங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

டோங்கலக்கோனா என்று அழைக்கப்படும் பெடக்கோனா என்னும் இடத்தில் இடைக்கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இது அனந்தபத்மனாத கோயிலில் இருந்து பென்னா நதிக்கரைக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கிறது.

மிகப் பெரிய பாறாங்கல் ஒன்றில், சிவப்பு வண்ணத்தில் ஓவியங்கள் வடிவியல் (geometrical) முறையில் வரையப்பட்டிருக்கின்றன. செவ்வகம், முக்கோணம் மற்றும் வட்டங்களில் வரையப்பட்டிருக்கும் இவ்வரிகள், சில விலங்குகளின் சுருக்கப்பட்ட வடிவமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமகிருஷ்ணன் ரெட்டி அளித்த தகவலின்படி, விஜயவாடா கலாச்சார மையத்தின் சிஈஓ மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான சிவனாகி ரெட்டி, ஓவியம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டார். இதில் பாறை ஓவியங்கள் இடைக்கற்காலத்தை (கி.மு. 10,000- 8000) சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

5.0 மீ x 2.00 மீ அளவுள்ள பெரிய பாறையில் அமைந்துள்ள ஓவியங்கள், 1.5 மீட்டரில் இருந்து 2 மீ நீளமும், 0.5 மீ முதல் 6.5 மீ வரையான உயரத்திலும், தடிமனான ஒற்றைத் தூரிகையால், சிவப்பு வண்ணம் கொண்டு வரையப்பட்டிருக்கின்றன.

இதற்கு முன்னால், கர்னூல் மாவட்டத்தின் சிண்டகுண்டா, டப்பாலி மற்றும் கேதாவசம் ஆகிய இடங்களிலும், மஹ்பூநகர் மாவட்டத்தில் பொல்லாரம் என்னும் இடத்திலும் இதே போன்ற இடைக்கற்காலத்தைச் சேர்ந்த சில ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது குறித்துப் பேசிய சிவநாகி ரெட்டி, டிஜிட்டல் பாரம்பரிய இடங்கள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விரைவில் பாறை ஓவியங்களை ஆவணமாக்கும் பணி நடைபெறும்.

இந்த இடங்களின் முக்கியத்துவத்தை சுற்றுலாப் பயணிகளும், ஆய்வாளர்களும் அறிந்துகொள்ளும் வகையில், தகவல் பலகைகளும், குறியாக்கங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும். இது குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழக ஆய்வாளர்களிடம் தெரியப்படுத்தி உள்ளேன் என்று தெரிவித்தார்.

Keywords: கடப்பா, தொல்பொருள், ஆர்வலர்கள், இடைக்கற்கால ஓவியம்

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.