Tuesday, November 17, 2015

அப்துல் கலாமும் ஐந்து சிறுவர்களும் -1

http://chellappatamildiary.blogspot.com/2015/11/blog-post_10.html


அப்துல் கலாமும் ஐந்து சிறுவர்களும் - 1

இராய செல்லப்பா

‘கதைத் திருவிழா’ என்ற பெயரில் ஒருவாரத் திருவிழா நடப்பதாகவும், நான் அதில் கலந்துகொண்டு தங்கள் பள்ளி மாணவர்களுக்குக் கதை சொல்லவேண்டும் என்றும் முன்னாள் அரசியல்வாதி ஒருவரால் நடத்தப்படும் பள்ளியிலிருந்து  அழைப்பு வந்தது. எனது பேரக்குழந்தைகள் படிக்கும் பள்ளி என்பதால் மறுக்கமுடியவில்லை (என்று நான் சொல்லப் போகிறேன்  என்று எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்.) அப்படிப்பட்ட வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். ஏனென்றால், பதவியில் இருந்தவரை, ஆண்டுக்குச் சில பள்ளிகளிலாவது பேசிக்கொண்டும் விவாதங்களில் கலந்துகொண்டும் இருந்தவன் நான். பணி ஓய்வு பெற்றவுடன் நகரத்தின் அந்தப்புரத்திலிருந்து ஒதுக்குப்புறத்திற்குக் குடிபெயர்ந்து விட்டதால், தூரமும் நேரமும் என்னை அவ்வாறான பணிகளில் ஈடுபட முடியாமல் செய்துவிட்டன. எனவே என்னைப் புதுப்பித்துக்கொள்ள இது ஒரு நல்வாய்ப்பாகத் தோன்றியது. ஆகவே ஒப்புக்கொண்டேன்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. பள்ளியின் வரவேற்பறையில் மரியாதையுடன் என்னை அமரவைத்தனர். ‘இன்று ஐந்தாம் வகுப்பிற்குக் கதை சொல்லவேண்டும். ஐந்தாம் வகுப்பில் நான்கு பிரிவுகள் உள்ளன. நான்கையும் ‘கருத்தரங்கக் கூட’த்திற்கு வரவழைப்போம். நீங்கள் அங்கு சென்று கதை சொன்னால் போதும். அதிக பட்சமாக அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று அன்போடு சொன்னார் ஓர் ஆசிரியை. தனியார் பள்ளிகளுக்கே உரிய கட்டுப்பாட்டைப் பின்பற்றி மெருகும் மடிப்பும் கலையாத ஒழுங்குடன் இருந்தது அவரது ஆடை.

பத்து நிமிடங்கள் காத்திருந்த பிறகு, அதேபோன்ற  ஆடை ஒழுங்குடன் வந்த இன்னொரு ஆசிரியை,  ‘மன்னிக்கவேண்டும் ஐயா! இன்று திடீரென்று வேறொரு நிகழ்ச்சியும் நடைபெறுவதால், மாணவர்களை அந்தந்த வகுப்பிலேயே இருக்கவைக்க வேண்டியுள்ளது. எனவே, நீங்கள் ஒவ்வொரு வகுப்பாக வந்து கதை சொல்லவேண்டுகிறோம். ஒவ்வொரு வகுப்பிற்கும் பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம்’ என்று மேலும் அன்புடன் கூறினார்.

இதை நான் எதிர்பார்க்கவில்லை. அரைமணி நேரம் சொல்லத்தக்க இரண்டு கதைகளை நான் மனதிற்குள் வைத்திருந்தேன். மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரையுள்ள மாணவர்களுக்குச் சொல்லவேண்டும் என்று சொல்லப்பட்டிருந்ததால், மேற்படி கதைகளை, மூன்றாம் வகுப்பானால் எப்படிச் சொல்லவேண்டும், ஐந்தாம் வகுப்பானால் எப்படிச் சொல்லவேண்டும், எட்டாம் வகுப்பானால் எப்படிச் சொல்லவேண்டும் என்று மனதிற்குள்ளேயே பலவகையாகப் பாகுபடுத்தி வைத்திருந்தேன். இப்போது என்னடாவென்றால், ஒவ்வொன்றும் பத்து நிமிடங்களே வரும்வகையில் ஏழெட்டுக் கதைகளைச் சொல்லவேண்டுமாமே! எடுத்துக்கொண்ட இரண்டு கதைகளை எப்படியாவது சுருக்கிப் பத்துநிமிடக் கதையாக்கி விடலாம். ஆனால் மேலும் ஐந்தாறு கதைகளுக்கு எங்கே போவது? யோசிக்கவே நேரமில்லையே!

என் கவலையை அந்த ஆசிரியையிடம் தெரிவித்தேன். அவர் சிரித்தார். ‘என்னங்க, கதைகளுக்கா பஞ்சம்? விக்கிரமாதித்தன் கதை, தெனாலிராமன் கதை, ஈசாப்புக் கதைகள், புத்தர் ஜாதகக் கதைகள், மகாபாரதக் கதைகள் என்று உங்களுக்கு எவ்வளவோ தெரிந்திருக்குமே! அதில் ஒன்றிரண்டை எடுத்து விடுங்கள்..’ என்று யோசனை சொன்னார். அப்போதுதான் இன்னொரு தகவலையும் சொன்னார் அவர். இந்தக் ‘கதைத்திருவிழா’ என்பது, தாத்தா- பாட்டிகளைக் கௌரவப்படுத்துவதற்காகவே ஏற்படுத்தினார்களாம். என்னைப்போலவே(!)  இன்னும் பல தாத்தா பாட்டிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்களாம். எனவே நான் விரும்பினால் இன்றைக்குப் பதிலாக நாளைக்கு வரலாம் என்றும், எனக்குப் பதிலாக வேறொரு தாத்தாவோ பாட்டியோ இன்று கதைசொல்ல முன்வருவார்கள் என்றும் தெரிவித்தார். அதாவது, இராவணனைப் பார்த்து இராமன் சொன்னானே, ‘இன்றுபோய் நாளை வா’ என்று, அதுபோல!

அந்த வார்த்தைகள் எனது எழுத்தாள நெஞ்சைக் கூர்வேலாகத் தாக்கின. ‘கான முயலெய்த அம்பினில், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ என்ற குறள் என் முன்னால் வந்து நின்றது. ‘முயற்சி திருவினையாக்கும்’ என்று  வள்ளுவரே  இருட்டானதொரு மரத்தின் பின்னிருந்து கூறுவதுபோல் கேட்டது. ‘வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வாயோ?’ என்று எட்டயபுரத்து மீசைக்காரன் எங்கிருந்தோ உசுப்பினான். அவ்வளவே, நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.

ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று, அங்கேயே ஒரு புதிய கற்பனைக் கதையைத் தொடங்குவது என்ற முடிவுதான் அது. பத்து நிமிடம் வரை எவ்வளவு வருமோ அவ்வளவுதூரம் இழுத்துவிட்டு, ‘அத்துடன் சரி’ என்று முடித்துவிடுவது என்ற முடிவு. யாரும் அடிக்கப் போவதில்லையே! கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன   விக்கிரமாதித்தன் கதை, தெனாலிராமன் கதையைவிட நிச்சயம் சுவாரஸ்யமானதொரு  கதையை என்னால் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் அந்த ஆசிரியையிடம் சொன்னேன்: “வேண்டாம், இன்றே நான் கதை சொல்கிறேன். முதலில் எந்த வகுப்புக்குப் போக வேண்டும்?”

சொன்னார். அந்த வகுப்பிற்குப் போக ஆரம்பித்தேன்.

அப்போது ‘கொஞ்சம் பொறு’ என்ற குரல் கேட்டது. அமரர் அப்துல் கலாம் அவர்கள் சுவரோடு சுவராகச் சாய்ந்தபடி தனக்கே உரிய சிரிப்புடன் ‘வணக்கம்’ என்றார்....

அமரரானவர் எப்படி மீண்டும் வந்தார், இது அவரா, அல்லது முந்தின நாள் நான் பார்த்த பேய்ப்படத்தின் பாதிப்பா என்று தெரியாமல் விழித்தேன். அனுமனைப் பார்த்த அசோகவனத்துச் சீதை மாதிரிக் குழம்பினேன். அவனாவது கணையாழியைக் காட்டித் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டான். இவரிடம் நான் என்ன சான்றைக் கேட்பது?
நன்றி -இணையம்-வழி: கூகுள்
என் கவலையைப் புரிந்துகொண்டவர் போல், கலாம் அவர்கள், ‘என்ன நண்பரே, மங்களூரில் பார்த்தோமே, மறந்துவிட்டதா?’ என்றார். ஆஹா, இதோ காட்டிவிட்டார் கணையாழியை! நம்பத்தான் வேண்டும். மங்களூரில் நான் பணிபுரிந்த வங்கிக்கு வந்து உள்ளூர்ப் பள்ளி மாணவர்கள் முன்னால் அவர்  உரையாற்றியதும், அந்த நிகழ்ச்சிக்கு அணில்போல நானும் உதவியதும் நினைவுக்கு வந்தது. ஆம், இவர் அப்துல் கலாமே தான்! ஐயமில்லை.

மீண்டும் சிரித்தார் கலாம். யாருடைய கவனத்தையும் நொடியில்  ஈர்க்கும் மாயச் சிரிப்பு. ‘உங்களுக்குக் கதை வேண்டும் அல்லவா, நான் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லத் தொடங்கினார்....

0 comments:

Post a Comment

Kindly post a comment.