Saturday, November 14, 2015

50% புதிய பிஹார் எம்.எல்.ஏ-க்கள் மீது குற்ற வழக்குகள்


பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் பிஹார் தேர்தலில் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினராக பதவி ஏற்கவிருப்பவர்களில் 50%-க்கும் கூடுதலானவர்களின் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சிலர் மீது கொலை, பாலியல் பலாத்காரம், சாதி வன்முறைகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

243 உறுப்பினர்கள் கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் 142 சட்டப் பேரவை உறுப்பினர்கள். மீது குற்ற வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதில் 98 பேர் மீது கொலை, பாலியல் பலாத்காரம், வன்முறை குறித்த வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இத்தகவலை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதில் இந்தக் கட்சிதான் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய தேவையில்லை, முன்னணிக் கட்சிகளின் சட்டப் பேரவை உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கினர் மீது குற்ற வழக்குகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஐக்கிய ஜனதா தளக் கட்சி சட்டப் பேரவை உறுப்பினரான தாதன் யாதவ் மீது 28 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்பட்டுள்ள புதிய சட்டப் பேரவை உறுப்பினகளில் 70 பேர் மீது நீதிமன்றம் குற்றப்பதிவுகளை மேற்கொண்டுள்ளது.

அதேபோல் புதிய சட்டப் பேரவை உறுப்பினர்களில் ரூ.1 கோடிக்கும் மேல் சொத்துள்ளவர்கள் எண்ணிக்கை மும்மடங் கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. மூன்று உறுப்பினர்களில் ஒருவர் என்ற விகிதத்தில் கோடீஸ்வராக உள்ளனர். 14 புதிய புதிய சட்டப் பேரவை உறுப்பினர்களிடம் ரூ.10 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது.அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.2 கோடி. பணக்காரர்களின் பட்டியலில் மற்ற கட்சிகளைவிடவும் ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினர்கள்தான் முன்னிலை வகிக்கின்றனர். அதிலும் அக்கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினரான பூனம் யாதவ் ரூ.39 கோடியுடன் முதலிடம் பிடித்துள்ளார். ஏற்கெனவே பதவிவகித்து தற்போது மீண்டும் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வானவர்களில் 80%-தினர் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் சொத்தை மும்மடங்காக பெருக்கியுள்ளனர்.

இதில், புதிய அவைக்குள் நுழைபவர்களில் 57% பேர் பட்டதாரிகள். 15 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். குறைந்த எழுத்தறிவு உள்ளவர்கள் 9% மட்டுமே. மொத்தமுள்ள அவை உறுப்பினர்களில் 50%-க்கும் அதிகமானவர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால் பதவி வகிக்கப்போகின்றவர்களில் 10% மட்டுமே பெண்கள்.


தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.